
இவ்வளவு லட்சமா! பெரிய சொகுசு விடுதியில் மகாராஷ்டிரா எம்எல்ஏ-க்கள்.. ஒருநாள் எவ்வளவு செலவு தெரியுமா?
கவுகாத்தி: அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா கட்சி அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்காக நட்சத்திர விடுதி செய்யப்பட்டு வரும் செலவுகள் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் கூவத்தூர் ரிசார்ட் எந்த அளவுக்கு பிரபலமாகியதோ, அதேபோல் இப்போது அசாமில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டல் புகழ்பெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. ஆனால் திடீரென சிவசேனா கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஏராளமானோர், அசாமில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் போலீஸ் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நட்சத்திர ஹோட்டலில் செய்யப்பட்டுள்ள கட்டண விபரங்கள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் முகாமிட்ட எம்எல்ஏ-க்கள்
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே 42 எம்எல்ஏ-க்களுடன் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். சட்டசபையில் சிவசேனாவுக்கு மொத்தம் 55 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அனைவரும் முதலில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் முகாமிட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.

உத்தவ் தாக்கரே அறிவிப்பு
இதனையடுத்து பொதுமக்களிடம் பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தயார். என்னுடைய ராஜினாமா கடிதம் ரெடியாகவே இருக்கிறது என்று அறிவித்தார். தொடர்ந்து முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து உத்தவ் தாக்கரே பெட்டி படுக்கையுடன் வெளியேறினார். இருந்தும் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது.

ஏக்நாத் அணிக்கு ஆதரவு
இதனிடையே அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ள சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே அணியில் அதிருப்தி எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முதலில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதரவளிப்பதாக அவர் கூறிய நிலையில், இப்போது 40 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 9 சுயேட்சை எம்எல்ஏ-க்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படும் நிலையில், விரைவில் பாஜக உடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்வார் என்று கூறப்படுகிறது.

ஹோட்டல் செலவு
இந்தநிலையில் அசாம் மாநிலத்தின் ஐந்து நட்சத்திர ரேடிசன் ப்ளூ விடுதியில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த விடுதியில் உள்ள 70 ரூம்களையும், ஒரு வாரத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருநாளுக்கு ரூ.8 லட்சம் செலவில் ரூ.56 லட்சத்திற்கு விடுதி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விடுதியில் 5 வகையான உணவகங்கள், நீச்சல் குளம், முடிதிருத்தும் நிலையங்கள் ஆகியவை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு ரூ.1.12 கோடி செலவில் விடுதிக்கு செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு
இதுகுறித்து பேசிய அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா ஷர்மா, தான் யாரையும் அசாம் மாநிலத்திற்கு வர வேண்டும் என்று கூற மாட்டேன். யார் வந்தாலும் நிச்சயம் வரவேற்பேன். ஜனநாயக நாட்டில் யாரும் இங்கு வருவதை தடுக்க முடியாது. உத்தவ் தாக்கரேவும் விடுமுறைக்கு அசாம் மாநிலம் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.