இதயத்தில் கோட்சே! உதட்டில் காந்தி! ஜிக்னேஷ் மேவானி கைதால் பாஜகவை விளாசிய பிரகாஷ் ராஜ்
கவுஹாத்தி: ‛சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே. இவர் தான் மகாத்மா காந்தியை கொன்றார். கோட்சேவை இதயத்தில் வைத்து கொண்டு காந்தியை உதட்டில் உச்சரிக்கும் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும். பலமாக இருங்கள் ஜிக்னேஷ் மேவானி உண்மை வெல்லும் ' என நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை விமர்சித்ததோடு, ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வட்கம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. இவர் ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ஞ் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் உள்ளார்.
கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது இவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு பெற்றது.
பெண் போலீஸ் அதிகாரியை தாக்கினாரா ஜிக்னேஷ் மேவானி... 2வது முறை கைது பற்றிய பரபர தகவல்

ஜிக்னேஷ் மேவானி கைது
இவர் பிரதமர் நரேந்திர மோடியை கோட்சேவுடன் தொடர்புபடுத்தி டுவிட்டரில் டுவிட் வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக அசாம் மாநில பாஜக தலைவர் அங்குள்ள போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நள்ளிரவில் குஜராத் மாநிலம் பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் ஜிக்னேஷ் மேவானியை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரை விமானத்தில் அசாம் அழைத்து சென்றனர்.

2வது முறையாக கைது
இந்த வழக்கில் கோக்ரஜார் நீதிமன்றம் நேற்று முன்தினம் மாலை ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் வழங்கியது. அதைத்தொடர்ந்து 2வது முறையாக அசாம் போலீசாரால் ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டார். அதாவது அசாம் தலைநகர் கவுஹாத்தியில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு ஜிக்னேஷ் மேவானியை அழைத்து வந்தபோது அவர் பெண் போலீஸ் அதிகாரியை திட்டி, கார் இருக்கையில் தள்ளி பணி செய்ய விடாமல் தடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
தற்போது ஜிக்னேஷ் மேவானியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையின் பின்னால் பாஜக இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கும் நிலையில் தான் தலித் மக்களின் தலைவராக இருக்கும் ஜிக்னேஷ் மேவானி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வாதம் செய்கின்றனர்.

பிரகாஷ் ராஜ் விமர்சனம்
இந்நிலையில் தான் ஜிக்னேஷ் மேவானியின் கைது நடவடிக்கைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேலும் அவரும் பாஜகவை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‛‛சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே. இவர் தான் மகாத்மா காந்தியை கொன்றார். கோட்சேவை இதயத்தில் வைத்து கொண்டு காந்தியை உதட்டில் உச்சரிக்கும் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும். பலமாக இருங்கள் ஜிக்னேஷ் மேவானி உண்மை வெல்லும் '' என குறிப்பிட்டுள்ளார்.

கோட்சே ஒப்பீடு ஏன்?
ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் நரேந்திர மோடியை கோட்சேவுடன் தொடர்புபடுத்தி விமர்சித்தது தான் தற்போது முதல் வழக்காக பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தான் பிரகாஷ் ராஜூம், கோட்சேவை பாஜகவினருடன் ஒப்பிட்டு ஜிக்னேஷ் மேவானி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.