For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய- இலங்கை மீனவர் பிரச்னை: உயிரிழந்த தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் நடந்தது என்ன?

By BBC News தமிழ்
|

இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு நடுக்கடலில் உயிரிழந்ததாக கூறப்படும் நான்கு மீனவர்களின் உடல்களை உடனடியாக தமிழகம் எடுத்து வரவும், தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்ன நடந்தது?

கடந்த 18ஆம் தேதி காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது மீன்பிடி விசைப்படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம்சன் டார்வின் (இலங்கை அகதி) ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீனவர்கள் நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து ஆரோக்கிய ஜேசு என்பவரது மீன்பிடிப் படகைச் சிறைபிடித்து, இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலுக்கு அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.

நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் அந்த மீன்பிடிப் படகின் பின்பகுதி இலங்கைக் கடற்படை ரோந்து கப்பலின் மீது மோதியதில் கப்பல் சேதம் அடைந்ததாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன் மற்றொரு ரோந்து கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத்தாக்கி மூழ்கடித்தனர் என்றும் இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.

மக்கள்
BBC
மக்கள்

இந்நிலையில் இலங்கை கடற்பரப்பிற்குள் கடந்த 18ம் தேதி இந்திய மீனவப் படகுகள் உட்பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தருணத்தில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

மீனவர்களை தேட விடாமல் திருப்பி அனுப்பிய இலங்கை கடற்படை வீரர்?

படகிலிருந்த நான்கு மீனவர்களும் நடுக்கடலில் மாயமானதால் புதன்கிழமை காலை கோட்டைபட்டிணத்தில் இருந்து மூன்று விசைப்படகுகளில் 15 மீனவர்கள் மாயமான மீனவர்களை தேடி சென்றனர்.

அப்போது நடுக்கடலில் மாயமான நான்கு மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடற்படை வசம் உள்ளதாகவும் விரைவில் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கபட உள்ளதாகவும் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை வீரர் ஒருவர் தமிழில் கூறி மீனவர்களை கரைக்கு திருப்பி அனுப்பினர் என்றும் மீனவர்களை தேடிச் சென்ற ப்ரைட்வின் என்ற மீனவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் அதே நாள் மாலை சுமார் 6 மணியளவில் இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மாயமான இரண்டு மீனவர்களின் உடல்கள் கண்டெடுக்கபட்டுள்ளதாக யாழ்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை போலீசாருக்கு இலங்கை கடற்படையினர் தகவல் தெரிவித்து பின் உடல்கூறு ஆய்வுக்காக யாழ்பாணம் அரசு பொது மருத்துவமனையில் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

பின்னர் உடல்களை இந்தியர்கள் என உறுதி செய்ய யாழ்பாணத்தில் உள்ள இந்திய துனை தூதரக அதிகாரிகள் இரு உடல்களின் புகைப்படங்களை ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் மூலமாக மீனவர்களின் உறவினர்களிடம் அடையாளம் காணப்பட்டதில் நடுக்கடலில் மாயமான செந்தில் குமார் மற்றும் சாம்சன் டார்வின் என்பது தெரியவந்தது.

மேலும் இரண்டு மீனவர்களின் உடல்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பகல் 11 மணியளவில் காங்கேசன்துறை கடற்பரப்பில் இரண்டு உடல்கள் மீட்கபட்டதாக இலங்கை கடற்படையினர் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துனை தூதருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் யாழ்பாணம் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இரண்டு உடல்களும் பெறப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக யாழ்பாணம் அரசு பொது மருத்துவமனையில் வைக்கபட்டடுள்ளன.

இரண்டு உடல்களின் புகைப்படத்தை கொண்டு மாயமான மீனவர்கள் நாகராஜன் மற்றும் மெசியா என்பது உறுதி செய்யபட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்
BBC
ஆர்ப்பாட்டம்

இலங்கை அகதி மரணம்

இதனிடையே புதன்கிழமை மீட்கப்பட்ட சாம்சன் டார்வின் இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது யாழ்பாணத்தில் இருந்து அகதியாக தமிழகம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கை அகதி.

இவர் முகாமில் உள்ள மன்னார் பேச்சாலையை சேர்ந்த இலங்கை அகதி விஜய லெட்சுமியை திருமணம் செய்து மண்டபம் முகாமில் வசித்து வருகிறார்.

சாம்சன் டார்வினுக்கு குழந்தை பிறந்து 20 நாட்களே ஆகிறது. இவர் இலங்கையர் என்பதால் இவரது உடலை உடல் கூறு ஆய்வு செய்து தமிழகம் கொண்டு வர முடியாது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனால் சாம்சனின் மனைவி விஜய லெட்சுமி தனது கனவரின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும் அவருடயை முகத்தை தன் குழந்தைக்கு காட்ட வேண்டும் என யாழ்பாணத்தில் உள்ள துணை தூதுவருக்கு கடிதம் ஒன்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.

திங்கள்கிழமை இரவு என்ன நடந்தது?

திங்கள்கிழமை இரவு என்ன நடந்தது என்பதை அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர் அருள் பிபிசி தமிழிடம் கூறுகையில், "நாங்கள் 18ஆம் தேதி காலை மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று கோட்டைபட்டிணத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்றோம்.

மீனவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை இது இலங்கை கடற்பரப்பு இங்கு தமிழக படகுகள் மீன் பிடிக்க கூடாது மீறி மீன் பிடித்தால் கைது செய்யப்படும் என ஒலிப் பெருக்கி மூலம் எச்சரித்தனர்.

இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தோம். அப்போது ஜேசு என்பவரது படகை இலங்கை கடற்படை கைது செய்தது."

"அப்போது விசைப்படகின் ஓட்டுநர் மெசியா படகை கடற்படை சிறைபிடித்ததாகவும், படகின் மீது கடற்படை கப்பலை கொண்டு மோதியதில் படகு கடலில் மூழ்கிறது யாராவது காப்பறுங்கள் என படகில் உள்ள வாக்கி டாக்கி மூலம் கூறினார்.

நடுக்கடலில் படகு மூழ்கிய போது கடற்படை கப்பல் அருகில் நின்றதால் நாங்கள் அருகே சென்றால் எங்களையும் இலங்கை கடற்படை கைது செய்யும் என பயந்து மீனவர்கள் யாரும் காப்பாற்ற செல்லவில்லை.சற்று நேரத்தில் என் கண் முன்னே படகு மூழ்கியது." என்கிறார் அருள்.

உயிரிழந்த மீனவர் மெசியாவின் தாய் தனது மகனின் உடலை உடனடியாக சொந்த ஊருக்கு எடுத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார்.

நான்கு மீனவர்கள் நடுக்கடலில் உயிரிழந்தது குறித்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசு ராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், "நடுக்கடலில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நான்கு மீனவர்களின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்திய துனை தூதரால் நேற்று இரவு அனுப்பப்பட்ட உயிரிழந்த மீனவரின் புகைப்படத்தில் மீனவர்களின் உடலில் காயங்கள் உள்ளன. எனவே மீனவர்களின் உடலை தமிழகம் கொண்டு வந்து தமிழக மருத்துவர்களால் உடல்கூறு ஆய்வு செய்ய வேண்டும்." என தெரிவித்தார்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலியர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மீனவர்களின் இறப்பு வருத்தத்தை தருகிறது. ஊடகங்கள் வாயிலாக எனக்கு உயிரிழந்த மீனவர்களின் புகைப்படங்கள் கிடைத்தன.அதிகாரபூர்வ கடிதம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை," என்றார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசுக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற 4 மீனவர்கள் இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் இறந்து விட்டதாக மீனவர்கள் மூலம் தகவல் வரப்பெற்றுள்ளது. இவ்விபத்தில் இறந்த மீனவர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்."

மேலும், "இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படை செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்."

"இச்சம்பவம் குறித்து இந்திய தூதரகத்தின் மூலம் உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன்," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தரப்பில் நடவடிக்கை

இந்திய மீன்பிடிப் படகு கடலில் மூழ்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்த இருவேறு குழுக்கள் இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குழுவொன்றும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிபிசி தமிழுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் கடந்த 18ம் தேதி இந்திய மீனவப் படகுகள் உட்பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தருணத்தில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இதன்போது, இந்திய படகொன்று தமது படகுடன் மோதுண்டு கடலில் மூழ்கியதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற நால்வர் மீண்டும் நாடு திரும்பவில்லை என இந்திய அதிகாரிகள் தமக்கு அறிவித்த நிலையில், குறித்த படகில் நால்வர் பயணித்திருக்கலாம் என தாம் எண்ணியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த நால்வரையும் தேடும் பணிகளை இலங்கை கடற்படையின் சுழியோடிகள் குழு மேற்கொண்டிருந்தது.

இதற்கமைய, நேற்று (20) நண்பகல் வேளையில் மூழ்கிய படகை கடற்படையினர் கண்டுபிடித்திருந்ததுடன், அதனைத் தொடர்ந்து நடத்திய தேடுதலில் இருவரின் சடலங்களை கண்டெடுத்திருந்தனர்.

அதன்பின்னர், இன்றைய தினமும் கடற்படையின் சுழியோடிகள் தேடுதல்களை நடத்தி, எஞ்சிய இருவரின் சடலங்களை மீட்டதாக கடற்படை பேச்சாளர் பிபிசி தமிழுக்கு கூறினார்.

நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இலங்கை கடற்படையின் தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்பாராத விபத்து

குறித்த சம்பவம் தொடர்பில் பிபிசி தமிழ் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்புக் கொண்டு வினவியது.

தேவானந்தா
BBC
தேவானந்தா

குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்துள்ளமை உறுதியாகியுள்ளதாகவும், அவர்கள் எல்லை தாண்டியமையினாலேயே இலங்கை கடற்படை அவர்களை கைது செய்ய முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.

எல்லை தாண்டிய மீனவர்களை கைது செய்ய முயற்சித்த தருணத்தில், எதிர்பாராத விதமாக விபத்தொன்று ஏற்பட்டு, நால்வர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான உயிர் ஆபத்துக்கள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, தான் மிகவும் பொறுப்புடன் கடமையாற்றியதாகவும் அவர் கூறினார்.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வருகைத் தந்து மீன்பிடிப்பதை, இந்திய அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறிய அவர், இந்த மீனவப் பிரச்னையை கலந்துரையாடலின் ஊடாகவே முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இந்திய மீனவர்கள் அத்துமீறி, இலங்கை கடற்பரப்பிற்குள் வருகைத் தந்து, வடக்கு தமிழ் மீனவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்திருந்ததாகவும் அவர் நினைவுப்படுத்தினார்.

தமது நாட்டு மீனவர்களை பாதுகாப்பதற்காக, எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்ய கடற்படை நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் கூறுகின்றார்.

இதேவேளை, இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கொலை செய்து விட்டதாக தமிழகத்தின் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து, பிபிசி தமிழ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவியது.

இந்த சம்பவம் எதிர்பாராது நடத்ததாக கூறிய அவர், தமிழகத்தினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் நிராகரித்தார்.

அத்துடன், இது கொலையா என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக, உயிரிழந்த நால்வரது சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகளை இலங்கையில் நடத்தாது, சடலங்களை இந்திய அதிகாரிகளிடம் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கையளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவில் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் நடத்தப்படும் பட்சத்தில், இது கொலையா? அல்லது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவமா? என்பதை, அந்த நாட்டிலேயே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை மற்றும் இந்திய மீனவப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் ஊடாகவே மாத்திரமே நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என கூறிய அவர், அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.

தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளாக தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே, தற்போதைய அரசாங்கம் தன்னை கடற்றொழில் அமைச்சராக நியமித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் வருகைத் தந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்வது, இரு தரப்பிற்கும் ஆரோக்கியமானது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Capt. Indika de Silva, media spokesman for the Sri Lanka Navy, told BBC Tamil that steps had been taken to arrest Indian's who fishing boats that had entered Sri Lankan waters on the 18th and were engaged in fishing activities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X