For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பட்ஜெட் 2021: பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பாரா நிர்மலா சீதாராமன்?

By BBC News தமிழ்
|

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ள சூழலில், 2021-2022ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் எட்டு சதவிகிதம் அளவுக்கு சுருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இதே ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 11 சதவிகிதம் அளவுக்கு வளரும் நிலையை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறைவான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இருந்து பெறக்கூடிய வளர்ச்சியாக இருக்கும்.

பெருந்தொற்றின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் நோக்கில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த பட்ஜெட் இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

இதன் காரணமாக இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் இந்தியாவின் தற்போதைய மோசமான நிதி நிலைமையை கருத்தில் கொண்டு செலவுகள் அதிகரிக்கப்பட வேண்டிய துறைகளை இந்திய நிதியமைச்சர் மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

நிர்மலா சீதாராமன்
Getty Images
நிர்மலா சீதாராமன்

மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த 3.4 சதவிகிதம் அளவுக்கு இல்லாமல் ஏழு சதவிகிதத்துக்கும் அதிகமாகவே இருக்கும்.

தனியார் முதலீட்டு நடவடிக்கைகள் மிகவும் குறைவாக இருந்தாலும், சுகாதாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அரசு அதிகமாக செலவிடுவதன் மூலம் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை வேகப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.

அமைப்புசாரா துறையில் இருப்பவர்களுக்கு மேலதிக நிதியுதவி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு இன்னும் கூடுதலாக வருவாய் கிடைக்க வழிவகை செய்வதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை ஒருவேளை பட்ஜெட் மூலம் சாத்தியமாகலாம்.

வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதற்கு எவ்வளவு பணம் வழங்கப்படும் என்பதும் தற்போது கவனிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மோசமான நிதி நிலைமையைக் கொண்டுள்ள வங்கிகள் மேற்கொண்டு புதிதாகக் கடன் கொடுக்க நிதி ஆதாரங்கள் தேவை எனும் சூழலில் உள்ளன.

பட்ஜெட்
Getty Images
பட்ஜெட்

வங்கிகளின் செயல்படா சொத்துக்களின் விகிதம் 14 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் அவற்றை கையகப்படுத்துவதற்காகவே ஒரு தனி வங்கி (Bad Bank) உருவாக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் குறைவு மற்றும் பெருந்தொற்று தொடர்பான செலவினங்கள் ஆகியவற்றை சரி செய்வதற்கு வருமானம் அதிகம் உள்ளவர்களுக்கு, கூடுதலாக வரி விதிக்கப்படுமா என்பதும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள இந்த 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியுள்ளது.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை வழங்கி வரும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புச் சட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புற பகுதிகளிலும் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படும் அறிவிப்பு வருமா என்பதையும் இந்த பட்ஜெட்டில் கவனிக்க வேண்டும்.

நாட்டிலுள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்குவதற்கான நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றாலும் அவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டால் அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Finance Minister Nirmala Sitharaman is set to present the Government of India's budget for the year 2021-2022, in the context of India's GDP decline to an all-time low.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X