For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் மாநகர மேயர் பதவியை பெற பாஜக-காங். கடும் போட்டி! மஜத கையில் முடிச்சு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூர் மாநகராட்சியில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், மேயர் மற்றும் துணை மேயர் பதவியை அக்கட்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் (மஜத) இணைந்து கூட்டணி அமைத்து, மேயர் மற்றும் துணை மேயர் பதவியை தங்கள் கட்சி கைப்பற்ற வியூகம் அமைத்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜகவுடன் மஜத நெருங்கியுள்ளது.

பெங்களூர் மாநகராட்சியின் 198 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் 100 வார்டுகளை வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சி 76 சீட்டுகளையும், மஜத 14 சீட்டுகளையும் வென்றது. சுயேச்சைகள் 8 வார்டுகளில் வெற்றி பெற்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகத்தை பாஜக பிடித்துள்ளது.

JD(S) try to make an alliance with the BJP instead of Congress

இந்நிலையில், அந்த நிர்வாகத்தை நிர்வகிக்கும் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற வேண்டியது அவசியம். ஏனெனில் மேயர் அல்லது துணை மேயர் பதவிக்கான வேட்பாளர்களை மாநகராட்சி கவுன்சிலர்கள், பெங்களூர் நகரிலுள்ள 28 சட்டசபை தொகுதி எம்.எல்.ஏக்களும், பெங்களூர் நகர 3 மக்களவை தொகுதி எம்.பிக்களும், பெங்களூர் நகரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேலவை உறுப்பினர்களும், வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டியது கட்டாயம்.

மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர் வெற்றி பெற 128 வாக்குகள் வேண்டும். பாஜகவுக்கு 100 கவுன்சிலர்கள், 12 எம்.எல்.ஏக்கள், 3 எம்.பிக்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் பலம் உள்ளது. அனைத்தையும் சேர்த்தால் 124 வாக்குகள் கிடைக்கும்.

காங்கிரசுக்கு 76 கவுன்சிலர்கள், 13 எம்.எல்.ஏக்கள், மேலவை உறுப்பினர்கள் என மொத்தம் 101 வாக்குகள் உள்ளன. மஜதவுக்கு 14 கவுன்சிலர்கள், 3 எம்.எல்.ஏக்கள், மேலவை உறுப்பினர்கள் என மொத்தம், 21 வாக்குகள் உள்ளன. எந்த ஒரு கட்சிக்குமே 128 வாக்குகள் என்ற மேஜிக் நம்பர் கிடைக்காது.

இந்நிலையில்தான், காங்கிரஸ்-மஜத இணைந்து மேயர் மற்றும் துணை மேயர் பதவியை பிடிக்க திட்டமிட்டன. இவ்விரு கட்சிகளும் இணைந்து வாக்களித்தாலும், காங்கிரசின் 101 மற்றும் மஜதவின் 21 வாக்குகள் இணைந்தால் 122 வாக்குகள்தான் கிடைக்கும். பாஜகவை விட 2 வாக்குகள் குறைவானதாகும் இது. ஆனால், 8 சுயேச்சைகள் வாக்குகளை காங்கிரஸ்+மஜத பெற்றால் வாக்கு எண்ணிக்கை 130 ஆகிவிடும். மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களாக காங்கிரசும், மஜதவும் நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறுவார்.

இந்த திட்டத்தோடு, மஜத எம்.எல்.ஏ, ஒய்.எஸ்.வி.தத்தா நேற்றுமுன்தினம் இரவு முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசி காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைப்பது குறித்து பேசியுள்ளார்.

அதேநேரம், சுயேச்சைகளில் 4 பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், பாஜக மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை தக்க வைத்துக்கொள்ளும். எனவே சுயேச்சைகளுக்கு தற்போது டிமாண்ட் ஏறியுள்ளது. அவர்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் தொடங்கியுள்ளது.

சுயேச்சைகளில் 6 பேர் கடந்த இரு தினங்களாக மாயமாகிவிட்டனர். கேரளாவில் இருக்கலாம் என்று தெரிகிறது. யார் அதிக பேரம் பேசுகிறார்களோ அவர்களுக்கு சுயேச்சைகள் ஆதரவு கிடைக்கலாம்.

இதனிடையே, மஜத தலைவர் தேவகவுடாவை, பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்தகவுடா இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, மாநகராட்சியில், மஜதவின் ஆதரவை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மஜத நிர்வாகிகள், தேவகவுடாவை சந்தித்து, பாஜகவுக்கு ஆதரவு தர கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆதாயம் கிடைக்கும் பக்கம் செல்லும் கட்சி என்று பெயரெடுத்த மஜத, அடுத்த என்ன முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ், மஜத என முப்பெரும் கட்சிகளும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன.

English summary
The run up to ruling the BBMP is seeing some tense moments with the JD(S) indicating that they would try and forge an alliance with the BJP instead of Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X