For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பேயியை கதி கலங்கச் செய்த ஜெயலலிதா: ஒரே வாக்கில் அரசை வீழ்த்திய பழைய வரலாறு

By BBC News தமிழ்
|
வாஜ்பாயி
BBC
வாஜ்பாயி

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே. சசிகலா கர்நாடகாவில் இருந்து சென்னை வருவதையொட்டி, பலவிதமான அரசியல் எதிர்பார்ப்புகளும் ஹேஸ்யங்களும் களைகட்டத் தொடங்கியிருக்கின்றன. அடுத்து தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக கட்சியில் என்ன நடக்கும் என்பது புதிராகவே இருக்கிறது.

இத்தகைய சூழலில், ஒரு அரசை வீழ்த்த ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் தனக்கு இருந்த எண்ணிக்கை பலத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை இந்த வரலாற்றுப் பின்னூட்டம் நினைவுகூர்கிறது.

அது 1999ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 - அன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு வெயிலுக்குக் குளிர்ச்சியாக தர்பூசணி சாறு அருந்தியவாறே, ஓம்பிரகாஷ் சௌதாலா, தேசிய நலனுக்காக வாஜ்பேயி அரசாங்கத்தை ஆதரிப்பதாக அறிவித்தார், இந்த அறிவிப்பு, அரசின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.

ஏமாற்றத்தை சந்தித்திருந்த அரசுக்கு இது நிச்சயம் மகிழ்ச்சி அளித்திருக்கும். ஆனால், மக்களவை செகரட்டரி ஜெனரல் எஸ்.கோபாலனிடமிருந்து அப்போது ஒரு சீட்டு வந்தது. அதில் எழுதியிருந்ததைத் தட்டச்சு செய்ய அவர் அதை அனுப்பியிருந்தார்.

தட்டச்சு செய்யப்பட்ட காகிதத்தில் மக்களவை சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகி அளித்த தீர்ப்பு இருந்தது. அதில் காங்கிரஸ் எம்.பி கிரிதர் கோமாங் தனது விருப்பப்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, கோமாங் பிப்ரவரியிலேயெ ஒடிசாவின் முதல்வராகப் பதவியேற்றிருந்தார். ஆனால் அப்போது வரை அவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கவில்லை.

Click here to see the BBC interactive

'சிப்புப் பொத்தானை அழுத்தவும்'

1999ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி, இந்தியா டுடே இதழில் மூத்த பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா, "அன்று இரவு யாரும் தூங்கவில்லை. அரசாங்கத்திடமிருந்தும், பாஜக தரப்பிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினரான ரங்கராஜன் குமாரமங்கலம் மூலமாக முன்னரே முடிவெடுக்கப்பட்டது போல் நடந்து கொண்டால், மாயாவதியை மாலைக்குள் உத்தர பிரதேசத்தின் முதல்வராக்குவதாகக் கூட செய்தி அனுப்பப்பட்டது. அவரது முகாமில் ஏற்பட்டிருந்த சலசலப்பை அடுத்து, எதிர்கட்சித் தலைவர் சரத் பவார் அவரைச் சந்தித்தார். மாயாவதி அவரிடம், தாம் அரசை எதிர்த்து வாக்களித்தால் அரசு கவிழ்ந்து விடுமா என்று கேட்க, அதற்கு பவார் "ஆம்" என்று கூற, வாக்கெடுப்பின்போது, மாயாவதி, தனது உறுப்பினர்களிடம் 'சிவப்பு பொத்தானை அழுத்தவும்' என்று கட்டளையிட்டார்," என்று குறிப்பிட்டிருந்தார்.

மின்னணுத் திரையை ஆவலுடன் பார்த்த அனைவரும் அதிர்ந்து போயினர். வாஜ்பேயி அரசாங்கத்திற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிர்கட்சியில் 270 வாக்குகளும் பதிவாகி இருந்தன.

புத்தகம்
BBC
புத்தகம்

எட்டா கனியான தேனிலவு காலம்

ஒரு பிரதமராக, வாஜ்பேயிக்கு அப்போது தேனிலவுக் காலம் என்பது கிடைக்காமலேயே போனது.

அண்மையில் வெளியான 'வாஜ்பேயி - தி இயர்ஸ் தட் சேன்ஞ்ட் இந்தியா' (The years that changed India) என்ற வாஜ்பேயி பற்றிய ஷக்தி சின்ஹாவின் நூலில், "அரசை அமைப்பதே பெரிய சவாலாக இருந்தது. அமைந்த பிறகும், முதல் நாளிலிருந்தே அமைச்சகங்கள் குறித்து கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. ஒரு வாரத்திற்குள், இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இது பெருமளவில் மனக்கசப்பை ஏற்படுத்தியது." என்று எழுதியுள்ளார்.

"ஜெயலலிதா முதல் நாளில் இருந்தே கண்ணில் விரலை விட்டு ஆட்டினார். ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட மற்ற அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று அவர் கூறினார். பின்னர் அவைத்தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல்கள். அது குறித்து நிறைய குழப்பங்கள் இருந்தன. விவாதத்தில் கண்ணியமற்ற சொற்கள் கையாளப்பட்டன"

"அமெரிக்காவில் கூட புதிய அதிபர் பதவியேற்றால் அவருக்கு 100 நாள் சலுகை காலம் வழங்கப்படுகிறது. ஓரிரண்டு மாதங்கள், புதிய அரசு குறித்த ஒருவித மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். மக்களும் அதிகம் அரசின் செயல்பாடுகளை அந்த காலகட்டத்தில் விமரிசிப்பதில்லை. இந்த நிலை வாஜ்பேயிக்குக் கைகூடவே இல்லை."

ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்க வாஜ்பேயி மறுப்பு

தன் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி அரசு கலைக்கப்படவேண்டும் என்றும் ஜெயலலிதா விரும்பினார். இது தவிர, சுப்பிரமணியன் சுவாமியை நிதி அமைச்சராக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். இதற்கு வாஜ்பேயி தயாராக இல்லை.

வாஜ்பாயி மற்றும் ஜெயலலிதா
BBC
வாஜ்பாயி மற்றும் ஜெயலலிதா

ஷக்தி சின்ஹா தனது நூலில், 'ஜெயலலிதா தனக்கு எதிரான வழக்குகளில் அரசு உதவ வேண்டும் என்று விரும்பினார். அரசாங்கமும் அவர்களுக்கு முடிந்த வரை சட்டப்பூர்வமாக உதவியது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பொது நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் உச்ச நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது. வாஜ்பேயி சுவாமிக்கு நிதி அமைச்சகத்தை வழங்கவில்லை என்றால், குறைந்தபட்சம் வருவாய்த்துறை இணையமைச்சராவது நிதி அமைச்சகத்தின் கீழ் பணியாற்றக்கூடாது என்றும் அவர் விரும்பினார்." என்று குறிப்பிடுகிறார்.

அந்த காலகட்டத்தில், அவுட்லுக்கின் ஆசிரியர் வினோத் மேத்தா வாஜ்பேயின் இல்லத்தில் அவரைச் சந்திக்கச் சென்றார். மேத்தா தனது சுயசரிதையான(Editor unplugged - media, magnates, netas and me) 'எடிட்டர் அன் பிளக்ட் மீடியா, மேக்னட்ஸ் நேத்தாஸ் அண்ட் மீ' -ல் , "நான் அவரைப் பார்த்தபோது, அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாகத் தோன்றியது. அவர் மிகவும் அமைதியாக இருந்தார். நான் தாளாமல் கேட்டு விட்டேன், என்ன கவலை என்று. சிரிப்பை அடக்கியபடியே, 'உங்களுக்குப் பிறகு ஜெயலலிதாவை சந்திக்க உள்ளேன்' என்று வாஜ்பேயி பதிலளித்தார்," என்று எழுதுகிறார்.

ஏப்ரல் 6ஆம் தேதி, ஜெயலலிதாவின் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் ராஜிநாமா கடிதங்களை வாஜ்பேயிக்கு அனுப்பினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் அந்த ராஜினாமாவை குடியரசு தலைவருக்கு அனுப்பினார். அடுத்த நாள் அதிமுக, தனது உறுப்பினர்களை ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.

சில நாட்களுக்குப் பிறகு ஜெயலலிதா டெல்லிக்கு வந்து ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அவருடன் 48 சூட்கேஸ்களில் அவரது பொருட்களும் வந்தன. அடுத்த சில நாட்களுக்கு டெல்லியில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. ஏப்ரல் 11 அன்று காலை 11 மணிக்கு குடியரசு தலைவரைச் சந்தித்து வாஜ்பேயி அரசாங்கத்திற்கான தனது ஆதரவை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை வழங்கினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு: அறிவுறுத்திய கே.ஆர். நாராயணன்

அடுத்த நாள், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவிருந்த போதிலும், குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் வாஜ்பேயிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கேட்டுக் கொண்டார். தனது பார்வையில் இது தேவையற்ற முடிவு என்று ஷக்தி சின்ஹா கூறுகிறார்.

'நாடாளுமன்ற அமர்வு நடந்து கொண்டிருப்பதால், வாஜ்பேயி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவருவது சரியான வழி அல்லது இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி மசோதாவைத் தோற்கடிப்பதன் மூலம் அரசாங்கத்தை தோற்கடித்திருக்க முடியும். வாஜ்பேயின் எதிர்ப்பாளர்கள் 1990 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளின் உதாரணங்களை முன்வைத்தனர், ஆனால் இரு நேரங்களிலும் நாடாளுமன்றத்தின் அமர்வு அடுத்த நாளைக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. வாஜ்பேயிக்கு மாற்றாக ஒருவர் குறித்த ஒருமித்த கருத்து எதிர்க் கட்சிகளிடையே இல்லாததால், அவர்கள் இதை முன்னெடுக்கவில்லை. மேலும் எந்தவொரு காரணத்தினாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தால், விதிகளின்படி, அடுத்த ஆறு மாதங்களுக்கு மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடியாது.

சபாநாயகர் வழங்கிய சலுகை

கிரிதர் கோமாங்கின் வாக்களிப்பைப் பொருத்தவரை, மக்களவை சபாநாயகர் பாலயோகி, மக்களவை பொதுச்செயலாளர் எஸ்.கோபாலனின் ஆலோசனையின் பேரில் கோமாங்கின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார். அவரது மனசாட்சி தனது கட்சியின் உத்தரவைப் பின்பற்றி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களிக்கச் சொன்னது.

பின்னர், மக்களவை சபாநாயகரின் முடிவு பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் விமர்சனத்துக்கும் உள்ளானது. மேலும் சிலர் அரசியல் அளவீடுகளின் அடிப்படையில் கோபாலனின் ஆலோசனையை எடைபோட்டனர், கோபாலன், முன்னாள் மக்களவை சபாநாயகர் பூர்னோ சங்மாவால் நியமிக்கப்பட்டவர் என்றும் விமர்சித்தனர்.

வாஜ்பேயி அரசாங்கத்தைக் கவிழ்த்த கிரிதர் கோமாங் பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் என்பதுதான் சுவாரஸ்யமான நிகழ்வு. அவை நிர்வாகத்திலும் அரசுக்குப் பின்னடைவே ஏற்பட்டது. அருணாச்சல பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஜனவரி மாதம் கட்சி பிரிந்த பின்னர் முன்னாள் முதல்வர் கெகாங் அப்பாங்கிற்கு எதிராக திரும்பியிருந்தார். அவரது கட்சியில் பிளவு ஏற்பட்டது.

ஆனால், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு யாரும் அவரிடம் கோராததால், அவர் அரசுக்கு எதிராக வாக்களித்தார். ராஜ் குமாரின் இருப்பு குறித்து பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாக ஷக்தி சின்ஹா கூறுகிறார்.

கொறடா உத்தரவை மீறிய சைஃபுதின் ஸோஸ்

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, தனது மகன் ஒமர் அப்துல்லாவை முன்னிறுத்தி, பாரமுல்லாவைச் சேர்ந்த மூத்த பாராளுமன்ற உறுப்பினர் சைஃபுதின் ஸோஸை வெகுவாகப் புறக்கணித்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு சவுதி அரேபியாவுக்கு ஹஜ் தூதுக்குழுவை அனுப்புகிறது. இதற்கு சோஸ் சிலரைப் பரிந்துரைத்தார், ஆனால் ஃபரூக் அப்துல்லா அதைப் பற்றி அறிந்ததும், அவர் பரிந்துரைத்த பெயர்களை நீக்கினார். இதற்குப் பழி தீர்க்கும் வண்ணமாக, ஸோஸ், வாஜ்பேயி அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தார். முன்னாள் பிரதமர் இந்தர் குமார் குஜ்ரால் அகாலிகளின் ஆதரவுடன் மக்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்டார். ஆனால் அகாலிகள் அங்கம் வகிக்கும் அரசுக்கு எதிராகவே அவரும் வாக்களித்தார்.

விவாதத்தின் இரண்டாவது நாளில், வாஜ்பேயி கான்ஷி ராமுடன் தொலைபேசியில் பேசினார். அவர் டெல்லியில் இருந்து வெளியே பயணம் செய்து கொண்டிருப்பதாகவும் தனது கட்சி, அரசை ஆதரிக்க முடியாது என்றும் ஆனால் எதிராக வாக்களிக்காது என்றும் கூறினார்.

இந்த நிகழ்வு குறித்த முழு விவரங்களையும் அளிக்கும் ஸ்வபன் தாஸ் குப்தா மற்றும் சுமித் மித்ரா ஆகியோர் 1999 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி இந்தியா டுடேயில் வெளியிடப்பட்ட 'தி இன்சைட் ஸ்டோரி - இஸ் இந்தியா ஹெடிங் ஃபார் எ டூ பார்டி சிஸ்டம்?' என்ற கட்டுரையில், "வாக்கெடுப்புக்கு முந்தைய நாள் கான்ஷிராம் பாட்னாவில் இருந்தார். நள்ளிரவுக்கு முன் அர்ஜுன் சிங், கான்ஷி ராமைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

கான்ஷி ராமை டெல்லிக்கு வர ஒப்புக்கொள்ளவைத்தார். கமல் நாத்தின் ஸ்பான் ரிசார்ட் விமானம் அவரை அழைத்து வரத் தயாராக இருந்தது. ஆனால் காலை 9.40 மணிக்கு டெல்லியை அடையும் அலையன்ஸ் ஏர்லைன்ஸின் நிர்ணயிக்கப்பட்ட விமானம் மூலம் டெல்லிக்கு வருவேன் என்று கான்ஷி ராம் கூறினார். அர்ஜுன் சிங்கின் கவலை என்னவென்றால், அரசாங்கத்திற்கு இது தெரியவந்தால், அது விமானத்தை தாமதப்படுத்தும். எனவே, ரப்ரி தேவி அரசாங்கத்தின் விமானங்களும் காத்திருப்புக்காகத் தயாராக வைக்கப்பட்டன.

பின்னிரவில், பகுஜன் சமாஜ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆரிப் முகமது கான் மற்றும் அக்பர் டம்பி ஆகியோர் மாயாவதியை அழைத்து, கட்சி, பாஜக அரசைக் காப்பாற்றினால், தங்களது முஸ்லிம் வாக்காளர்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று கூறினார். மாயாவதி இரவு இரண்டு மணியளவில் டம்பி மற்றும் ஆரிஃப்பை அழைத்து வாக்களிக்கும் போது இந்த கருத்தைக் கவனத்தில் கொள்வதாகக் கூறினார். அவர்கள் இருவரும் 9 மணிக்கு தங்கள் வீட்டை அடைகிறார்கள். இதற்கிடையில், சோனியா காந்தியும் மாயாவதியை அழைத்தார், அப்போது வாஜ்பாய் அரசாங்கத்தை கவிழ்க்க ஒரு திட்டம் தயாராகிவிட்டது. " என்று எழுதியுள்ளார்.

கண்ணீர் வடித்த வாஜ்பேயி

அதுநாள்வரை "வருங்காலப் பிரதமர்" என்று பல நாட்கள் வாஜ்பேயி பேசப்பட்டு வந்ததாக ஷக்தி சின்ஹா கூறுகிறார்.

"மிகுந்த சிரமங்களுக்கிடையில் பிரதமரான அவரால், பதிமூன்று மாதங்களுக்கு மேல் நிலைக்க முடியவில்லை. அதைவிடக் கொடுமை ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அரசை இழந்தது. இதனால், வாஜ்பேயி நிச்சயமாக அதிர்ச்சியடைந்தார். வாக்கெடுப்புக்குப் பின்னர் வாஜ்பேயி தனது அறைக்குத் திரும்பியபோது, அவர் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். அவர் கண்களில் கண்ணீர் தளும்பியது. அதிர்ச்சியின் தாக்கம் அவர் முகத்தில் தெரிந்தது. ஆனால் சில நிமிடங்களுக்குள் அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார், அவர் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அளிக்கப் புறப்பட்டார்."

ஏப்ரல் 21 அன்று சோனியா காந்தி குடியரசு தலைவர் நாராயணனை சந்தித்து தனக்கு 272 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினார். அதே நேரத்தில், முலாயம் சிங் யாதவ் மீண்டும் ஜோதி பாசுவைப் பிரதமராக்கும் திட்டத்தை முன்வைத்தார்.

1996 போலின்றி, இந்த முறை சிபிஎம் கட்சியும் இதற்குத் தயாராக இருப்பதாகத் தோன்றியது, ஆனால் இந்த முறை வேறு எந்தக் கட்சிக்கும் தலைமை வழங்க காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை. முலாயம் சிங் காங்கிரஸை ஆதரிக்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

சோனியாவின் ஆசையை நிராசையாக்கிய முலாயம் சிங்

இந்த முடிவில் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்திருந்தார்.

எல்.கே. அத்வானி தனது 'மை கன்ட்ரி, மை லைஃப்' என்ற புத்தகத்தில் இது குறித்த விவரங்களை அளிக்கிறார். அதில் அவர், 'ஏப்ரல் 21 அல்லது 22 தேதிகளில் ஜார்ஜ் பெர்னாண்டஸிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர், லால்ஜி, உங்களுக்காக என்னிடம் ஒரு நல்ல செய்தி இருக்கிறது. சோனியா காந்தி அடுத்த அரசை அமைக்க முடியாது. ஒரு பெரிய எதிர்கட்சித் தலைவர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். ஆனால் இந்தச் சந்திப்பை உங்கள் வீட்டிலோ அல்லது என் வீட்டிலோ நடத்த முடியாது. " என்று எழுதியிருந்தார். " என்று குறிப்பிடுகிறார்.

"இந்தச் சந்திப்பு ஜெயா ஜெட்லியின் சுஜன் சிங் பார்க் வீட்டில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. நான் ஜெயா ஜெட்லியின் வீட்டை அடைந்தபோது, முலாயம் சிங் யாதவ் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் அமர்ந்திருப்பதைக் கண்டேன். சோனியா காந்தியின் பிரதமராகும் முயற்சியை அவரது 20 எம்.பி.க்கள் எந்த சூழ்நிலையிலும் ஆதரிக்க மாட்டார்கள் என்று தன் நண்பர் வாக்களித்திருப்பதாக பெர்னாண்டஸ் என்னிடம் சொன்னார். முலாயம் சிங் யாதவும் இதை என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையையும் அவர் வைத்தார். சோனியா காந்திக்குத் தங்கள் கட்சி ஆதரவளிக்காது என்று அறிவித்த பின், மீண்டும் பாஜக அரசமைக்கக் கோரக்கூடாது என்றும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் கூறினார்" என்று அத்வானி எழுதுகிறார்.

மக்களவை கலைப்பு

அதற்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளும் இடைக்கால தேர்தலையே எதிர்கொள்ள முடிவு செய்தன. குடியரசுத் தலைவர் நாராயணன் வாஜ்பாயை குடியரசு தலைவர் மாளிகைக்கு அழைத்து மக்களவையை கலைக்கப் பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தினார்.

கடைசியில் மக்களவையை கலைக்க மத்திய அமைச்சரவை பரிந்துரைத்தது, ஆனால் குடியரசு தலைவர் நாராயணனின் ஆலோசனையின் பேரில் இதைச் செய்வதாகவும் பரிந்துரையில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. இதில் குடியரசுத் தலைவருக்கு அதிருப்தி இருப்பதாகத் தோன்றினாலும் குடியரசு தலைவர் இதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று வாஜ்பேயி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

BBC Indian sports woman of the year
BBC
BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Jayalalithaa who upset Vajpayee: The old history of overthrowing the government by one vote
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X