For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Exclusive: ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனையை அதிகரிக்க ஹைகோர்ட்டில் வாதம்- பவானி சிங் தடாலடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: நெருக்கடி தந்ததால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்புக்காக வாதாடுவதில் இருந்து விலகி கொண்டதாக மூத்த வக்கீல் பி.வி.ஆச்சாரியா கூறியிருக்க கூடாது என்று ஜெயலலிதா வழக்கின் தற்போதைய அரசு வக்கீல் பவானிசிங் தெரிவித்தார்.

மேலும், ஹைகோர்ட்டில் நடைபெற உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையிட்டின்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க கோரி வாதிட திட்டமிட்டுள்ளதாகவும் பவானிசிங் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டவர் பி.வி.ஆச்சாரியா.

Jaya case: Would ask the High Court to uphold the sentence or seek an enhancement of the same- Bhavani singh

ஆச்சாரியா குமுறல்

ஜெயலலிதா தரப்புக்கு எதிராக கடும் வாதங்களை எடுத்து வைத்த ஆச்சாரியாவுக்கு அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து நெருக்கடிகள் தரப்பட்டதாக கூறப்படுகிறது. நெருக்கடிகளால்தான் அரசு வக்கீல் பதவியை பாதியிலேயே ராஜினாமா செய்தேன் என்று ஆச்சாரியா சமீபத்தில் வெளியிட்ட சுய சரிதை புத்தகத்திலும் கூறியுள்ளார்.

பவானிசிங் சிறப்பு பேட்டி

இந்நிலையில் ஜெயலலிதா வழக்கில், ஆச்சாரியாவுக்கு அடுத்ததாக அரசு வக்கீலாக நியமிக்கப்பட்ட பவானிசிங் இந்த கூற்றை ஏற்க மறுக்கிறார். இதுகுறித்து 'ஒன்இந்தியாவுக்கு' இன்று அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டியில் பவானிசிங் கூறியதாவது:

ஜெயலலிதா மீதான வழக்கின் ஆரம்ப கட்டத்தில்தான் ஆச்சாரியா வாதாடினார். இருப்பினும் நெருக்கடி காரணமாக வழக்கில் இருந்து பின்வாங்கியதாக கூறியுள்ளார். வக்கீல்களுக்கு என்ன அப்படியொரு நெருக்கடி? இதெல்லாம் வக்கீல்கள் பணியில் சகஜமாக நிகழக் கூடியதுதான்.

எனக்கு நெருக்கடி வரவில்லையே..

ஒரு வழக்கறிஞர் என்பவர், தான் ஆஜராகும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் யார் என்று பார்க்க கூடாது. குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் சமூகத்தில் உயர்ந்த மதிப்பில் உள்ளவர்களா? கடை நிலையில் உள்ளவர்களா என்பதையெல்லாம் வக்கீல்கள் பார்க்க தேவையில்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தான். நான்தான் வழக்கின் பெரும்பகுதியில் அரசு வக்கீலாக ஆஜரானேன். ஆனால் எனக்கு எதிராக எந்த நெருக்கடியும் தரப்படவில்லையே..!

ஆச்சாரியா சொன்னது சரியில்லை

ஒரு வழக்கில் இருந்து வெளியேற வேண்டுமானால் வக்கீல்களுக்கு உரிய காரணம் இருக்க வேண்டும். ஆனால் ஆச்சாரியா கூறிய காரணம் சரி அல்ல. நான் அந்த காரணத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன்.ஜெயலலிதா வழக்கு விசாரணையில், நான்கில் ஒரு பங்குதான் ஆச்சாரியா ஆஜரானார். ஆனால் முக்கால்வாசி வழக்கில் நான்தான் ஆஜராகி பலமான வாதங்களை எடுத்து வைத்தேன். ஆச்சாரியா வாதிடும்போது வழக்கு முக்கிய கட்டத்தை எட்டவில்லை. நான் ஆஜராக ஆரம்பித்தபோதுதான் வழக்கின் கடினமான பாதை ஆரம்பித்திருந்தது. அனைத்து வகையான திருப்பு முனைகளும் நான் வாதிடும் காலத்திலேயே நடந்துள்ளன.

கருணாநிதி குற்றச்சாட்டு

நான் வாதாட ஆரம்பிக்கும்போது ஏகப்பட்ட ஆவணங்களை படித்து பார்க்க வேண்டியிருந்தது. ஏற்கனவே வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக தள்ளிப்போனதால் வேகமாக வழக்கை முடிக்க வேண்டிய நிலையிலும் நான் இருந்தேன். இப்படி முக்கியமான நேரத்தில் வாதிட்ட எனக்கே எந்த நெருக்கடியும் தரப்படவில்லை. இதை நான் உறுதியாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நெருக்கடி வரவில்லை என்றாலும், நான் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழத்தான் செய்தது. கருணாநிதியே நேரடியாக என்மீது புகார் சொன்னார். ஆனால் இதையெல்லாம் நான் பெரிதாக நினைக்காமல், எனது கடமையை மட்டும் செய்தேன்.

கருணாநிதி தனது தவறை உணர்ந்திருப்பார்

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியானபோது, தனது குற்றச்சாட்டு தவறானது என்பதை கருணாநிதியே உணர்ந்திருப்பார். வக்கீல்கள் எப்போதுமே நெருக்கடிக்கோ, குற்றச்சாட்டுகளுக்கோ அசராமல் பணியாற்ற வேண்டும். அதிலும், அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகளில் இதெல்லாம் சாதாரணம். எதைப்பற்றியும் கவலைப்படாமல் நமது கவனத்தை முழுக்க முழுக்க வழக்கில்தான் வைக்க வேண்டும்.

அடுத்தகட்ட நடவடிக்கை?

ஜெயலலிதா மீதான வழக்கில், இன்னும் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் பல உள்ளன. ஜாமீன் மனு மீதான விசாரணையும் எனக்கு ஒரு சவால்தான். தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையிலும் அரசு தரப்பில் நான்தான் ஆஜராகப்போகிறேன். சிறப்பு கோர்ட் அளித்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும், அல்லது தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று ஹைகோர்ட்டில் நான் வாதிட உள்ளேன். இதில், எந்த வாதத்தை முன்வைக்கலாம் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏனெனில் இன்னும் சில ஆவண வேலைகள் பாக்கி உள்ளன. வழக்கின் ஆரம்ப கட்டத்தில் நிகழ்ந்ததை போன்ற காலதாமதம் இனிமேல் நடக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். இவ்வாறு பவானிசிங் தெரிவித்தார்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Fighting a case which involves J Jayalalithaa the former Chief Minister of Tamil Nadu is no mean task. The case was initially conducted by B V Acharya who was appointed as the Special Public Prosecutor. Bhavani Singh was then appointed as the SPP in the case and it was under him that the final verdict was delivered in which Jayalalithaa was convicted and awarded a four year sentence which disqualified her from contesting the elections and also she had to give up her post of Chief Minister. Singh took time out to speak with oneindia about the ordeal in fighting this case and also the road ahead since the appeals are pending.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X