மணமகனின் ஆடை பிடிக்கவில்லை! முகூர்த்த நேரத்தில் கல்வீச்சு அடிதடி! மத்திய பிரதேசத்தில் பரபர சம்பவம்
போபால்: மத்திய பிரதேசத்தில் திருமண விழாவில் மணமகன் ‛ஷர்வானி' ஆடை அணிந்த நிலையில் அது பிடிக்கவில்லை எனவும், பாரம்பரிய முறைப்படி ‛தோத்தி--குர்தா' அணிய வலியுறுத்தியது அடிதடி, கல்வீச்சாக மாறி போலீஸ் நிலையம் வரை சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியபிரதேச மாநிலம் தார் நகரை சேர்ந்தவர் சுந்தர்லால். பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவர். இவருக்கும் தார் மாவட்டம் மெங்க்படா கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!
இருவீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண நிகழ்வுக்காக மாப்பிள்ளை வீட்டார் மணமகள் வீட்டுக்கு வந்தனர்.

ஆடைக்கு எதிர்ப்பு
முகூர்த்த நேரம் நெருங்கியது. மணமகன், மணமகள் ஆகியோர் மணமேடைக்கு வந்தனர். மணமகன் சுந்தர்லால் ‛ஷர்வானி' உடை அணிந்திருந்தார். இதற்கு மணமகளின் உறவினர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது தங்கள் குடும்ப வழக்கப்படி மாப்பிள்ளை தோத்தி-குர்தா உடை அணிந்து தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றனர்.

வாக்குவாதம்
இதற்கு மணமகன் வீட்டினர் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆனால் மணமகள் வீட்டினர் விடவில்லை. மாப்பிள்ளை தோத்தி-குர்தா அணிந்து தான் மணமேடையில் அமர்ந்து திருமண சடங்கில் பங்கேற்று பெண்ணுக்கு தாலிகட்ட வேண்டுமென வலுக்கட்டாயப்படுத்தினர். இதனால் இருகுடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தாக்குதல்- கல்வீச்சு
இந்த வாக்குவாதம் முற்றவே இருதரப்பினரும் ஒருவைரையொருவர் தாக்கி கொண்டனர். கற்களை தூக்கி எறிந்தனர். இதனால் திருமண வீடு போர்களம்போல் மாறியது. இதுபற்றி தாம்னோட் போலீசில் மணமகன், மணமகள் தரப்பில் புகார் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் திருமணம் முகூர்த்த நேரத்தில் தடைப்பட்டது.

திருமணம் என்னாச்சு?
பிறகு சிறிது நேரத்தில் மணமகன்-மணமகள் வீட்டினர் சமாதானம் அடைந்தனர். பிரச்சனையை முடித்து கொள்ள முன்வந்தனர். இதையடுத்து தார் நகரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் முடிவடைந்தது. இதுபற்றி மணமகன் சுந்தர்லால் கூறுகையில், ‛‛பிரச்சனை என்பது மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே ஏற்படவில்லை. திருமணத்துக்கு வந்தவர்கள் பிரச்சனையை எழுப்பி சிலரை தாக்கியதால் தான் குழப்பம் ஏற்பட்டது'' என்றார்.