போதிய விழிப்புணர்வு இல்லை.. கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்..அரசு என்ன செய்ய வேண்டும்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாஷி அருகேயுள்ள கிராமங்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோதும், மக்கள் மூட நம்பிக்கை காரணமாக மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் செல்ல மறுப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் கொரோனா குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வுகள் இருப்பதில்லை.
அப்படிதான் உத்தரகண்ட் மாநிலத்திலும் உள்ளது. இங்கு பெரும்பாலான கிராமங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் யாராவது ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். ஆனால், இங்குள்ள மக்கள், சாதாரண காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாகவே பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகக் கருதுகின்றனர்.

உத்தரகண்ட் கிராமம்
உத்தரகண்ட்டில் உள்ள ஒரு பழமையான கிராமத்தைச் சேர்ந்தவர் பூனம். இவரது தாய் கொரோனாவால் சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தார். இருப்பினும், பூனம் அதை நம்ப மறுக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "எனது தாயாருக்குக் காய்ச்சல் இருந்தது. நாங்கள் சாதாரண பாராசிட்டமால் மருந்தை அவருக்கு அளித்தோம். 2 நாட்களில் அவரது காய்ச்சல் சரியாகிவிட்டது. பின் திடீரென அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து நாங்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் அதன் பிறகு ஒரே நாளில் அவர் உயிரிழந்துவிட்டார்' என்கிறார் அப்பாவியாக!

துளசி இலை
அதே கிராமத்தைச் சேர்ந்த மீனா தேவி என்ற 35 வயது பெண்ணும் கொரோனாவால் உயிரிழந்தார். ஆனால் அவரது தாயார் இதை நம்ப மறுக்கிறார். மீனா தேவிக்கு 2 நாட்கள் மட்டுமே காய்ச்சல் இருந்ததாகவும் துளசி இலையைக் கொடுத்ததும் அது சரியாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் மீரா தேவி உயிரிழந்ததாக அவரது தாயார் வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

திருமணம்
இதேபோல ஜெகதீஷ் லால் என்ற இளைஞரும் கொரோனாவால் உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் விரேந்தர் லால் கூறுகையில், எனது சகோதரருக்கு முதலில் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு நாங்கள் பாராசிட்டமால் மருந்தை அளித்தோம். வெறும் 2 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிட்டது. பின்னர், அவர் எங்களுடன் திருமண விழாவில் கூட கலந்துகொண்டார். ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை திடீரென மோசமாக தொடங்கியது. இதையடுத்து நாங்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். அதன் பிறகு அவர் ஒரே நாளில் உயிரிழந்தார்" என்று கூறினார்.

இதே நிலை தான்
அங்குள்ள பெரும்பாலான கிராமங்களில் இதேதான் நிலைமை. இங்குள்ள மக்கள், தங்களுக்கு அதிகமான நோயெரிப்பு சக்தி இருப்பதாகக் கருதுகின்றனர். கொரோனா வைரஸ் உயிரிழப்புகளை ஏற்படுத்தாது என்றும் அது வெறும் சாதாரண ஒரு காய்ச்சல் தான் என்றும் இவர்கள் நம்புகிறார்கள்.

விழிப்புணர்வு இல்லை
மேலும், கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வுகளும் இந்த கிரம மக்களிடையே ஏற்படுத்த அரசு தவறிவிட்டது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதல் 2 நாட்கள் மட்டுமே காய்ச்சல் இருக்கும். அதன் பிறகு பெரும்பாலும் காய்ச்சல் இருக்காது. ஆனால், பிறகுதான் மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்படும். முதல்கட்ட அறிகுறிகள் தெரியும்போதே, நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் மிக மோசமான பாதிப்பு ஏற்படும்.