For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'இந்திய பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும்' - ஐ.எம்.எஃப் கணிப்புக்கு என்ன காரணம்?

By BBC News தமிழ்
|
ஐம்எப்
Getty Images
ஐம்எப்

இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10.3 சதவீதம் அளவுக்கு சுருங்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. அதற்கு அடுத்த நிதியாண்டில் நிலைமை மேம்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"A Long and Difficult Ascent" என்ற பெயரில் அக்டோபர் மாதத்திற்கான உலக பொருளாதாரம் குறித்த அறிக்கையை சர்வதேச செலாவணி நிதியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10.3 சதவீதம் அளவுக்கு சுருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்டதைவிட இது மேலும் 5.8 சதவீதம் குறைவாகும்.

நுகர்வோருக்கான விலைகளைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு 4.9 சதவீதம் அளவுக்கு அவை அதிகரிக்கும் எனவும் அடுத்த நிதியாண்டில் 3.7 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வறிக்கை கணித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவே உலகம் முழுவதும் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாகச் சொல்லும் அறிக்கை, அதன் தாக்கம் இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் இருக்கும் என்று கூறியுள்ளது.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு மே, ஜூன் ஆகிய மாதங்களில் பல நாடுகள் தளர்வுகளை அறிவிக்க ஆரம்பித்தன. இதனால், ஏப்ரல் மாதத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்த பொருளாதாரம் மெல்ல, மெல்ல மீள ஆரம்பித்தது. ஆனால், பெருந்தொற்று வேகமான பரவ ஆரம்பித்ததும், பல இடங்களுக்கு வைரஸ் பரவ ஆரம்பித்ததும் பொருளாதாரத்தில் சிக்கல்களை ஏற்படுத்தியது. நாடுகள் தளர்வுகளை அறிவிப்பது குறைய ஆரம்பித்தது.

ஊரடங்கு தளர்வுகள் தொடங்கிய பிறகு சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நிலை மேம்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான அளவில் பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டாலும், அவை தமது மக்களுக்கு பண உதவிகளை அளித்ததால் எதிர்பார்த்ததைவிட அவை வேகமாக மீண்டன.

நிலைமையை மோசமாக்கிய காரணிகள்

ஆனால், எல்லா நாடுகளிலும் நிலைமை இப்படி இல்லை. இந்தியா போன்ற நாடுகளில் முதலீடுகள், நுகர்வு ஆகியவை மிகவும் குறைவாக இருந்ததால் நிலைமை மேம்படவில்லை. ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில், வெளிநாடுகளில் பணியாற்றும் குடிமக்கள் அனுப்பும் தொகை குறைவாக இருந்தது நிலைமையை மோசமாக்கியது.

ஜூன் மாதவாக்கில் உலக பொருளாதாரம் மீண்டதற்கு முக்கியக் காரணமாக சீனாவைக் குறிப்பிடுகிறது அறிக்கை.

ஐஎம்எப்
Getty Images
ஐஎம்எப்

வருட துவக்கத்தில் அந்நாட்டில் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தாலும்கூட, மாதங்கள் செல்லச்செல்ல விரைவாக வீழ்ச்சியிலிருந்து மேலே எழுந்தது சீனா. மருத்துவ உபகரணங்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்ததும் இதற்கு முக்கியமான காரணம்.

"கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்தபோது, இது நம் பொருளாதாரத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இதன் தாக்கம் 1- 2 சதவீதத்திற்கு மேல் இருக்காது என இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கியும் அதன் தாக்கம் 1-2 சதவீதம்தான் இருக்கும் என்றது.

ஆனால், இந்தியாவின் முன்னாள் தலைமைப் புள்ளியியலாளரான பிரனாப் சென், இந்தியப் பொருளாதாரம் 12 சதவீதம் அளவுக்குக் குறையும் என்றார். அதேபோல, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்த ரதின் ராய், இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார்.

அப்போது யாரும் கேட்கவில்லை. ஆனால், இப்போது 9.5 சதவீதம் அளவுக்கு பொருளாதாரம் சுருங்கும் என்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான ஷ்க்தி காந்த தாஸ். ரிசர்வ் வங்கி சொல்வது சரி என்கிறார் சுப்ரமணியம் கிருஷ்ணமூர்த்தி.

இந்தச் சூழலில் பொருளாதாரம் மேம்பட வேண்டுமென்றால், பொருளாதரத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும். அதற்கு நுகர்வோர் செலவழிக்க வேண்டும். செலவுசெய்ய அவர்களிடம் பணம் வேண்டும்" என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

கோல்ட்மேன் சாக்ஸ், உலக வங்கி, எஸ்பிஐ ரிசர்ச் என பல அமைப்புகளுமே இந்தியப் பொருளாதாரம் பெரும் சுருக்கத்தைச் சந்திக்கும் என்பதைச் சொல்லிவந்தன என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவரான ஜோதி சிவஞானம். இதை மாற்ற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, அரசாங்கம் செலவுகளை அதிகரிப்பதுதான்; ஆனால், பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கிறோம் என்ற பெயரில் மக்களுக்கு கடன்களை வழங்க முன்வருகிறது அரசு. யாரும் கடன் வாங்கி செலவழிக்கமாட்டார்கள் என்கிறார் அவர்.

விலைவாசியின் விளைவு

பெரும்பாலான இந்தியர்கள் நடுத்தர வர்க்கதைச் சேர்ந்தவர்கள். மாத வருமானத்தை நம்பியிருப்பவர்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் பலர் வருவாயை இழந்திருக்கிறார்கள். பலர் வேலையை இழந்திருக்கிறார்கள்.

இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் - ஐ.எம்.எஃப்
BBC
இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் - ஐ.எம்.எஃப்

"இந்தச் சூழலில் மக்களைச் செலவுசெய்ய வைப்பது எளிதான காரியமில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் பணத்தை செலவழிக்காமல் வைத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதமாக இருக்கிறது.

இதற்கு நடுவில் பொருள்களின் விலையும் உயர ஆரம்பித்துள்ளது. கடந்த 9 மாதங்களில் 6 சதவீதத்திற்கு மேல் விலைவாசி உயர்ந்திருக்கிறது. இது Stagflationஐ நோக்கி இட்டுச் செல்லும்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

அடுத்த ஆண்டில் நிலைமை மேம்படலாம். ஆனால், பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை அடைய மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்கிறார் அவர்.

ஆனால், வரலாற்றிலேயே முதல்முறையாக வங்க தேசத்தின் தனிநபர் வருவாயைவிட இந்தியாவின் தனிநபர் வருவாய் கீழிறங்கியுள்ளது. அவர்கள் பெருந்தொற்றுச் சூழலைச் சிறப்பாகக் கையாண்டதும் நாம் கோட்டைவிட்டதும்தான் இதற்கு முக்கியமான காரணம் என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

2021ஆம் ஆண்டில் தடுப்பூசிகள் வரும் நிலை ஏற்படும், சிகிச்சை முறைகள் மேம்படும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது குறையும் என்ற அடிப்படையில்தான் இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவுவது குறையும் என்ற கணிப்பில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மிகப் பெரிய அளவிலான நிச்சயமற்ற காரணிகளை உள்ளடக்கி சர்வதேச நிதியத்தின் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
IMF says that Indian Economy will dip into more and more. It also tell the reasons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X