For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜேஎன்யூ பல்கலையில் தொடங்கப்போகும் 'விஷமத்தனமான' பாடப்பிரிவு.. முஸ்லீம் லீக் கண்டனம்

ஜேஎன்யூ பல்கலை.யில் இஸ்லாமிய தீவிரவாதம் பாடப்பிரிவு தொடங்குவதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்ற பெயரில் பாடப்பிரிவு தொடங்க இருப்பது வேதனை அளிக்கிறது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இஸ்லாமியத் தீவிரவாதம் என்கிற தலைப்பில் பாடப்பிரிவைத் தொடங்க பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில் முடிவு செய்துள்ளதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

மனித நெறியை வளர்க்கும் ஞானச் சோலைகளான பல் கலைக்கழகங்கள் மதவெறி மூலம் மக்களை பிரிக் கும் வெறுப்பு முறையை கற்பிக்கக்கூடாது என்று பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 அகாடமிக் கவுன்சில் கூட்டம்

அகாடமிக் கவுன்சில் கூட்டம்

மேலும் அந்த அறிக்கையில், டெல்லியில் உள்ள சர்வதேச தரமுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக "அகாடமிக் கவுன்சில்" தனது 145-வது கூட்டத்தை 18-05-2018 வெள்ளிக்கிழமை நடத்தியுள்ளது. அதில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நடத்துவதற்கென ஒரு சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மையத்தில் நக்ஸலிஸம், ஆயுதக்கிளர்ச்சி, எல்லைப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, சமாதானத்துக்கான இராணுவ நடவடிக்கை போன்ற தலைப்புகளில் புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. இந்தத் தலைப்புகளுடன் "இஸ்லாமிய தீவிரவாதம்" என்னும் பாடப்பிரிவும் இணைக்கப்பட்டிருக்கிறது.

 பேராசிரியர்கள் எதிர்ப்பு

பேராசிரியர்கள் எதிர்ப்பு

உலகில் உள்ள எந்த நாட்டிலும், எந்தவொரு பல்கலைக் கழகத்திலும், இதுவரை அறிமுகம் செய்யாத ஒரு பாடப் பிரிவை "இஸ்லாமிய தீவிரவாதம்" என்பதை ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தொடங்க இருப்பது அதிர்ச்சியூட்டும் ஆச்சரியமாக இருக்கிறது.

‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் இந்தச் செய்தியைத் தந்துள்ள சுமி சுகன்யா துட்டா என்னும் செய்தியாளர், அகடமிக் கவுன்சில் உறுப்பினர்களில் பல அனுபவமிக்க பேராசிரியர்கள் இதற்கு மிகுந்த எதிர்ப்பையும் தெரிவித்தும் கூட, அதனையும் மீறி "இஸ்லாமிய தீவிரவாதம்""என்னும் பாடப்பிரிவுக்கு ஆதரவு தெரிவித்துத் தீர்மானித்துள்ளனர் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

 ஆராய்ச்சிப்படிப்பு துவக்கம்

ஆராய்ச்சிப்படிப்பு துவக்கம்

பல்கலைக்கழக ஆய்வுத் துறைகளில் ‘மதத்தீவிரவாதம்' என்பது பற்றி ஆய்வு செய்வதற்கு ஒரு பாடப்பிரிவைத் தொடங்கினால் அது அறிவுப் பூர்வமானதாக அமையும்; ஆனால், ஒரு மதத்தைக் குறி வைத்து, அதனுடன் தீவிரவாதத்தை தொடர்புபடுத்தி, அதை ஆராய்ச்சிக்குரிய பாடப் பிரிவாக அறிவிப்பது, பல்கலைக் கழகத்தின் தன்மைக்கே முரண்பட்டது; மாறுபட்டது; பாரபட்சமானது; குறுகிய புத்தியின் வெளியீடாக அமைந்திருப்பது என்பது வெள்ளிடைமலை.

 வெறுப்பை கற்பிக்க முடிவு

வெறுப்பை கற்பிக்க முடிவு

மத்தியில் பாஜக ஆட்சி வந்ததிலிருந்து இந்துத்துவ துவேசத்தின் வாடைக்காற்று வடக்கே தொடர்ந்து வீசிவருகிறது. அந்த வேண்டாத ஒன்றைத் தடுப்பதற்கு பல்கலைக்கழகங்களில் இருந்து அறிவுத்தென்றல் காற்று வீசும் என்று நினைக்கிற நாட்டு மக்கள் உள்ளங்களில் நேரு பல்கலைக்கழகம் ஈட்டியைப் பாய்ச்சியிருக்கிறது. இது மிகவும் வன்மையாகக்கண்டிக் கப்படவேண்டிய ஒன்றாகும்.

பல்கலைக்கழகங்கள் மனித நேய நெறியை வளர்க்கும் ஞானச் சோலைகள் ஆகும், அங்கே மதவெறியை, மததுவேஷத்தை, மதமாச்சரியத்தை, மத வேறுபாட்டை, அதன் மூலம் மக்களைப் பிரிக்கும் வெறுப்பு முறையை கற்பிக்கக்கூடாது.

 மதத்திற்கு எதிரான பிரசாரம்

மதத்திற்கு எதிரான பிரசாரம்

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் ‘இஸ்லாம் ஃபோ பியா' என்னும் கொடிய விஷத்தைத் தூவி, மக்களை, முஸ்லிம்களுக்கு விரோதமாகத் தூண்டும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இஸ்லாம் என்பது மானிடருக்கு அழிவு தரும் மார்க்கம் என்றும், உலகில் உள்ள மதங்கள் அனைத்தையும் அழிப்பதற்காகவே இஸ்லாம் வந்திருக்கிறது என்றும், இந்த இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள ஒரு தீவிரவாதக் கூட்டம் இஸ்லாமிய ஆட்சியை உலக நாடுகள் அனைத்திலும் கொண்டு வருவதற்காக வன்முறைச் சம்பவங்களைச் செய்கின்றது என்றும், இத்தகைய தீவிரவாதத்தைப் பரப்பும் முஸ்லிம்களுக்கு எதிராக உலக நாடுகளும், உலக மதங்களும் போர் தொடுக்க வேண்டும் என்றும் பேசியும், எழுதியும், பிரச்சாரம் செய்தும் வருகின்றனர். இத்தகைய விரோத மனங்கொண்டோர் பரப்பிவரும் சுலோகமே "இஸ்லாமிய தீவிரவாதம்"" என்பதாகும்.

 கடுமையாக எதிர்ப்பு

கடுமையாக எதிர்ப்பு

இந்திய நாடாளுமன்ற உள்துறை அமைச்சகத்தின் நிலைக்குழுவில் இதுபற்றிய விவாதம் பலமுறை வந்திருக்கிறது. "இஸ்லாமிய தீவிரவாதம்" என்று கூறப்பட்ட நேரத்தில் எல்லாம் எந்த விதத்திலும் தீவிரவாதம் ஒரு கொள்கையாகப் போதிக்கப்படவில்லை; மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தீவிரவாதம் என்பது ஒரு தனி சாதி, ஒரு தனி மதம், ஒரு தனியான போக்கு! ஆகவே, இஸ்லாமிய தீவிரவாதம் என்பதை எந்தவொரு அரசு ஆவணத்திலும் பயன்படுத்தக்கூடாது. இந்து தீவிரவாதம், சீக்கிய தீவிரவாதம், கிறிஸ்தவ தீவிரவாதம், புத்த, சமண தீவிரவாதம் என்றெல்லாம் குறிப்பிடுவது கேலிக்குரியதாகும் என்று கடுமையாக எதிர்த்துள்ளோம்.

 சுஷ்மா சுவராஜின் முடிவு

சுஷ்மா சுவராஜின் முடிவு

நிலைக்குழுத் தலைவராக இருந்தவர், இன்றைக்கு இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள், மதத்துடன் தீவிரவாதத்தை இணைத்துப் பேசுவது அறிவுக்கோ, நடைமுறைக்கோ பொருந்தாத ஒன்றாகும் என்று கூறி, இஸ்லாமிய தீவிரவாதம் என்னும் சொற்றொடரை ஆவணங்களில் இருந்து நீக்கினார். ஆனால், இன்றைக்கு நேரு பல்கலைக்கழகம், தீவிரவாத பிரச்சார பீரங்கியாக செயல்பட முன் வந்திருக்கிறது.

 போஸ்னியா முஸ்லிம்கள் மீது வன்முறை

போஸ்னியா முஸ்லிம்கள் மீது வன்முறை

மியான்மர் (பர்மா) நாட்டி யல் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக ராக்சைன் மாகாணத்தில் உள்ள 25 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது சொல்லொண்ணாக் கொடுமை களை மியான்மர் அரசு செய்து வருகிறது. அடிமைகளாக்கி, நாடு கடத்தி, கொடுமைப்படுத்திக் கொன்று வருகிறார்கள். இதை "புத்த தீவிரவாதம்""என்று யாரும் சொல்வதில்லை. ஐரோப்பா கண்டத்தில் போஸ்னியா நாட்டு முஸ்லிம்களை கொடுமைப்படுத்திய கிறிஸ்து ஆட்சியாளர்கள் மீது "கிறிஸ்துவ தீவிரவாதம்""என்று யாரும் குற்றம் சுமத்தவில்லை.

 இஸ்லாத்திற்கு எதிரானது

இஸ்லாத்திற்கு எதிரானது

இன்றைக்கும் நாள்தோறும் பாலஸ்தீனிய பாமரர்களைக் கொன்று குவித்துவரும் இஸ்ரேல் அரசின் கோரத் தாண்டவத்தை யாரும் "யூத தீவிரவாதம்""என்று குறிப்பிடவில்லை. உலகில் வாழும் 187 கோடி முஸ்லிம்களில் அங்கேயும் இங்கேயும் சில திசைமாறிப் போன இளைஞர் குழாத்தினர் ஆங்காங்கே நடத்தும் சில வன்முறைச் சம்பவங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, உலகப் பெருமார்க்கமாகவுள்ள இஸ்லாத்திற்கு எதிராகவும் விரோதமாகவும் "இஸ்லாமிய தீவிரவாதம்" என்னும் பிரச்சாரம் கிளப்பப்பட்டுவருகிறது. உலகில் வேறு எங்குள்ள ஏதாவதொரு பல்கலைக் கழகத்தில் இப்படிப்பட்ட தீர்மானம் வந்திருந்தால் கூட நாம் பெரும் கவனத்திற்குள் எடுத்திருக்கப் போவதில்லை.

 அரசின் பாரபட்சம் ஏன் ?

அரசின் பாரபட்சம் ஏன் ?

எல்லோருக்கும் இனியவராகத் திகழ்ந்த முதல் இந்திய பிரதமர் நேருஜி அவர்கள் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் இந்த ஓரவஞ்சனையா? பாரபட்சமா? என்பதால் உள்ளம் கொதிக்கிறது. நான் பிறப்பால் ஒரு இந்துவாக இருக்கலாம்; ஆனால் கலாச்சாரத்தால் ஒரு முஸ்லிமாகவும், கல்வியால் ஒரு ஐரோப்பியனாகவும் இருக்கிறேன் என்று கூறியவர் ஜவஹர்லால் நேரு! அவர் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்தப் பாதகமா? என்பதால்தான் இந்த வேதனைப் பெருமூச்சு! பல்கலைக்கழகங்கள் ஞான பீடங்களாகத் திகழவேண்டுமே தவிர, அஞ்ஞானத்தின் பிறப்பிடங்களாக மாறிவிடக்கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
IUML condemns JNU for the Course on Islamic Terrorism . IUML Leader Khadeer Moideen condemns JNU and Central Goverment for the course on JNU named Islamic Terrorism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X