For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகார் முதல்வர் மஞ்சி திடீர் ராஜினாமா! நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே பதவி விலகினார்!!

By Mathi
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முன்பே திடீரென முதல்வர் பதவியில் இருந்து ஜிதன்ராம் மஞ்சி ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் சட்டசபையில் ஜிதன்ராம் மஞ்சி இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் திரிபாதி உத்தரவிட்டிருந்தார். ஜிதன்ராம் மஞ்சியை ஆதரிப்பதாக பாரதிய ஜனதா கட்சியும் அறிவித்திருந்தது.

அதே நேரத்தில் பீகார் சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சியாக ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதா தளத்தை சபாநாயகர் அறிவித்தார். இந்நிலையில் பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக திடீரென ஆளுநர் திரிபாதியை சந்தித்த ஜிதன்ராம் மஞ்சி தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

Jitan Ram Manjhi resigns as Bihar CM ahead of trust vote

ஜிதன்ராம் மஞ்சியின் திடீர் ராஜினாமா முடிவால் அவரை ஆதரிப்பதாக அறிவித்த பாரதிய ஜனதா கடும் அதிர்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது. ஜிதன்ராம் மஞ்சியை ஆதரிப்பதன் மூலம் மகாதலித் சமூக வாக்குகளை தம் பக்கம் ஈர்த்துவிட முடியும் என்று கணக்குப் போட்டுக் காத்திருந்த கனவு தகர்ந்ததே இதற்கு காரணம்.

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபையில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்துக்கு 111 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவுக்கு 87 உறுப்பினர்களும், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளத்துக்கு 24 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 5 உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.

சுயேச்சை எம்.எல்.ஏக்கள் 5 பேர் இருக்கிறார்கள். 10 இடங்கள் தற்போது காலியாக இருப்பதால் சட்டசபையின் தற்போதைய பலம் 233. சட்டசபையில் முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் மஞ்சிக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்.எல்.ஏக்களும் பாரதிய ஜனதாவின் 87 பேரும் மட்டுமே ஆதரவு.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட மஞ்சி வேறுவழியின்றி தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மஞ்சியின் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், பாரதிய ஜனதாவின் குதிரை பேர அரசியல் படுதோல்வி அடைந்துவிட்டது. மஞ்சி எப்போதோ ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று சாடியுள்ளார்.

அதே நேரத்தில் பாரதிய ஜனதாவோ தற்போது, இது ஐக்கிய ஜனதா தளத்தின் உட்கட்சி பிரச்சனை என்று கூறியுள்ளது.

தற்போதைய நிலையில் 128 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கொண்ட நிதிஷ்குமாரை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி என்ன?

கடந்த லோக்சபா தேர்தலில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியைத் தழுவியதால் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். தம்முடைய ஆதரவாளராக இருந்த ஜிதன் ராம் மஞ்சியை நிதிஷ் முதல்வராக்கினார்.

அவருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் எதிர்ப்பு வலுத்து வந்தது. கடைசியில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவுடனும் மோதினார் மஞ்சி. இதனைத் தொடர்ந்து ஜிதன்ராம் மஞ்சியை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர்களான சரத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் ஜிதன்ராம் மஞ்சியோ இந்த கோரிக்கையை நிராகரித்தார். அவர் கடந்த 7-ந் தேதி டெல்லி சென்றிருந்த நிலையில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மொத்தம் 111 எம்.எல்.ஏக்களில் 91 பேர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் சட்டசபையின் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தும் ஜிதன்ராம் மஞ்சி நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்த நிதிஷ்குமார் தமக்கு மொத்தம் 130 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆனால் ஆளுநர் மவுனம் காத்தார். இந்நிலையில் நிதிஷ்குமாரை சட்டசபை தலைவராக தேர்வு செய்ததை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நிதிஷ்குமார் மாநில சட்டசபை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக செயல்பட நீதிமன்றம் தடை விதித்தது.

இதனால் நிதிஷ்குமார் முதல்வராவதில் சிக்கல் எழுந்தது. அதே நேரத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டெல்லியில் தமது ஆதரவு 130 எம்.எல்.ஏக்களுடன் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, முதல்வர் மஞ்சி இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே மஞ்சி தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

English summary
Chief Minister Jitan Ram Manjhi has resigned, says Brajesh Mehrotra, Principal Secretary to Bihar Governor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X