For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்ட விரோத கனிம குவாரி வழக்கில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி மீதான அனைத்து வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கிடைத்துள்ளது. எனவே மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து ரெட்டி வெளியேவர வாய்ப்பு கிடைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிளின் மகன்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி மற்றும் சோமசேகர ரெட்டி. ஆனால் இன்று இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் இவர்களுக்கு தவறாமல் இடம் உள்ளது. இதற்கு காரணம் கனிம குவாரி தொழில்.

குவாரித் தொழிலில் பிரபலமான இவர்கள், ரெட்டி சகோதரர்கள் என்று அன்போடு அழைக்கப்பட்டனர்.

சுஷ்மாவின் செல்ல பிள்ளை

சுஷ்மாவின் செல்ல பிள்ளை

பெல்லாரி மாவட்டத்தில், தாராளமாக, கிடைக்கும் இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வந்த ரெட்டி சகோதரர்கள் பாஜகவில் சேர்ந்து சுஷ்மா சுவராஜின் செல்ல பிள்ளைகளாக மாறினர். எடியூரப்பா அமைச்சரவையில் ரெட்டி சகோதரர்களில் முதல் இருக்கும் அமைச்சர் பதவியும், மூன்றாவது ரெட்டிக்கு வாரியத் தலைவர் பதவியும் கொடுத்து அழகு பார்க்கப்பட்டது.

எடியூரப்பா அரசையே ஆட்டினர்

எடியூரப்பா அரசையே ஆட்டினர்

ஆனால் பேராசை காரணமாக, சட்டவிரோதமாகவும் கனிமங்களை வெட்டி எடுத்தனர், அளவுக்கு அதிகமாக தாதுக்களை வெளிநாட்டுக்கு கடத்தினர் என்று ரெட்டிகள் மீது குறிப்பாக சுரங்க பிசினசை கவனித்து வந்த ஜனார்த்தன ரெட்டி மீது குற்றச்சாட்டு எழுந்தது. எனவே எடியூரப்பா நடவடிக்கையை தொடங்கிய நிலையில், ஆட்சியையே கலைக்கும் அளவுக்கு சென்றனர் ரெட்டி சகோதரர்கள். 53 பாஜக எம்.எல்.ஏக்களுக்கு விலைபேசி ரிசார்ட்டுகளுக்கு அழைத்துச் சென்ற ஜனார்த்தனரெட்டி ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுவேன் என்று மிரட்டினார்.

மாநில எல்லையையே மாற்றினர்

மாநில எல்லையையே மாற்றினர்

இதன்பிறகுதான் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. 2011ம் ஆண்டு செப்டம்பர் 5ம்தேதி, சட்டவிரோத சுரங்க தொழில் தொடர்பாக சிபிஐ, ஜனார்த்தனரெட்டியை கைது செய்தது. ஆந்திர-கர்நாடக எல்லையில் ரெட்டிக்கு சொந்தமான 'ஓபலாபுரம்மைனிங்' நிறுவனம் சட்டவிரோதமாக ரிசர்வ் வனப்பகுதியில் தொழில் செய்ததையும், மாநில எல்லையையே மாற்றியமைத்ததையும் சிபிஐ கண்டுபிடித்து இந்த நடவடிக்கையை எடுத்தது.

நீதிபதிக்கு லஞ்சம்

நீதிபதிக்கு லஞ்சம்

இந்நிலையில், வழக்கில் இருந்து வெளியேவர நீதிபதி ஒருவருக்கு லஞ்சம் தர ஜனார்த்தனரெட்டி பேரம் பேசிய சிடி காட்சிகள் வெளியே வந்து அதுவும் ஒரு புகாராக பதிவு செய்யப்பட்டது. ஆகமொத்தம், ஆந்திராவில் 2 வழக்குகள் ரெட்டிமீது பதியப்பட்டன. அதேபோல கர்நாடகாவில் நடந்த சட்டவிரோத குவாரித் தொழில் தொடர்பாக 5 வழக்குகள் பதிவாகின. இதில் நீதிபதிக்கு லஞ்சம் தர முயன்றது உள்ளிட்ட ஆறு வழக்குகளில் சில கால இடைவெளிகளில் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் ஓபலாபுரம்மைனிங் பிரச்சினையில் இதுவரை ஜாமீன் கிடைக்காமல் இருந்துவந்தது. எனவே ஜனார்த்தன ரெட்டி தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார்.

நிபந்தனை ஜாமீன்

நிபந்தனை ஜாமீன்

இந்நிலையில், ஒபலாபுரம் பிரச்சினை தொடர்பான ஜாமீன் மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, ஜனார்த்தன ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.10 லட்சம் தொகை, 2 பேரின் பிணையம், பாஸ்போர்ட்டை ஒப்படைத்தல் போன்ற நிபந்தனைகளுடன், சொந்த மாவட்டமான பெல்லாரிக்குள் செல்ல கூடாது என்ற நிபந்தனையும் உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் நடைமுறைகள் முடிந்து நாளை அல்லது நாளை மறுநாள், ஆந்திர சிறையில் இருந்து ஜனார்த்தனரெட்டி வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர காற்று..

சுதந்திர காற்று..

முன்னாள் அமைச்சர், பெரும் தொழிலதிபர் போன்ற அந்தஸ்துகளை சுமந்த ஜனார்த்தன ரெட்டி, சுமார் மூன்றரை ஆண்டு காலத்திற்கு பிறகுதான் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Karnataka minister and mining baron G Janardhan Reddy has managed to get bail in all cases pending against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X