For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்மையை மறைக்க என்னா பாடுபட வேண்டியிருக்கு.. அட ஆண்டவா!

Google Oneindia Tamil News

அதென்னவோ தெரியல, நம்ம பிரதமர் மோடி ஜி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜி ஆகிய இருவருக்கும், சுவருக்கும் இடையில் அப்படியொரு பாசப் பிணைப்பு இருப்பதாகவே தெரிகிறது.

அமெரிக்காவின் அண்டை நாடு மெக்சிகோ. இது உலகளவில் போதைப் பொருட்களின் பிரதான குடோனாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்துதான் உலகின் பல நாடுகளுக்கும் டன் டன்னாக போதைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

it is not an easy job to hide the truth

மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க இரு நாடுகளுக்கும் இடையில் தடுப்புச் சுவர் கட்டியே தீர வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார் டிரம்ப். '’ அட போங்கப்பா… கடத்தலைத் தடுக்க வேற வழியே இல்லையா! சுவர் கட்டித்தானா தடுக்க வேண்டும்! இந்த டிரம்புக்கு வேற வேலையே இல்லையா!’’ என பெரும்பாலான அமெரிக்க மக்கள் டிரம்பை விளாசி வருகிறார்கள்.

அண்மைக் காலமாக டிரம்பின் பாப்புலாரிட்டி கிராப், தாறுமாறாக கீழே இறங்குவதற்கு அவரது இந்த கோக்குமாக்குத்தனமான யோசனையும் ஒரு காரணம் என்கிறார்கள் பலரும். அமெரிக்க அதிபரைப் போல இந்திய பிரதமருக்கும் இதேபோல ’சுவர் பிரச்சனை’ ஏற்பட்டதுண்டு.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மோடி தமிழகம் வந்தபோது பொதுவெளியிலும், இணையத்திலும் எதிர்ப்பு கொளுந்துவிட்டு எரிந்தது. எங்கும் ’கோபேக் மோடி’ என்பதே பேச்சாக இருந்தது. சென்னை ஐஐடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார் மோடி. வழக்கமான பாதையில் சென்றால் பிரச்சனை வரக்கூடும் என்பதால் அங்குள்ள சுவர் ஒன்றை உடைத்து அதன் வழியாகவே மோடியை அழைத்துச் சென்றார்கள்.

இப்போது இதே மாதிரியான காட்சி, கொஞ்சம் மாறுதல்களுடன் குஜராத்தில் நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது இந்திய பயணத்தை முன்னிட்டு குஜராத் தலைநகர் அகமதாபாத் செல்ல இருக்கிறார். டிரம்பின் 3 மணி நேர விசிட்டிற்காக சுமார் 100 கோடி ரூபாயைக் கொட்டி குஜராத் பாஜக அரசு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

it is not an easy job to hide the truth

டிரம்ப் செல்லும் பாதையை நோட்டமிட்ட அதிகார வர்க்கத்தின் கண்களை அங்கிருந்த குடிசைப் பகுதி ரொம்பவே உறுத்தியது. தப்பித்தவறி டிரம்ப் இதைப் பார்த்துவிட்டால் என்னாவது என பதறியவர்கள், உடனடியாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆம்… குறிப்பிட்ட அந்த குடிசை பகுதி டிரம்ப் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதைச் சுற்றிலும் நீளமான சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

குஜராத் அரசின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் செமத்தியாகக் கலாய்த்து வருகிறார்கள். '’குஜராத்தில் குடிசைப் பகுதிகளா! மோடி முதல்வராக இருந்தபோது குஜராத் தேவலோகம் போல மாறிவிட்டதாக சொன்னதெல்லாம் உடான்சா” என பலரும் ரவுண்டு கட்டி வருகின்றனர். '’எதுக்குப்பா இவ்வளவு செலவழிக்கணும்! டிரம்ப் பயணம் செய்யும் காரில் ஸ்கிரீனைப் போடுங்க. அப்படி செய்தால் வெளியில் இருப்பதை அவரால் எப்படி பார்க்க முடியும்!’’ என ஒரு சாராரும், '’பூனை கண்ணை மூடிவிட்டால் உலகமே இருட்டாகிவிடுமா! சாட்டிலைட்டுகள் மூலம் உலகத்தின் எல்லா பகுதிகளையும் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு அகமதாபாத்தில் குடிசைப் பகுதி இருப்பது தெரியாமலா இருக்கும்!’’ என மற்றொரு தரப்பினரும் நக்கலடித்து வருகின்றனர்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சென்னையில் குறிப்பாக வட சென்னையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஆர்.கே நகரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. வெள்ளப் பகுதிகளை ஜெயலலிதா பார்வையிட இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டது. அமைச்சர்களும் அதிகாரிகள் சும்மா இருப்பார்களா என்ன!

ஜெயலலிதா கண்ணில் கொஞ்சமும் தண்ணீர் பட்டுவிடக் கூடாது என்பதைக் குறியாகக் கொண்டு ராட்சத பம்புகள் மூலம் வெள்ள நீரை சுத்தமாக வெளியேற்றினார்கள். ஜெயலலிதாவும் வந்தார். தூர்த்துத் துடைத்து சுத்தமாக வைக்கப்பட்டிருந்த பகுதிகளைப் பார்த்த அவருக்கு மனதில் என்ன தோன்றியதோ…தெரியவில்லை. '’அன்பான வாக்காள பெருமக்களே’’ என தேர்தல் காலம் போல பேச, அங்கிருந்தவர்கள் ஆடிப் போனார்கள்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு அரசியல் கட்சி ஒன்றின் மருத்துவர் அணி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை ஏற்பாடு செய்தவர், ’’ஒரு டாக்டர் விடாமல் அத்தனை பேரையும் ஆஜர்படுத்தி விடுகிறேன்’’ என தலைமையிடம் கெத்து காட்டியிருந்தார். கூட்டத்தை கவர் பண்ண வழக்கம்போல ரிப்போர்டர்கள் போயிருந்தனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்களின் முகங்களில் மருத்துவர்களுக்கான அறிகுறிகளே தென்படவில்லை. கூட்டம் முடிந்த பிறகு சந்தேக வளையத்தில் இருந்த ஒருவரை நைசாக ஓரம்கட்டி விசாரித்திருக்கின்றனர்.

'’இன்னாது டாக்டரா…நானா! வட்டச் செயலாளர் நம்ம தோஸ்து. ஒயிட் அண்ட் ஒயிட் டிரெஸ் போட்டிட்டு வரச் சொன்னாரு. அப்படியே வந்தேன்’’ என உண்மையைப் போட்டு உடைத்தார் அவர்.

உண்மைகள், ஊருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் அரசியல்வாதிகளுக்கு மற்றவர்களும் சளைத்தவர்கள் அல்ல. நெல்லை அருகிலுள்ள ஒரு அரசு பள்ளிக்கு அண்மையில் விசிட் அடித்திருக்கிறார் மாவட்ட கல்வி அலுவலர். அலுவலகத்தின் அருகே சுத்தம், சுகாதாரத்தை வலியுறுத்தும் மிகப் பெரிய துணி போர்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த போர்டை கடந்து சென்றபோது அதிகாரியின் மூக்கை கெட்ட வாடை பதம் பார்க்க, சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஆய்வை முடித்துவிட்டு திரும்பும் சமயம், விறுட்டென அந்த துணி போர்டை விலக்கிப் பார்க்க, அங்கே டன் கணக்கில் குப்பை தேங்கியிருந்தது தெரியவந்தது. சாமர்த்தியமாக குப்பையை மறைத்த தலைமை ஆசிரியரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார் கல்வி அதிகாரி.

ஆக உண்மைகளை மூடி மறைக்கும் போக்கு, உயர் மட்டங்களில் தொடங்கி சாதாரண மனிதர்கள் வரை பரவியிருப்பது மறுக்க முடியாத நிஜமாக உள்ளது. எவ்வளவு சிரமப்பட்டு உண்மைகளை மூடி மறைத்தாலும் அவை ஏதோ ஒரு வடிவத்தில் எப்படியாவது வெளிவந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும் அவலங்களை, தவறுகளை தார்பாய் போட்டு மூடும் பழக்கத்தை மனிதர்கள் இன்னமும் விடக் காணோம்!

-கௌதம்

English summary
Always it is not easy to hide the truth behind something.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X