For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. விடுதலைக்கு எதிரான திமுக மனுவிலும் குளறுபடி - திருத்தி தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் விடுதலையை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவில் 9 குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் மனுவை திருத்தி தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே கர்நாடக அரசு தாக்கல் செய்யதுள்ள மேல்முறையீட்டு மனுவில் குறைகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ள நிலையில் திமுக தாக்கல் செய்துள்ள மனுவிலும் குறைகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்சியுள்ளதால் வழக்கு விசாரணை மேலும் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jayalalitha DA case verdict : SC finds fault in DMK appeal petition

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடந்த மே 11ம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி குமாரசாமியின் கணக்கில் தவறு இருப்பதாகவும், ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து அரசு தரப்பு என்ற முறையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.

கர்நாடகா மேல்முறையீடு

இதையடுத்து, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் 23ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், சொத்து விவரங்களை கணக்கிட்டதில் தவறு நடந்துள்ளது என்றும் கர்நாடக அரசின் வாதம் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

2,300 பக்கங்கள்

இந்நிலையில் திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு புத்தகங்களாக 2300 பக்கங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக மனுவில் குறைகள்

இந்த மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அதிகாரிகள், மனுவில் பல குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற‌ தலைமைப் பதிவாளர், மனுவில் உள்ள 9 முக்கிய குறைபாடுகளை சரி செய்து, திருத்தப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு திமுக தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

விபரங்கள் இல்லை

திமுக தாக்கல் செய்துள்ள மனுவில் இணைக்கப்பட்டு இருக்கும் பிரமாணப் பத்திரத்தில் கோரப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் விடுபட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆவணங்களை தரவரிசைப்படி குறிப்பிடப்பட‌வில்லை. வழக்கில் அன்பழகன் தொடர்பாக உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் தீர்ப்பாணைகள் முழுமையாக இணைக்கப்படவில்லை.

9 குறைபாடுகள்

வழக்கு தொடர்பான அரசாணைகள், வழிகாட்டுதல்கள், விசாரணை நீதிமன்றத்தில் முக்கிய குறிப்புகள், அரசு சான்று ஆவணங்கள் மனுவுடன் இணைக்கப்பட‌வில்லை என்பன உள்ளிட்ட 9 குறைபாடுகளை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

கர்நாடகா அரசின் மனுவிலும் குறை

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்யதுள்ள மேல்முறையீட்டு மனுவில் 1223 மற்றும் 1453 வது பக்கங்கள் வெறுமையாக உள்ளதாகவும், அசல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். முதல் தகவல் அறிக்கையின் வடிவம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை எப்போது

எனவே திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் மீண்டும் சரிபார்த்த பிறகே குற்றவியல் வழக்கு எண்கள் ஒதுக்கப்பட்டு, வழக்கை விசாரிக்கப் போகும் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்படும். இந்த நடைமுறைகள் முடிய ஒரு மாத காலம் வரை கால அவகாசம் தேவைப்படும் என்பதால் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தாமதமாகும் என தெரிகிறது.

தப்பு தப்பா இருக்கே

நீதிபதி குமாரசாமி கணக்கு தவறானது... தவறான தீர்ப்பு அளித்து விட்டார் என்று கூறி தாக்கல் செய்த மனுவிலும் 9 தவறுகள் வந்தது எப்படி என்று யோசிக்கத் தொடங்கியுள்ளதாம் திமுக தலைமை.

English summary
Supreme Court has asked the DMK to correct the 9 mistakes in its petition against the Jayalitha DA case verdict
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X