
மகா: எத்தனை நாள்தான் அஸ்ஸாமில் பதுங்கி கிடப்பீங்க.. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சிவசேனா மிரட்டல்
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனா உட்கட்சி மோதல் உக்கிரமடைந்துள்ளது. பால்தாக்கரேவின் பெயரை சிவசேனா அதிருப்தியாளர்கள் பயன்படுத்த கூடாது; எத்தனை நாட்கள்தான் அஸ்ஸாமில் பதுங்கி இருப்பீர்கள் எனவும் அக்கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் அசைக்க முடியாத தனிப்பெரும் செல்வாக்குடன் அரைநூற்றாண்டு காலம் கோலோச்சி வருகிறது சிவசேனா. 2019 தேர்தலில் சிவசேனா, காலந்தோறும் எதிர்த்து வந்த காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. சிவசேனாவின் நிறுவனர் பால்தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே முதல்வரானார். பால்தாக்கரேவின் பேரனும் உத்தவ் தாக்கரே மகனுமாகிய ஆதித்யா தாக்கரே அமைச்சரானார்.

ஆட்சி கவிழ்ப்பு
கால் நூற்றாண்டு காலம் தங்களுடன் கூட்டணியாக வலம் வந்த சிவசேனா, உறவை முறித்துக் கொண்டு எதிரி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்ததை பாஜகவால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பாஜக எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட்டதும் கிடையாது.

சிவசேனாவில் கலகம்
இம்முறை பாஜகவின் இரண்டரை ஆண்டுகால காத்திருப்பு வியூகம் நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. சிவசேனாவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களை போர்க்கொடி தூக்க வைத்துவிட்டது. மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இதனால் பால்தாக்கரே கட்டி வளர்த்த சிவசேனா கட்சி, அவரது குடும்பத்தின் பிடியில் இருந்து கை நழுவிப் போகும் நிலைமை உருவாகி உள்ளது. உத்தவ் தாக்கரேவின் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸுடனான தேனிலவு, ஆதித்யா தாக்கரேவுக்கான முன்னுரிமை போன்ற காரணங்களை முன்வைத்தே ஏக்நாத் ஷிண்டே கோஷ்டி கலகம் செய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அரசியல் ரீதியாக பதிலடி கொடுத்து வந்த சிவசேனா இப்போது தனது இன்னொரு முகத்தை அதிருப்தியாளர்களுக்கு எதிராக காட்டி வருகிறது.

சிவசேனாவின் மிரட்டல்
சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிராவுக்கு திரும்ப முடியாத அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேரின் பதவியை பறிக்கும் நடவடிக்கையை சிவசேனா மேற்கொண்டுவிட்டது. சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அலுவலகங்கள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டு வருகின்றன. இதன் உச்சமாக, இன்னும் நீங்க எத்தனை நாட்கள் குவஹாத்தியில் பதுங்கி இருப்பீங்க பார்ப்போம் என சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அதிருப்தியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பி இருப்பது அக்கட்சி தொண்டர்களை தூண்டிவிட்டிருக்கிறது.

அஸ்ஸாமில் ஆலோசனை
இந்நிலையில் மும்பையில் ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேபோல் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி தலைவர்களும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.