For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்- உச்சநீதிமன்றம் அதிரடி! டோணிக்கும் குட்டு!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பெட்டிங், பிக்ஸிங்கில் என பல முறைகேடுகளில் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து நீக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கூறியுள்ளனர். மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாகவும் டோணி செயல்படுவது கவலைக்குரியதும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6வது ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங், ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடுகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அத்துடன் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என். சீனிவாசனுக்கு இதில் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் அவர் இந்த புகார்கள் குறித்து அக்கறை கொள்ளவில்லை என்று புகார் கூறப்பட்டிருந்தது.

குருநாத் மெய்யப்பன் சென்னை அணி நிர்வாகி அல்ல, சென்னை அணியின் ஆதரவாளர் என்றே கூறப்பட்டு வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) இதே கருத்தை கூறி வந்தனர். ஆனால் முகுல் கமிட்டியோ குருநாத் மெய்யப்பன், சென்னை அணி நிர்வாகி என்று ஆணித்தரமாக பதிவு செய்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது பிசிசிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முகுல் முட்கல் கமிட்டி தெரிவித்துள்ளபடி குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிதான் என்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

அத்துடன் முட்கல் கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க தனி குழு நியமிக்கப்படும் எனவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கேப்டன் டோணிக்கு குட்டு

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவருமாக கேப்டன் டோணி இரட்டை பந்தம் கொண்டுள்ளது ஏன்? இது கவலையளிக்க கூடியது.

பிசிசிஐ-யின் ஆயுள் முடிந்து விட்டது. ஒரு முறையான, நியாயமான வாரியமே இருக்க வேண்டும். தற்செயலான சூழ்நிலைகளால் நிர்பந்திக்கப்பட்ட கிரிக்கெட் வாரியம் இருக்கக்கூடாது.

இந்தியா சிமெண்ட்ஸுக்கு சிக்கல்

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்கள் யார்? போர்டை அமைத்தவர்கள் யார் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற ஒன்றில் ரூ.400 கோடி முதலீடு செய்யும் முடிவை எடுத்தது யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் பங்குதாரார் உரிமை பற்றிய விவரங்கள், குறிப்பாக என். சீனிவாசன் அவரது குடும்பத்தினருக்கு இதில் உள்ள பங்கு ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்

இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அணியை நீக்கலாம்...

அத்துடன் பல ஒழுங்கீனங்கள் இருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏன் அதன் விதிகளின் படி செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தகுதி இழப்பு செய்யக்கூடாது? இதற்கு வேறு எந்த ஒரு விசாரணையுமே தேவையில்லையே.. முட்கல் கமிட்டி அறிக்கையின்படியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

சீனிவாசன் போட்டியிட முடியாது..

மேலும் இது தொடர்பான அனைத்து சர்ச்சைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேர்தல் நடத்த அனுமதி வழங்கினர். எனினும் முட்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர்.

ஜாம்பவான் சென்னை அணி

இதனால் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி நீக்கம் செய்யப்படும் நிலைமையை எதிர்கொண்டிருக்கிறது. அதேபோல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தேர்தலில் என். சீனிவாசன் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு நிகரான அணியாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். 2010, 2011 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற அணி.

வலிமை வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டால் ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளுக்கே பின்னடைவாக இருக்கும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

English summary
Resuming the hearing of the IPL spot-fixing and betting scandal case, the Supreme Court on Thursday observed that the BCCI must disqualify Chennai Super Kings from the IPL and asked them to act immediately on the Mudgal report. In a major blow to N Srinivasan, the court's observation states that he must step aside from contesting BCCI elections and also suggested that they proceed with the elections at the earliest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X