
EOS-04 உள்பட 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்! சிறப்புகள் என்ன?
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள் உள்பட 3 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இஓஎஸ்-04 செயற்கைகோள் பூமியிலிருந்து சூரியனின் துருவ சுற்றுப்பாதையில் 529 கி.மீ. தூரத்தில் நிலைக் கொண்டது. அது போல் மற்ற இரு செயற்கைகோள்களும் அதற்குண்டான சுற்று வட்ட பாதைகளில் நிலை கொண்டதாக இஸ்ரோ அறிவித்தது.
இஸ்ரோ சார்பில் செலுத்தப்பட்ட இந்த ஆண்டின் முதல் செயற்கைகோள் திட்டம் இதுவாகும். கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த இரு ஆண்டுகளில் 3 செயற்கைகோள்களை மட்டுமே இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
இஸ்ரோ திட்டமிட்ட முக்கிய செயற்கைகோள் திட்டங்கள் எல்லாம் பல மாதங்கள் தாமதமாகியுள்ளன. இதனால் இந்த ஆண்டு சந்திரயான் 3, ககன்யான் திட்டம் உள்ளிட்ட பெரிய திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து 19 செயற்கைகோள்களை இந்த ஆண்டில் விண்ணில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டின் முதல் ராக்கெட்: காதலர் தினத்தில் விண்ணில் பாயப்போகும் பிஎஸ்எல்வி - சி 52

அதிகாலை தொடங்கிய கவுன்ட்டவுன்
இதன் மூலம் இந்த ஆண்டு தொடக்கமே இஸ்ரோவுக்கு பரபரப்பான ஆண்டாகியுள்ளது. இஸ்ரோ தலைவராக சோம்நாத் பொறுப்பேற்று முதல் செயற்கைகோள் இன்று செலுத்தப்பட்டது. பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட் மூலம் இஓஎஸ் 04 எனும் பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள், இரு சிறிய செயற்கைகோள்களான INSPIREsat-1, INS-2TD ஆகிய 3 செயற்கைகோள்கள் இன்று விண்ணில் ஏவப்பட்டன. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 3.43 மணிக்கு தொடங்கியது.

இஓஎஸ்-04 என்றால் என்ன?
பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களுக்கு அதன் பயன்பாட்டை பொருத்து பெயர் வைக்கும் நடைமுறையை இஸ்ரோ கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. புதிதாக பெயரிடப்பட்ட செயற்கைகோள்களில் இஓஎஸ்-01 கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது தற்போது வட்ட பாதையில் உள்ளது. அது போல இஓஎஸ்-02 எனும் நுண்ணிய செயற்கைகோள் எஸ்எஸ்எல்வி மூலம் இனிதான் ஏவப்பட வேண்டும். இஓஎஸ்-03 கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் செலுத்தப்பட்ட போது தோல்வி அடைந்தது. தற்போது இஓஎஸ்ஸின் 4 ஆவது செயற்கைகோள் இன்று செலுத்தப்பட்டது.

இஓஎஸ் செயற்கைகோள்கள்
இஓஎஸ்-1 ஐ போன்றே இஓஎஸ்-04 செயற்கைகோள் 1,710 கிலோ எடை கொண்டதாகும். இது பூமியிலிருந்து சூரியனின் துருவ சுற்றுப்பாதையில் 529 கி.மீ. தூரத்தில் நிலைக் கொண்டது. இது ஒரு ரேடார் இமேஜிங் செயற்கைகோளாகும். கடந்த இரு ஆண்டுகளாக செயலற்று கிடக்கும் 2012 இல் செலுத்தப்பட்ட RISAT-1 எனும் செயற்கைகோளின் மாற்று இந்த இஓஎஸ்-04 ஆகும். ரேடார் இமேஜிங் செயற்கைகோளை பயன்படுத்துவதால் வானிலை மாற்றங்கள், மேகங்கள், பனி, சூரிய வெளிச்சமின்மை (இரவு நேரம்) உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படாமல் துல்லியமான படங்களை தரும். உயர்தர படங்களை எல்லா சூழல்களிலும் அனுப்பிக் கொண்டே இருக்கும்.

வனத்துறை
விவசாயம், வனத்துறை, மண்ணின் ஈரப்பதம், நீரியியல், வெள்ள பாதிப்பு சார்ந்த ஆய்வுகளுக்கு தரமான புகைப்படங்களை அனுப்புவதற்காக இஓஎஸ்-04 எனும் செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கெனவே வட்ட பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் Resourcesat, cartosat, RISAT-2B ஆகிய செயற்கைகோள்களிடம் இருந்து தகவல்களையும் இஓஎஸ் 04 பெற்று தரும்.

மாணவர்கள் வடிவமைத்த INSPIREsat-1
INSPIREsat-1 எனும் செயற்கைகோள் மாணவர்களால் வடிவமைக்கப்பட்டது. திருவனந்தபுரத்தை சேர்ந்த இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் அமெரிக்காவில் உள்ள கொலோராடோ பல்கலைக்கழகமும் இணைந்து இந்த செயற்கைகோளை கட்டமைத்து சோதனை செய்தது. அது போல் சிங்கப்பூர் பல்கலைக்கழகமும், தைவான் பல்கலைக்கழக மாணவர்களும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர். வளிமண்டலத்தின் மேல் பகுதியின் இயக்கத்தை ஆய்வு செய்ய இந்த செயற்கைகோள் பயன்படுகிறது. இதில் சூரிய ஒளி கதிர்களை ஆய்வு செய்ய எக்ஸ் ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

INS-2TD என்றால் என்ன?
INS-2TD எனும் செயற்கைகோள் இந்தியா- பூட்டான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கடந்த ஆண்டு கையெழுத்தானது. நீர், நில பகுதியின் வெப்பநிலையை ஆய்வு செய்வது, வனங்கள், மரங்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட பயன்பாட்டுக்காக தெர்மல் இமேஜிங் (வெப்பம் தாங்கி படமெடுக்கும் கேமரா) கேமராவுடன் அனுப்பப்பட்டுள்ளது. இதுவும் பூமியை கண்காணிக்கும் நோக்கத்துடையதுதான்.

எது முதலில் பிரிந்து செல்லும்?
இந்த 3 செயற்கைகோள்களில் இஓஎஸ்-04 செயற்கைகோள் செலுத்தப்பட்ட 18 நிமிடங்களில் பிஎஸ்எல்வி ராக்கெட்டை விட்டு பிரிந்து செல்லும். அதாவது இந்த ராக்கெட்டிலிருந்து முதலில் பிரிந்து செல்லும் செயற்கைகோள் இஓஎஸ் ஆகும். மற்ற இரண்டும் சில நிமிடங்களில் ராக்கெட்டை விட்டு பிரிந்து சென்று ஆங்காங்கே நிலைநிறுத்தப்படும். இன்று செலுத்தப்பட்ட ராக்கெட் 54 ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் ஆகும். இந்தியாவில் தற்போது 53 செயற்கைகோள்கள் இயங்கி கொண்டிருக்கின்றன. அதில் 21 பூமியை கண்காணிப்பது, இன்னொரு 21 செயற்கைகோள்கள் தகவல் தொழில்நுட்பம் தொடர்புடையது. 8 நேவிகேஷன் செயற்கைகோள்கள், 3 அறிவியல் தொடர்பான செயற்கைகோள்கள் ஆகும். இந்த தரவுகள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியதாகும்.