For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல் வழக்குகளில் கருணையே காட்டக் கூடாது: ஜெ. வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் சு.சுவாமி வாதம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: உயர் பதவி வகிக்கும் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு போன்ற ஊழல் வழக்குகளில் நீதிமன்றம் எந்த ஒரு கருணையுமே காட்டவே கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி வாதாடினார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்க்கும் கர்நாடகா மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோரது மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நேற்று 9-வது நாளாக விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இவ்வழக்கின் முதல் புகார்தாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமி 1 மணி நேரம் வாதாட நீதிபதிகள் அனுமதித்தனர்.

கருணை கூடாது

கருணை கூடாது

அப்போது சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்த வாதம்:

உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடுவது ஜனநாயக நடைமுறையை புற்றுநோயாக பாதிக்கும். நம் நாட்டின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் இது பெரும் அச்சுறுத்தலாகும்.

ஆகையால் உயர் பதவி வகிக்கும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகளில் நிச்சயம் கருணையே காட்டக் கூடாது. கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) இப்படி கருணைகாட்டிதான் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்துள்ளது.

கணக்கு பிழை

கணக்கு பிழை

பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி (நீதிபதி குன்ஹா) ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள்தான் என்பதை உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தார். இந்த மேல்முறையீட்டு விசாரணையில் முக்கியமானதே கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) ஜெயலலிதாவின் சொத்துகளையும் வருமானத்தையும் சரியாக மதிப்பீடு செய்துள்ளதா? என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்பதுதான்.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கணக்குப் பிழைகளால்தான் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா அரசு தரப்போ நானோ தாக்கல் செய்த ஆட்சேபனைகள் எதனையுமே கர்நாடகா உயர்நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை.

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டபோது நான் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கணக்குப் பிழைகளால் ஏற்பட்ட மிகப்பெரிய துயரம் என குறிப்பிட்டிருந்தேன்.

தொடரும் ஜெ. சொத்து குவிப்பு

தொடரும் ஜெ. சொத்து குவிப்பு

ஜெயலலிதாவின் சொத்து சேர்ப்பது என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2011 சட்டசபை தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 51.40 கோடி சொத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவியை இழந்த அவர் கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்த பின் 2015-ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தமக்கு ரூ 117.13 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதியை பிறழச் செய்வது...

நீதியை பிறழச் செய்வது...

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட பிறகே அவை தாக்கல் செய்யப்பட்டன. கர்நாடகா உயர்நீதிமன்றம், அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவை வாதாட அனுமதி அளிக்கவில்லை. அவருக்கு அளிக்கப்பட்டது ஒரு நாள் மட்டுமே. அவர் 1,000 பக்கங்களில் வாதங்களை தாக்கல் செய்தார். இப்படி அவசரப்படுத்தியதால்தான் கணக்குகளில் பல பிழைகள் ஏற்பட்டன.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முதல்வர் பதவியில் உள்ள ஒருவர் மேல்முறையீடு செய்கிறார். அவரிடமே உள்துறை இலாகாவும் உள்ளது. அந்த மாநிலத்தின் போலீஸ் அரசுத்தரப்பாக ஆஜரானது. இது நீதியை பிறழச் செய்யும் செயலாகும்.

ஹைகோர்ட் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்

ஹைகோர்ட் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள கணக்கு குளறுபடிகள் பற்றி பி.வி.ஆச்சார்யா முன்வைத்த வாதங்களில் உள்ள கருத்துகளுடன் முழுமையாக உடன்படுகிறேன்.

ஏற்கனவே இந்த வழக்கில் எனது வாதங்களில் உள்ள முக்கியமான அம்சங்களை தனியாக எழுத்து வடிவில் நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்திருக்கிறேன். அனைத்தையும் பரிசீலனை செய்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து இந்த வழக்கில் நீதி கிடைக்க வகைசெய்ய வேண்டும்.

English summary
Senior BJP leader and the original complainant in the Jayalalithaa disproportionate assets case made some interesting points during his hour long submission in the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X