பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி! கதவு திறந்திருக்கு.. வாங்க வாங்க.. கோவாவில் காங்கிரஸ் அழைப்பு
பனாஜி: ‛‛கோவாவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகள் எங்களுடன் இணையலாம்'' என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.
கோவாவில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 14ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 332 வேட்பாளர்கள் களத்தில் நின்ற நிலையில் மொத்தம் 79.61 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்த ஓட்டுக்கள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முகமெல்லாம் புன்னகை.. கையில் 2 ஆயிரம்.. வேலம்மாள் பாட்டி ஞாபகம் இருக்கா.. நேரில் சந்தித்த முதல்வர் !
இந்த தேர்தலில் மாநிலத்தை ஆளும் பாஜக தனித்து களம் இறங்கியது. எதிர்கட்சியான காங்கிரஸ், கோவா பார்வர்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதுதவிர அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி தனித்தும், மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியுடன்(எம்ஜிபி) கூட்டணி அமைத்து மேற்கு வங்க முதல்வரின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தேர்தலை சந்தித்தது.

தொங்கு சட்டசபை
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ், பாஜக உள்பட எந்த கட்சியினருக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும், தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதனால் ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி, சுயேச்சைகள் கிங்மேக்கராக இருக்கலாம் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

கூட்டணிக்கு வரலாம்
கோவா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜகவுக்கு எதிரான கொள்கை உடைய கட்சிகள் எங்களுடன் இணைந்து ஆதரவளிக்கலாம். இத்தகைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பலமுறை தவறானதாக இருந்துள்ளது. எங்களது கணிப்பு மற்றும் தேர்தல் பணியை நாங்கள் நன்றாக செய்துள்ளோம். இதனால் காங்கிரஸ்-கோவா பார்வர்டு கட்சி கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் கோவாவில் ஆட்சி அமைக்கும்.

தவறை தவிர்ப்போம்
2017 ல் காங்கிரஸ் தான் ஆட்சியை அமைத்திருக்க வேண்டும். முடிவு மேற்கொள்வதில் தவறு நடந்துவிட்டது. இதை இந்த ஆண்டு தவிர்ப்போம். இதனால் கவனமாக செயல்பட்டு வருகிறோம். எங்களின் அனைத்து வேட்பாளர்களிடம் பேசி உள்ளோம். விரைவாக முடிவுகள் எடுக்க உள்ளோம்'' என்றார்.

ரெசார்ட் ரெடி
இதற்கிடையே கோவாவில் தொங்கு சட்டசபை உருவானால் பாஜக சார்பில் தங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் பாஜக பேசலாம் என காங்கிரஸ் அஞ்சுகிறது. இதனால் முன்கூட்டியே காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் ரெசார்ட்டில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜகவும் வியூகம்
இதற்கிடையே கோவாவில் ஆட்சியை பிடிக்க பாஜகவும் வியூகம் வகுத்து வருகிறது. அதன்படி மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியுடன்(எம்ஜிபி) பாஜக பேசி வருகிறது. இந்த கட்சி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.