• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனா சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா? அது சாத்தியமானதா?

By BBC News தமிழ்
|

கோடு
Getty Images
கோடு

அமெரிக்காவுக்கே தலைவனாக மாறும் வகையில் சொந்த முயற்சி ஒன்றில் சீனா முயற்சித்து வருகிறதா? அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் அப்படித்தான் கூறுகின்றன. ஆனால் மிகைப்படுத்தி கூறப்படும் தகவலுக்கு அப்பால், சூப்பர் ராணுவ வீரரை உருவாக்கும் எண்ணம் என்பது, வெளிநாட்டில் பரப்பப்படும் தகவலாக உள்ளது என்பது மட்டுமின்றி, சீனாவுக்கே அப்படி ஒரு ஆர்வம் இல்லை என்று தெரிய வருகிறது.

தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய நிலையை எட்டும் நோக்கில், உலக நாடுகளின் ராணுவங்கள், தொழில்நுட்ப ரீதியில் புதுமையான விஷயங்களைப் பயன்படுத்த, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றன.

உதாரணத்துக்கு, டக்ட் டேப்-ஐ எடுத்துக் கொள்ளலாம். இரண்டாம் உலகப் போரில் கடற்படையில் தன் மகன்கள் பணியாற்றி வந்த நிலையில், இல்லினோயி பகுதியில் இருந்த ராணுவ தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி தெரிவித்த யோசனையின்படி அது தயாரிக்கப்பட்டது.

அன்றைய காலத்தில் வெடிமருந்து பெட்டிகளுக்கு சீல் வைப்பதற்குப் பயன்படுத்தும், பிலிம் போன்ற டேப் பாதுகாப்பில் தடுமாறிக் கொண்டிருந்த வீரர்களுக்கு உதவும் வகையில் வெஸ்ட்டா ஸ்டவுட் என்ற பெண் ஒரு யோசனையை முன் வைத்தார் - தண்ணீர் புகாத வகையிலான, துணியால் தயாரித்த டேப் ஒன்றை அவர் தயாரித்தார்.

தாம் பணிபுரிந்த தொழிற்சாலை மேற்பார்வையாளர்களின் அதரவு கிடைக்காத நிலையில், அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு அவர் கடிதம் எழுதினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அவருடைய யோசனையின்படி டேப் தயாரிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அதிபர் உத்தரவிட்டார்.

நமக்கு தேவையான வகையில், ஒட்டும் தன்மையுள்ள ஒரு டேப்பை ராணுவ தொழிற்சாலை தயாரிக்க முடிந்தால், அதனால் வேறு என்னவெல்லாம் செய்ய முடியும்?

Click here to see the BBC interactive

2014-ல் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நாம் இரும்பு மனிதனை உருவாக்கப் போகிறோம் என்பதை அறிவிக்கவே இங்கு வந்திருக்கிறேன்'' என்று கூறினார்.

அப்போது எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் அவர் சீரியஸாக அதைக் கூறினார். அதற்கான பணிகளை அமெரிக்க ராணுவம் ஏற்கெனவே தொடங்கி விட்டது. டாலோஸ் என்ற பெயரிலான, பாதுகாப்பு கவச உடையாக அது திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான காணொளியும் காட்டப்பட்டது. இந்த கவச உடை அணிந்த நபர், எதிரியின் முகாமுக்குள் செல்வது போலவும், சீறிவரும் குண்டுகள் கவச உடையில் பட்டு தெறித்து விழுவது போலவும் அது இருந்தது.

இரும்பு மனிதன் உருவாகவில்லை. ஐந்து ஆண்டுகள் கழித்து, அந்த முயற்சி முடிவுக்கு வந்தது. ஆனால், அந்த கவச உடைக்காக தயாரிக்கப்பட்ட வெவ்வேறு பொருட்கள், வேறு வகைகளில் பயன்பாட்டுக்கு உகந்தவையாக உள்ளதாக அதைத் தயாரித்தவர்கள் கருதுகின்றனர்.

சீனா
USSOCOM
சீனா

தங்கள் ராணுவ வீரர்களின் திறன்களை மேம்படுத்த, வெளிப்புற கூடு போன்ற பொருளை உருவாக்கும் சாத்தியக்கூறு, ராணுவத்தினருக்கு நம்பிக்கை தரும் தொழில்நுட்பமாக இருக்கிறது. அதில் ராணுவங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

திறமையை மேம்படுத்துதல் என்பது புதியதல்ல. பழங்காலத்தில் இருந்தே ஆயுதங்கள், உபகரணங்கள், பயிற்சி முறைகள் தொடர்ந்து மேம்பட்டு வந்திருக்கின்றன.

ஆனால் இன்றைய காலத்தில், மேம்படுத்துதல் என்பது ராணுவ வீரருக்கு சிறந்த துப்பாக்கி தருவதுடன் நின்று விடுவதில்லை. தனிப்பட்ட ராணுவ வீரரின் திறமையை மேம்படுத்துவதாகவும் அது இருக்கிறது.

அணுகுண்டை விட மோசமான'' ஒரு பாதிப்பை மனிதகுலம் எதிர்நோக்கி இருக்கிறது என்று 2017-ல் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.

குறிப்பிட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதனை, விஞ்ஞானிகளால் உருவாக்க முடியும் என்பது எழுத்தளவில் மட்டுமின்றி, நடைமுறையிலும் சாத்தியமானதாக உள்ளது. விஞ்ஞானிகளால் உருவாக்கப்படும் மனிதன் கணிதத்தில் அறிவாளியாக, புத்திசாலித்தனமான இசைக் கலைஞராக அல்லது ஒரு ராணுவ வீரராக, பயம், கருணை, வருத்தம் அல்லது வலி பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் போரிடக் கூடிய வீரராக இருக்க முடியும்,'' என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் தேசிய உளவு அமைப்பான டிஎன்ஐ முன்னாள் இயக்குநர் ஜான் ராட்ச்லிபே, கடந்த ஆண்டு சீனா மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மக்கள் விடுதலை ராணுவத்தின் வீரர்களைக் கொண்டு, உயிரியல் ரீதியில் மேம்படுத்தப்பட்ட திறன்களுடன் கூடிய ராணுவ வீரர்களை உருவாக்கும் வகையில், மனிதர்களை வைத்து சீனா பரிசோதனை நடத்தியுள்ளது. சீனாவின் அதிகார ஆசைக்கு நெறிசார்ந்த எல்லைகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது'' என்று வால்ஸ்ட்ரீட் இதழில் அவர் எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையை பொய்களின் மூட்டை'' என்று சீனா அழைத்தது.

அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் புதிய இயக்குநர் அவ்ரில் ஹெய்ன்ஸ், தனக்கு முந்தைய இயக்குநரின் கருத்தை ஏற்கிறாரா என்று கேட்டதற்கு, அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என அவருடைய அலுவலகம் மூலமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சீனாவால் ஏற்பட்டுள்ள ஆபத்துகள் குறித்த இயக்குநரின் எச்சரிக்கைகள் பற்றி அவரது அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.

டொனால்ட் ட்ரம்ப்பின் பல திட்டங்களை பைடன் நிர்வாகம் மாற்றி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முக்கிய அம்சமாக சீனாவுடன் உள்ள பதற்ற நிலை இடம் பெறும் என்று தெரிகிறது.

பேராவலும் உண்மை நிலையும்

ராணுவத்தினரின் போக்கு காட்டி ஏமாற்றும் வகையிலான செயல்பாடுகளில் வலியை, கடும் குளிரை அல்லது தூங்க வேண்டிய தேவை இல்லாத ராணுவ வீரர் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். ஆனால், இரும்பு மனிதனை'' உருவாக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியைப் பார்த்தால், தொழில்நுட்ப வரம்புகள் இந்த பேராவலை சாத்தியமற்றதாக ஆக்கும் என்று தெரிகிறது.

மரபணு மாற்றி அமைத்தல், வெளிப்புற கூடு உருவாக்குதல் மற்றும் மனிதன் - இயந்திர கூட்டுமுயற்சி போன்ற உத்திகளைப் பயன்படுத்தி சீனா இதுபோன்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது'' என்று 2019-ல் இரண்டு அமெரிக்க கல்வியாளர்கள் வெளியிட்ட கட்டுரையில் கூறியுள்ளனர். சீனா ராணுவ உத்திகள் குறித்த கருத்துகளின் அடிப்படையில் அந்தக் கட்டுரை உருவாக்கப் பட்டிருந்தது.

இந்தக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான எல்சா கனியா என்பவர், ராட்ச்லிபே கூறிய கருத்துகள் குறித்து சந்தேகம் தெரிவிக்கிறார்.

சீன ராணுவம் என்ன விவாதிக்கிறது, என்ன விஷயங்களை உண்மையில் நடைமுறைப்படுத்த விரும்புகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ஆனால், அவர்களின் பேராவலுக்கும், இப்போதைய தொழில்நுட்பம் எந்த அளவுக்கு உள்ளது என்ற உண்மை நிலைக்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்'' என்று நியூ அமெரிக்கன் செக்யூரிட்டி மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக உள்ள கனியா கூறியுள்ளார்.

சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதில் உலக நாடுகளுக்கு அதிக ஆர்வம் இருந்தாலும்கூட, எந்த அளவுக்கு அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் இது சாத்தியமாகும் என்ற கேள்வியும் உள்ளது'' என்கிறார் அவர்.

மனிதர்களை வைத்து பரிசோதனை நடத்தியது பற்றி ராட்ச்லிபே குறிப்பிட்டிருந்தார். வளர்ந்த நிலையில் உள்ள மனிதனிடம் மரபணு மாற்றம் செய்து சில குணாதிசயங்களை உருவாக்க முடியும் என்ற நிலையில், கருமுட்டைகளின் டி.என்.ஏ.க்களை மாற்றுவது சூப்பர் ராணுவ வீரரை'' உருவாக்குவதற்கு சாத்தியமான ஒரு வழிமுறையாக இருக்கலாம்.

இது சாத்தியமா என்பதைக் காட்டிலும், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விஞ்ஞானிகள் தயாராக இருப்பார்களா என்பது முக்கியமான கேள்வியாக இருக்கும் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த மூலக்கூறு மரபணு நிபுணர் டாக்டர் ஹெலன் ஓ நெயில் கூறியுள்ளார்.

மரபணு அம்சத்தை மாற்றும் தொழில்நுட்பங்கள், அதன் மூலம் மறு உற்பத்தி செய்தல் ஆகியவை மரபணு மாற்றம் மற்றும் வேளாண்மையில் வழக்கமான நடைமுறைகளாகிவிட்டன. மனிதன் உடலில் இதைப் பயன்படுத்துவது இரண்டு அம்சங்களின் கூட்டுத் தன்மை கொண்டதாக இருக்கும். இப்போதைய சூழ்நிலையில் இது நெறிகளுக்கு முரண்பட்டதாக இருக்கும்'' என்கிறார் அவர்.

கோடு
BBC
கோடு

2018 ஆம் ஆண்டில் சீன விஞ்ஞானி ஹே ஜியான்குயி என்பவர் அதிர்ச்சிகரமான ஓர் அறிவிப்பை வெளியிட்டார். கருப்பையில் இருந்த இரட்டை பெண் குழந்தைகளின் டி.என்.ஏ.க்களை வெற்றிகரமாக மாற்றி அமைத்ததன் மூலம், அவர்களுக்கு எச்.ஐ.வி. வராமல் தடுத்ததாக அவர் கூறினார்.

அது குற்றச்சாட்டுக்கு ஆளானது. சீனா உள்ளிட்ட, பெரும்பாலான நாடுகளில் அதுபோன்ற மரபணு - திருத்த நடைமுறைகளுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. ஐ.வி.எப். முறையில் உருவாக்கப்பட்டு, தேவையற்றதாக ஒதுக்கப்படும் கரு முட்டைகளில் மட்டுமே இதுபோன்ற ஆராய்ச்சிகள் செய்யலாம், அதுவும் அது குழந்தையாக உருவாக அனுமதிக்காமல் உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன.

தனது கண்டுபிடிப்பு நியாயமானது என்று அந்த விஞ்ஞானி கூறினார். ஆனால், அரசின் தடையை மீறிய குற்றத்துக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தக் கட்டுரைக்காக நாம் தொடர்பு கொண்டவர்களில் பலரும், ஹே ஜியான்குயி செயல்பாடு உயிரி நெறிசார் செயல்பாடுகளில் முக்கியமான விஷயமாக உள்ளதாகக் குறிப்பிட்டனர். எச்.ஐ.வி.யில் இருந்து பாதுகாப்பு பெறுவதுடன், இந்த நடைமுறை மூலமாக வேறு பல மேம்பட்ட விஷயங்களும் சாத்தியம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இரட்டைக் குழந்தைகளை உருவாக்க Crispr தொழில்நுட்பத்தை ஹே ஜியான்குயி கையாண்டார். உயிருடன் உள்ள செல்களில் டி.என்.ஏ.வில் குறிப்பிட்ட மற்றும் துல்லியமான மாற்றங்களை செய்வதாக அந்தத் தொழில்நுட்பம் உள்ளது. சில குணங்களை நீக்கி, வேறு சிலவற்றைச் சேர்க்க முடியும்.

பரம்பரையாக வரும் நோய்களைக் குணப்படுத்த இது வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. ராணுவத்துக்கு இது எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்?

Crispr தொழில்நுட்பம் புரட்சிகரமானது'' என்று லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டில் உள்ள மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி கிறிஸ்டோபே காலிச்செட் கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு வரம்புகள் உள்ளது என்றும் குறிப்பிடுகிறார். டைப் செய்த கட்டுரையில் சில வார்த்தைகளைக் கண்டுபிடித்து, வேறொரு வார்த்தையை அங்கு மாற்றும் வகையிலான வசதியை இதனுடன் அவர் ஒப்பிடுகிறார். கட்டுரைகளில் சரிப்பட்டு வரக் கூடிய ஒரு அம்சம், வேறொரு விஷயத்துக்கு சரிப்பட்டு வராமலும் போகும்.

ஒரு மரபணுவுக்கு ஒரு தாக்கம் தான் இருக்கும் என கருதுவது தவறு. ஒரு மரபணுவை நீங்கள் எடுத்துக் கொண்டால், அந்த தனிப்பட்ட நபருக்கு தசைகள் வலுவானதாக இருக்கலாம் அல்லது வேகமாக மூச்சுவிடக் கூடியவராக இருக்கலாம். ஆனால், அதுவேகூட பிற்காலத்தில் அவருக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்'' என்று அவர் விளக்கினார்.

சில குணாதிசயங்களைப் பிரித்துப் பார்ப்பதும் கஷ்டமானது. உதாரணமாக, ஒருவரின் உயரத்தை நிர்ணயிப்பதில் பல மரபணுக்களுக்குப் பங்கு உள்ளது. ஒரு குணாதிசயத்தை மாற்றினால், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அது தொடரும்.

அமெரிக்காவின் முயற்சிக்கு நேரடி எதிர்வினையாகத்தான் சீனாவின் முயற்சிகளை சில நிபுணர்கள் கருதுகின்றனர். ஆக்கிரமிப்புக்கு முயற்சிக்கும் புதிய உயிரினங்களை அழித்துவிடும் வகையிலான மரபணுவை அழிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அமெரிக்க ராணுவம் பல மில்லியன் டாலர்களை செலவு செய்கிறது என்று 2017-ல் கார்டியன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்தத் தொழில்நுட்பம் ராணுவ ரீதியில் பயன்படுத்தப்படலாம் என ஐ.நா. நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

சாதகமான நிலையை முன்னெடுப்பதில் சீனாவும், அமெரிக்காவும் மட்டும் போட்டியிடவில்லை. மேம்படுத்தப்பட்ட ராணுவ வீரர்களை'' உருவாக்க பிரான்ஸ் நாட்டின் ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அந்த ஆராய்ச்சிக்கான நெறிசார்ந்த வரையறைகள் அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, நாம் உண்மை நிலையை எதிர்கொள்ள வேண்டும். எல்லோருமே நமது கவலைகளைப் பகிர்ந்து கொள்வது கிடையாது. எனவே, எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருந்தாக வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

கடற்படை
PA Media
கடற்படை

தனிநபர்களின் குணாதிசயங்களைப் பாதுகாப்பாக விஞ்ஞானிகளால் மேம்படுத்த முடிந்தாலும், ராணுவத்தில் அதைப் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் உள்ளன.

உதாரணமாக, ராணுவ கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காக, சொந்த உடல் நலனுக்கு ஆபத்தான சிகிச்சை முறைக்கு தனிப்பட்ட ராணுவ வீரர் முழு மனதுடன் ஒப்புக்கொள்வாரா? சீனாவும், ரஷியாவும் தங்கள் கோவிட் தடுப்பு மருந்துகளை ராணுவத்தினருக்கு அளித்து பரிசோதனை செய்ததாகக் கூறப்படுகிறது.

ராணுவ வீரரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ராணுவம் கிடையாது. ராணுவ பலத்தை அதிகரித்துக் கொள்ள அல்லது போரில் வெற்றி பெறுவதற்காகத்தான் ராணுவம் உள்ளது'' என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள நெறிகள் துறை நிபுணர் பேராசிரியர் ஜூலியன் சவுலெஸ்க்யூ கூறியுள்ளார்.

ராணுவ வீரர்களை ஈடுபடுத்தும் ஆபத்தான சூழலுக்கு ஒரு வரம்பு உள்ளது. ஆனால் சாதாரண சமூகத்தைவிட அதிக அளவிலான ஆபத்து சூழலுக்கு அவர்கள் உள்ளாக்கப் படுகிறார்கள்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் கிடைக்கும் பயன்களைக் காட்டிலும், என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை ஆராய வேண்டியது முக்கியம் என்கிறார் அவர்.

ராணுவத்தில் இந்த ஒப்பீடு மாறுபட்ட வகையில் இருக்கும். தனி நபர்கள் ஆபத்துகளை எதிர்கொள்வார்கள். ஆனால் பயன்களைப் பெற மாட்டார்கள்'' என்று அவர் கூறினார்.

ராணுவ வீரர்கள், வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் உயிர் பிழைப்பதற்கு உத்தரவாதம் தரும் என்றால், மேம்படுத்தல் முயற்சிகள் வரவேற்கப்படும்.

ஆனால், அது அவ்வளவு எளிதானதல்ல என்று கலிபோர்னியா பாலிடெக்னிக் அரசு பல்கலைக்கழகத்தின் தத்துவவியலாளர் பேராசிரியர் பேட்ரிக் லின் கூறுகிறார்.

ராணுவ தகுதி மேம்படுத்தல் என்பது உங்கள் குடிமக்களை வைத்து, அவர்களை ஆபத்துக்கு உள்ளாக்குவதாகும். மேம்படுத்தப்பட்ட திறன்கள் கொண்ட வீரர்கள் என்பது எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை. அதேசமயத்தில், திறன் மேம்படுத்தாத வீரர்கள் செல்ல முடியாத, அல்லது செய்ய முடியாத காரியங்களை செய்யும் பணியில் இந்த மனிதர்களைப் பயன்படுத்தலாம்'' என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு கேப்டனாதல் என்பது இன்னும் சாத்தியமாகாமல் இருக்கலாம். ஆனால் ஆச்சர்யம் தரும் வகையில் திடீரென தகவல்கள் வெளியாகலாம்.

ராணுவத்தில் உருவாகும் மாற்றங்களில் நெறி சார்ந்த கட்டுப்பாடு அல்லது ஜனநாயக ரீதியிலான கட்டுப்பாடு எதையும் செலுத்துவது சிரமமான விஷயம். ஏனெனில், இயல்பாகவே தேச நலனைப் பாதுகாப்பதில் ரகசியத்தன்மை மற்றும் அந்தரங்கத்தன்மை அதில் இருக்கிறது'' என்று சவுலெஸ்க்யூ கூறுகிறார்.

எனவே இது சிரமமான நெறிசார் விஷயம். அறிவியல் அல்லது மருத்துவத்தில் இன்றைய சூழலில் இது கஷ்டமான விஷயமாக இருக்கும்'' என்கிறார் அவர்.

இந்தத் துறையைக் கட்டுப்படுத்த, ஒழுங்குபடுத்த என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதில் ஏறத்தாழ இவை அனைத்துமே இரட்டை பயன்பாடுள்ள ஆராய்ச்சி என்பது முக்கியமான சவாலாக இருக்கும். உதாரணமாக வெளிக்கூடு ஆராய்ச்சி என்பது முதலில் மருத்துவ ரீதியில் மோசமாக உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கு அல்லது குணமாக்குவதற்காக உத்தேசிக்கப்பட்டது. அதாவது பக்கவாதம் வந்தவர்களை மீண்டும் நடக்க வைக்கும் முயற்சியாக இந்த சிந்தனை உருவானது'' என்று பேராசிரியர் லின் கூறுகிறார்.

பயிற்சி
Fonds de dotation Clinatec
பயிற்சி

ஆனால் இந்த உடல் இயக்க முறையிலான சிகிச்சையை எளிதாக ஆயுதமயமாக்கலாகவும் பயன்படுத்த முடியும். அப்படி நடக்காமல் எப்படி தடுக்க முடியும், எப்படி ஒழுங்குபடுத்த முடியும் என்பது தெரியவில்லை. உடல் இயக்க முறை சிகிச்சைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தாத வகையில், பரவலான ஒழுங்குமுறைகள் எப்படி உருவாக்கப்படும் என்றும் தெரியவில்லை'' என்று அவர் கூறினார்.

மரபணு ஆராய்ச்சியில் சீனா ஏற்கெனவே முன்னேறிய நிலையில் உள்ளது, மற்ற நாடுகள் பின்தங்கியுள்ளன என்று டாக்டர் ஓ நெயில் கூறுகிறார்.

இப்போதுள்ள உண்மை நிலைகளில் கவனத்தை செலுத்துவதற்குப் பதிலாக, நெறி விஷயங்கள் குறித்த விவாதங்களில் நாம் நேரத்தை வீணடித்துவிட்டோம் என்று கருதுகிறேன்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுமானம் மற்றும் கற்பனைகளில் அதிக சக்தியை செலவழித்துவிட்டோம். உண்மையான ஆபத்து சூழல்களில் அதிக சக்தியை நாம் செலவிட வேண்டும். அதை நன்கு புரிந்து கொள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். ஏனெனில், வேறு எங்காவது அதே நடைமுறை பயன்படுத்தப்படலாம். ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால் தான், அதில் எங்கே தவறு நடக்கும் என்பதை, அறிய முடியும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

BBC Indian sports woman of the year
BBC
BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
 
 
 
English summary
Is China creating Super Army men?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X