“உள்ளாடைகள் காவி நிறம்.. அதனால்தான் எரிகிறது” - நீதிபதிகளுக்கு எதிராக PFI தலைவர் சர்ச்சை பேச்சு!
ஆலப்புழா : கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உள்ளாடைகள் காவி நிறம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் யாஹியா தங்கல் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நடைபெற்ற பேரணியில், சிறுவன் ஒருவன் மத வெறுப்பு கோஷமிட்ட நிலையில், அதுகுறித்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
அந்தப் பேரணியை நடத்திய அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்தச் சிறுவனின் தந்தையும் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆலப்புழா பேரணியின் முழக்கங்களைக் கேட்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் அவர்களின் உள்ளாடைகள் காவி நிறத்தில் இருக்கும் என பி.எஃப்.ஐ தலைவர் பேசியுள்ளார்.
PFI, எஸ்டிபிஐ, பயங்கரவாத இயக்கங்களே.. ஆர்எஸ்எஸ் நிர்வாகி மனைவி வழக்கில் கேரள ஐகோர்ட் நீதிபதி கருத்து

சிறுவன் கோஷம்
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கடந்த மே 21ஆம் தேதி பேரணி ஒன்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்துகொண்ட சிறுவன் ஒருவன், ஒருவரின் தோளில் அமர்ந்தபடி இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினான். இந்தப் பேரணியில் அந்தச் சிறுவன் மாற்று மதங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.

நீதிமன்றம் அச்சம்
இந்தச் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியைக் கிளப்பியது. இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அச்சம் தெரிவித்திருந்தனர். "இவர்கள் வளர்ந்து வரும் தலைமுறையினர் மனதில் மற்ற மதங்களுக்கு எதிரான கருத்துகளை விதைக்கின்றனர். இந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகும்போது, இவன் மனதில் மற்ற மதங்களுக்கு எதிரான கருத்துக்களே நிரம்பி இருக்கும். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தனர். மேலும், கேரளாவில் அரசியல் கூட்டங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லக்கூடாது என உயர்நீதிமன்றம் கண்டித்தது.

கைது
இதுதொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆலப்புழா பகுதி தலைவர் நவாஸ், செயலாளர் மஜீப் மீது ஆலப்புழா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த அன்வர் என்பவர், சிறுவனை அழைத்து வந்துள்ளார். அவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

நாங்கள்தான் தடுத்தோம்
"சிறுவன் எழுப்பிய கோஷத்தை நாங்கள் எழுதித் தரவில்லை. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேரந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர். சிறுவன் எழுப்பிய கோஷத்தை பார்த்த எங்கள் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்தான், சிறுவனை தடுத்து நிறுத்தினார்" என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தந்தையும் கைது
இதற்கிடையே, சிறுவனின் குடும்பத்தினர் கொச்சியில் தலைமறைவானதாக தகவல் வெளியானது. தீவிர தேடுதலுக்குப் பின்னர், நேற்று அந்தச் சிறுவனை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், அவனது தந்தையை ஆலப்புழாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மீண்டும் பேரணி
இந்நிலையில், நீதிமன்றம், போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து நேற்று ஆலப்புழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் மீண்டும் பேரணி நடந்தது. அப்போது பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் யாஹியா தங்கல் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக "அவர்களின் உள்ளாடைகள் காவி நிறம்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவி உள்ளாடை
யாஹியா தங்கல் பேசுகையில், "நீதிமன்றங்கள் இப்போதெல்லாம் எளிதில் அதிர்ச்சியடைகின்றன. எங்கள் ஆலப்புழா பேரணியின் கோஷங்களைக் கேட்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ந்து போகின்றனர். காரணம் என்ன தெரியுமா? காரணம் அவர்களின் உள்ளாடைகள் காவி. அது காவி நிறத்தில் இருப்பதால், அவை மிக வேகமாக சூடாகும். அதனால் அவர்கள் தீக்காயத்தை உணர்வார்கள். அது அவர்களை தொந்தரவு செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.