'உங்கள் பிரச்னையை சரி செய்யும் வரை சம்பளமே வேண்டாம்..' கலெக்டரின் மாஸ் உத்தரவு.. எந்த ஊரில் தெரியுமா
ஜபல்பூர்: முதலமைச்சரின் ஹெல்ப்லைனில் நிலுவையில் உள்ள மக்கள் புகார்களுக்குத் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டதால் மத்தியப் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவர் வினோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பொதுவாக மக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடமே மனு கொடுப்பார்கள். அப்படிக் கொடுக்கும் மனுக்கள் மீது சில சமயங்களில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 6 இடங்களில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு- 5 பேர் பலி
ஆனால், பல சமயங்களில் அது கிணற்றில் போட்ட கல்லைப் போல அப்படியே இருக்கும். கலெக்டர் ஆபிசுக்கு பல முறை நடந்தே பிரச்சினைகளை சாமானியர்கள் தீர்க்க வேண்டியதாக இருக்கும்.

சொந்த சம்பளம்
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதாவது மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை என்பதால் கலெக்டர் அவரது சம்பளத்தையே அவரே நிறுத்தி வைத்துள்ளார். முதலமைச்சரின் ஹெல்ப்லைனில் நிலுவையில் உள்ள மக்களின் ஏராளமான புகார்களுக்குத் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்த மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர், டிசம்பர் மாதத்திற்கான தனது சொந்த சம்பளம் மற்றும் சில அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கருவூல அதிகாரி
இது தொடர்பாகக் கடந்த திங்கள்கிழமை வெளியான செய்திக்குறிப்பில், தனது சம்பளம் மற்றும் சில அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட கருவூல அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் கரம்வீர் சர்மா உத்தரவிட்டார். அதாவது எந்த அதிகாரி 100 நாட்களுக்கு மேல் ஆகியும் புகார்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லையோ அந்த அதிகாரிகளின் சம்பளத்தையும் நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய உத்தரவு
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த திங்கள்கிழமை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, முதலமைச்சரின் ஹெல்ப்லைனில் நிலுவையில் உள்ள புகார்களை துறை வாரியாக ஆய்வு செய்யும் போது கலெக்டர் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவும், புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார். ஒரு புகார் கூட கவனிக்கப்படாமல் இருந்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்" என்று தெரிவித்தார்.

சம்பளம் இல்லை
தூய்மை மற்றும் ஹெல்ப்லைன் தொடர்பான விஷயங்களைக் கையாள்வதில் அலட்சியமாக இருந்ததற்காகத் துணை நகராட்சி ஆணையர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்க கலெக்டர் அறிவுறுத்தினார். அதேபோல வருவாய்த்துறை வழக்குகளில் அலட்சியம் காட்டியதற்காக சில தாசில்தார்களுக்கும், பல்வேறு திட்டங்களை மெத்தனமாகச் செயல்படுத்திய திட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் அகவிலைப்படியை நிறுத்தி வைக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், இந்த கூட்டத்திற்கு வராத மாவட்ட சந்தைப்படுத்தல் அதிகாரிக்குக் காரணம் காட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது.