For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களுக்கு தெரியாமலேயே உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறதா ஸ்மார்ட்போன்கள்?

By BBC News தமிழ்
|

ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகளில் உள்ள ஒலிவாங்கிகளான மைக்ரோபோன்கள் நமது உரையாடல்களை நமக்கே தெரியாமல் ஒட்டுக்கேட்டு அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை கொண்டு சரியான விளம்பரங்களை வழங்குகின்றன என்கிற குற்றச்சாட்டை ஃபேஸ்புக் போன்ற பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.

ஃபேஸ்புக்கின் விளம்பரங்கள் பிரிவின் துணைத் தலைவரான ராப் கோல்ட்மேன், ஃபேஸ்புக் இதுபோன்ற வழிமுறைகளை மேற்கொண்டதே இல்லை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும் ஆன்லைன் விளம்பரங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், இவ்வாறு நடப்பது முற்றிலும் தற்செயலானது என்பது ஒரு வலுவான வாதமாக உள்ளது. இதற்கு முன்னரே இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றாலும் தற்போதுதான் அதைப் பற்றி பேசத் தொடங்கியிருப்பதால் அவ்வாறு நினைக்க தோன்றலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை உங்கள் திறன்பேசிகளில் உள்ள ஒலிவாங்கிகள் நாம் பேசுவதை மற்றவருக்கு கேட்க செய்வதற்கும், ஒலியை செய்வதற்கு மட்டுமே பயன்படுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், இங்கு சிலர் தங்களின் திறன்பேசிகள் மற்றவர்களுடனான உரையாடல்களை ஒட்டுக் கேட்டு அதன் காரணமாக தொடர்புடைய விளம்பரங்களை பெற்றதாக தங்களின் அனுபவங்களை கூறுகிறார்கள்.

நிச்சயதார்த்தம் பற்றி அறிவிப்பதற்கு முன்னரே திருமணம் சார்ந்த விளம்பரங்களை பார்த்தோம்

மோதிரம்
Getty Images
மோதிரம்

"நானும் என்னுடைய வருங்கால மனைவியும் எவருக்கும் கூறாமல் நடத்திய நிச்சயதார்த்தத்தை பற்றி மற்றவர்க்கு தெரிவிப்பதற்கு முன்னரே திருமணம் சார்ந்த விளம்பரங்களை பார்த்தோம்," என்கிறார் அமெரிக்காவின் ஸ்ப்ரிங்பீல்டு பகுதியை சேர்ந்த நாட்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நாங்கள் மோதிரத்தை வாங்கினோம் மற்றும் அது தொடர்புடைய எதையும் இணையத்தில் பார்க்கவே இல்லை.

"இரண்டு வாரங்களுக்கு முன்னர் நானும் என்னுடைய வருங்கால மனைவியும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அதுவரை நாங்கள் வாங்காத, பேசாத மதுபானம் ஒன்றை அருந்தினோம். அதற்கு அடுத்த நாள் காலையிலேயே அது என்னுடைய ஃபேஸ்புக் கணக்கின் முகப்பில் முதல் விளம்பரமாக வந்தது.".

தொடர்ந்து இணைந்துக் கொண்டே இருந்த செவிப்புலன் உதவி சாதனம்

"2016ல் என்னுடைய வலது காதின் கேட்கும் திறனை இழந்தேன். ஆப்பிளின் ஐபோன்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு செவிப்புலன் உதவி சாதனம் எனக்கு அளிக்கப்பட்டது" என்கிறார் அமெரிக்காவை சேர்ந்த ஜான்.

"அதாவது இந்த சாதனத்தை பயன்படுத்தி என்னால் மற்றவர்களை மொபைல் மூலம் தொடர்பு கொள்ளவும், பாட்டு கேட்க உட்பட பலவற்றை செய்யவியலும்.

"ஒவ்வொரு முறை என்னுடைய செவிப்புலன் உதவி சாதனம் திறன்பேசியுடன் இணைக்கப்படும் போதும் ஒருவித கிளிக் ஒலி கேட்கும். ஏனெனில், அது என்னை சுற்றியுள்ள உலகை நான் நேரிடையாக கேட்பதிலிருந்து அச்சாதனம் வழியாக கேட்கும் வகையில் மாற்றுவதால் கேட்கிறது."

"திறன்பேசியிலுள்ள மைக்ரோபோனினால் அது தலைகீழாகவும் நடந்தது."

"செயலிகளுக்கான ஒலி அனுமதியை நான் அணைத்து வைத்திருந்தபோதும் கூட ஃபேஸ்புக்கின் பிரதான செயலி மற்றும் மெஸ்சேஞ்சர் செயலி ஆகிய இரண்டிலுமே அந்த கிளிக் ஒலியை பல நேரங்களில் கேட்டேன்" என்கிறார்.

நகைச்சுவையாக பேசிய வார்த்தை விளம்பரமாக வந்தது

ஸ்டார்பக்ஸ்
Getty Images
ஸ்டார்பக்ஸ்

"சென்ற வாரம்தான் நான் என்னுடைய வேலையை விட்டேன். நண்பர் ஒருவருடன் அடுத்து எந்த திசையை நோக்கி செல்லவிருக்கிறேன் என்பது குறித்து பேசிக்கொண்டிருந்தேன்," என்கிறார் லின்கனை சேர்ந்த லிண்ட்சே என்பவர்.

"எனக்கு காபி மிகவும் பிடிக்கும் என்பதால், ஒருவேளை நான் ஸ்டார்பக்ஸ்க்கு சென்றால் நிறைய காபி குடிக்க முடியுமென்று கூறினேன்."

"அதற்கடுத்த முறை நான் என் திறன்பேசியில் ஃபேஸ்புக்கை திறந்தபோது, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் புதிய பணியாட்களை தேர்ந்தெடுப்பதற்கான லண்டனில் முகாமொன்றை நடத்துவதாக விளம்பரம் வந்தது" என்று கூறுகிறார்.

திடீரென வந்த வீட்டு பாதுகாப்பு சாதனங்கள் பற்றிய விளம்பரம்

"தனது வீட்டில் கண்காணிப்பு காமெராவை அமைக்கும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்" என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெலிசா கூறுகிறார்.

"வீட்டு பாதுகாப்பு சாதனங்கள் தொடர்புடைய எவற்றையும் பார்க்க நான் இணையத்தை நாடியதே கிடையாது. ஆனால், வெறும் அரை மணி நேரத்திற்கும் குறைவாக கண்காணிப்பு காமெராவை நிறுவுவது பற்றி பேசியவுடன் , வீட்டு பாதுகாப்பு சாதனங்கள் பற்றிய விளம்பரம் என்னுடைய ஃபேஸ்புக்கில் வந்தது."

"அந்த உரையாடலின் முழு நேரமும் திறன்பேசி என் பாக்கெட்டில்தான் இருந்தது."

நண்பர் பேசியதற்கு ஏற்ற விளம்பரம் எனக்கு வந்தது

கண் சிகிச்சை
Getty Images
கண் சிகிச்சை

"ஒருமுறை என்னுடைய நண்பரொருவர் அவருக்கு லேசர் கண் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாக கூறிக்கொண்டிருந்தார்," என்கிறார் ஓரிகனை சேர்ந்த ஆஸ்டின்.

"அந்த உரையாடலுக்கு பின்பு நான் உடனடியாக ஃபேஸ்புக்கை திறந்தபோது லேசர் கண் சிகிச்சை பற்றிய விளம்பரம் வந்தது."

"தெளிவான கண்பார்வை திறனுள்ள நான் இதுவரை லேசர் அறுவை சிகிச்சையை பற்றி தேடல் மேற்கொண்டதே இல்லை."

மேற்காணும் நிகழ்வுகளெல்லாம் ஆங்கிலத்தில் பேசுபவர்களின் உரையாடல்கள் வாயிலாக தரவுகளை திரட்டி அதன் மூலம் தகுந்த விளம்பரங்கள் வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள்.

தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் ஆழக் கற்றல் திறன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் வெகுவேகமாக முன்னேறி வரும் நிலையில், தமிழ் மொழியில் நாம் மேற்கொள்ளும் உரையாடல்கள் கூட ஒட்டுக் கேட்கப்படலாம்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ளதாக கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கே இதுபோன்ற விடயங்கள் நடப்பது அசாதாரண ஒன்றாக இருக்கும் போது, முதல் முறை திறன்பேசி பயன்பாட்டாளர்கள் அதிகரித்து வரும் இந்தியா போன்ற வளரும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மின்னணு தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
என் வருங்கால மனைவியும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று மதுபானம் அருந்தினோம். அதற்கடுத்த நாள் காலையிலேயே அது என்னுடைய ஃபேஸ்புக் கணக்கின் முகப்பில் முதல் விளம்பரமாக வந்தது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X