For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதி சி.எஸ் கர்ணன் விவகாரம்... வரம்பு மீறுகிறதா உச்ச நீதிமன்றம்?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு மன நலப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் மே 1 ம் தேதி உத்திரவு பிறப்பித்து விட்டது. நாடு விடுதலை அடைந்த இந்த 69 ஆண்டுகளில் ஒரு உயர் நீதி மன்ற நீதிபதிக்கு மன நலப் பரிசோதனை நடத்த உச்ச நீதி மன்றம் உத்திரவு பிறப்பிப்பது என்பது இதுதான் முதல் முறையாகும்.

Is the Supreme Court crosses its limit in Justice Karnan case?

"புதன் கிழமை, மே 4ம் நாள் இந்த பரிசோதனை நடத்தப்பட வேண்டும். இதற்கான ஒரு சிறப்பு மருத்துவ குழுவை மேற்கு வங்க அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் உடனே அமைக்க வேண்டும். கொல்கத்தாவில் உள்ள பாவ்லோவ் அரசு மருத்துவ மனையில்தான் இந்தப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும்போது தன்னைக் காத்துக் கொள்ளும் அளவுக்கு நீதிபதி கர்ணனின் மன நலமும், உடல் நலமும் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதுதான் இந்த பரிசோதனைகளின் நோக்கம். இந்த மருத்துவ அறிக்கை மே 8 ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப் பட வேண்டும். மே 9 ம் தேதி இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடக்கும். நிலைமை மிகவும் சீரியஸானது என்பதால் நீதிபதி கர்ணனை மருத்துவ பரிசோதனைகளுக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லுவதற்கு ஏதுவாக ஒரு சிறப்பு போலீஸ் குழுவை மேற்கு வங்க டிஜிபி அமைக்க வேண்டும். இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் சுமூகமாக. எந்த தடையும் இல்லாமல் நடப்பதற்கு மேற்கு வங்க டிஜிபி தான் முழு பொறுப்பாகும்''. இவ்வாறு உத்திரவு பிறப்பித்திருக்கிறது தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு.

உச்சமன்ற நீதிபதிகளைப் பற்றி திரும்ப, திரும்ப வரம்பு மீறிய உத்தரவுகளை நீதிபதி கர்ணன் பிறப்பித்த பின்னர் விவகாரம் வெடித்துக் கிளம்பியது. இதற்காக நீதிபதி கர்ணன் மீது தானே முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஃபிப்பவரியில் மேற்கொண்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் இரண்டு முறை சம்மன் அனுப்பியது. ஆனால் ஒரு முறை கூட நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மே 1 ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்திரவுக்கு நீதிபதி கர்ணன் கீழ்படியாததால் மன நல மருத்துவ பரிசோதனைக்கு உச்ச நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்தது.

நீதிபதி கர்ணன் விவகாரம் சுதந்திர இந்தியா கண்டறியாததாகும். கொல்கத்தா உயர் நீதி மன்றத்துக்கு மாற்றப்படுவதற்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தவர்தான் கர்ணன். சக நீதிபதிகளை கேவலமாக விமர்சனம் செய்கிறார் என்பது கர்ணன் மீதான குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட வழக்கு நடந்து கொண்டிருந்த டிவிஷன் பெஞ்ச் முன்பு ஆஜராகி தானே அதில் வாதாடியது உள்ளிட்ட பல விவகாரங்களால் சென்னையிலிருந்து கர்ணன் கொல்கத்தா உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப் பட்டார்.

ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக வரம்பு மீறிய விஷயங்களை பொது வெளியில் கர்ணன் பேசியதால் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் அவருக்கு எந்த கோப்புகளும், அதாவது எந்த வழக்கும் அவர் முன்பு விசாரணைக்கு வைக்கப் படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கும் மேலாக எந்த வழக்கும் நீதிபதி கர்ணன் முன்பு விசாரணைக்கு வரவில்லை.

இந்த பின்புலத்தில் தான் கர்ணனை மே 1 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறு உச்ச நீதி மன்றம் உத்திரவிட்டது. ஆனால் கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மே 1 ம் தேதி கர்ணனுக்கு மன நல பரிசோதனை செய்யப் பட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தும், மேற்கு வங்க டிஜிபி தான் இந்த மன நல பரிசோதனைகள் எந்த விதமான இடையூறுகளும் இல்லாமல் நடப்பதற்கு முழு பொறுப்பு என்று கூறியதும் நீதிபதி கர்ண னை மேலும் கோபப்படுத்தி விட்டது.

இதற்கு பதிலடியாக கர்ணன் செய்த காரியம் சுவாரஸ்யமானது. "இந்தியாவின் எந்த விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் வழியாகவும் தலைமை நீதிபதி கேஹர் மற்றும் மற்ற ஆறு நீதிபதிகளும் தப்பித்துப் போகாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். நீதிபதி கேஹர் மற்றும் ஆறு நீதிபதிகளை டில்லி போலீசின் டிஜிபி உடனடியாக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மன நல பிரிவுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல வேண்டும். என்னை மருத்துவ மனைக்கு கொண்டு போக மேற்கு வங்க போலீஸ் என் வீட்டுக்கு வந்தால் மேற்கு வங்க டிஜிபி யை நான் சஸ்பெண்ட் செய்து விடுவேன்,'' என்று ஒரு அறிக்கையை மீடியாக்களுக்கு கொடுத்து விட்டார்.

தற்போதய மில்லியன் டாலர் கேள்வி, மே 4 ம் தேதி நீதிபதி கர்ணன் மருத்துவ பரிசோதனைகளுக்காக, எந்த எதிர்ப்பும் காட்டாமல் கொல்கத்தா போலீசுடன் பாவ்லோவ் அரசு மருத்துவமனைக்கு போவாரா என்பதுதான். கர்ணன் ஒரு வேளை நான் மருத்துவ மனைக்கு வர மாட்டேன் என்று மறுத்தால் மேற்கு வங்க டிஜிபி, நீதிபதி கர்ணனை குண்டு கட்டாக போலீஸ் உதவியுடன் கர்ணனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பாரா? மே 4 ம் தேதி என்ன நடக்கப் போகிறது என்று யாராலும் இப்போது யூகிக்க முடியவில்லை.

இந்த விவகாரத்தின் மற்றோர் முக்கியமான கோணம், கர்ணனுக்கு கட்டாய மன நல பரிசோதனை செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பதுதான். உச்ச நீதிமன்றத்தின் சில மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் தற்போதய தீர்ப்பு சட்ட விரோதமானது மற்றும் வரம்பு மீறியது என்று கூறுகின்ன்றனர்.

"2017 ம் ஆண்டு மன நல சிகிச்சை சட்டம் இது போன்ற உத்திரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது என்றே கூறுகிறது. சம்மந்தப்பட்ட ஒருவர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றஞ் சாட்டப்பட்டிருந்தால் தவிர இது போன்ற உத்திரவுகளை இந்தியாவின் எந்த நீதிமன்றமும் பிறப்பிக்க முடியாது என்று கூறுகிறது இந்த சட்டம். ஆகவே நீதிபதி கர்ணனை கட்டாயப் படுத்தி மன நல பரிசோதனைக்கு உட்படுத்த முயற்சிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்படியே தவறானதுதான். கர்ணனின் சம்மதம் இல்லாமல் அவருக்கு மன நல சோதனை நடத்த முடியாது என்பதுதான் 2017 ம் ஆண்டு மன நல சிகிச்சை சட்டத்தின் சாராம்சமாகும்,'' என்று கூறுகிறார் உச்ச நீதி மன்றத்தின் மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்.

இதே கருத்தைத்தான் ஓய்வு பெற்ற பல நீதிபதிகளும் கூறுகின்றனர். "உச்ச நீதி மன்றம் இன்று தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சட்டத்தின்படி மட்டுமே செயற்பட வேண்டிய உச்ச நீதிமன்றமே இன்று சட்டத்தை மீறிக் கொண்டிருக்கிறது,'' என்று கூறுகிறார் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதி மன்றத்தின் மூத்த நீதிபதி ஒருவர்.

வேறு சில மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதி கர்ணன் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் இந்தளவுக்கு கண்டு கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்கின்றனர்.

"நீதிபதி கர்ணனின் தற்போதய நடவடிக்கைகளைப் பார்த்தால் உச்ச நீதிமன்றத்தில் அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் தன்னைக் காத்துக் கொள்ளும் அறிவும், சட்ட வல்லமையும் அவருக்கு இல்லை என்றுதான் தெரிகிறது. நீதிபதி கர்ணனின் உத்திரவுகளை எவரும் கண்டு கொள்வதில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமானது அடுத்த மாதம், ஜூன் 11 ம் தேதி கர்ணன் ஓய்வு பெற இருக்கிறார். தற்போதைக்கு எந்த வழக்கும் கொல்கத்தா நீதிமன்றத்தில் கர்ணன் முன்பு விசாரணையில் இல்லை. ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். ஒரு வேளை மருத்துவ பரிசோதனையில் நீதிபதி கர்ணன் மன நலம் குன்றியவர் என்று தீர்ப்பு வந்தால் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான விசாரணை என்பது கேலிக்கூத்தானதாக இருக்கும்.

ஏனெனில் தன்னை காத்துக் கொள்ளும் சட்ட வாத்ங்களை முன் வைக்கும் திறமை இல்லாத கர்ணனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. உயர்நீதி மன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதும் இயலாதது (impeachment). காரணம் வரும் ஜூன் 11 ம் நாள் நீதிபதி கர்ணன் ஓய்வு பெறவிருக்கிறார். இவ்வளவு குறுகிய காலத்தில் கர்ணனை impeachment செய்வதும் இயலாத ஒன்று. ஆகவே உச்ச நீதிமன்றம் சில நாட்கள் பொறுமை காத்தாலே நிலைமை சீரடையும்,'' என்று கூறுகிறார் நீதிபதி கர்ணனுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் தொடுத்திருக்கும் வேறு ஒரு வழக்கில் தமிழக அரசின் வழக்கறிஞராக இருக்கும் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகாபால்.

ஆனால் வேணுகோபாலின் இந்த ஆலோசனையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஜூன் 11 ம் நாள் நீதிபதி கர்ணன் ஓய்வு பெற்றாலும் கூட அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் என்று தலைமை நீதிபதி கேஹர் தெரிவித்து விட்டார். மே 18 ம் தேதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதிய உத்திரவை பிறப்பிதிருக்கிறது.

கர்ணன் தலித் சமூகத்தை சேர்ந்தவர். "தான் ஒரு தலித் என்பதாலேயே தன்னை உச்ச நீதிமன்றம் பழிவாங்குகிறது என்று திரும்ப, திரும்ப கர்ணன் கூறும் குற்றச் சாட்டை இதுவரையில் எவரும் பெரியளவில் கண்டு கொள்ளவில்லை.

ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு இந்தியாவில் உள்ள எந்த பெரிய, செல்வாக்கு மிக்க தலித் அமைப்புகளும், தலித் தலைவர்களும் நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக இதுவரையில் பேசவில்லை. நீதிபதி கர்ணன் சில மாதங்களுக்கு முன்பு தலித் அரசியில் கட்சி தலைவர்களான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் போன்றவர்களை சந்தித்து பேசிய பின்னரும் கூட நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக தலித் சமூகத்தின் நாடறிந்த தலைவர்களோ அல்லது தலித் அமைப்புகளோ இதுவரையில் எதுவும் பேசவில்லை என்பது இந்த விவகாரத்தின் மற்றுமோர் முக்கியமான கோணமாகும்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.

English summary
An analysis on justice Karnan Vs Supreme court issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X