For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டையே அதிர வைக்கும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அச்சுறுத்தலும் எஸ்பிஜி பாதுகாப்பும்!

பிரதமர் மோடியின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த கட்டுரை.

Google Oneindia Tamil News

- ஆர். மணி

சென்னை: சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு தற்போது இருப்பதை விட பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்பதாக அநேகமாக அனைத்து தேசிய மற்றும் மாநில ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்தது.

குறிப்பாக பிரதமர் தெரு வீதிகளில் தேர்தல் பிரச்சாரம் (Road shows) மேற்கொள்ளும் போது அவரது உயிருக்கான ஆபத்து பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும், முடிந்தால், கூடிய வரையில் தெருக்களில் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை பிரதமர் தவிர்க்க வேண்டும் என்றும் அவருக்கு பாதுகாப்பு அளித்து வரும், அதி நவீன ஆயுதங்களை தங்களுடைய கைகளிலும், உடலின் பல பாகங்களிலும் வைத்திருக்கும் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்பிஜி (Special Protection Group or SPG) அறிவுறுத்தியிருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட தேசிய நாளிதழ்களே முதற் பக்க செய்திகளாக வெளியிட்டிருந்தன.

Journalist Mani article on PM Modis security issue

ஜூன் 27 ம் நாளிதழில் டைம்ஸ் ஆஃப் இந்தியா முதற் பக்கத்தில் வெளியிட்ட ஒரு செய்தி மிகவும் ஆச்சரியத்தை அளிப்பதாக இருந்தது. 'மத்திய அமைச்சர்களும் கூட முன்னறிவிப்பு கொடுத்தும், பின்னர் போதிய அனுமதி பெற்றும் தான் மோடியை இனி மேல் அருகில் சென்று சந்திக்க வேண்டும்' என்று எஸ்பிஜி அறிவுறுத்தியிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது. இது போன்ற தடை இதற்கு முன்பு, அதாவது, 1985 ல் எஸ்பிஜி உருவாக்கப் பட்ட நாளில் இருந்து இதுவரையில் வேறு எந்த பிரதமர்களின் ஆட்சி காலங்களிலும், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், தேவே கவுடா, ஐ.கே குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மன்மோஹன் சிங் காலங்களில் விதிக்கப் பட்டதில்லை.

எஸ்பிஜி ஏன் உருவாக்கப் பட்டது, அதனுடைய பணிகள், அதிகாரங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். 1984, அக்டோபர் 31 ம் தேதி, பிரதமர் இந்திரா காந்தி அவரது சொந்த பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். இந்த கொலைகார பாதுகாலவர்கள் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் டில்லி போலீசை சேர்ந்தவர்கள். அந்தக் கால கட்டத்தில் பிரதமரின் பாதுகாப்பு டில்லி போலீஸ் மற்றும் இந்திய - திபேத்திய போலீஸ் படையால் (Indo - Tibet Border Police or ITBP) கூட்டாக மேற்கொள்ளப் பட்டது. ITBP முழுக்க, முழுக்க மத்திய அரசால் இயக்கப் படும் போலீஸ் படையாகும்.

சீக்கியர்களின் புனித கோயிலான பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்குள் ராணுவம் 1984 ஜூன் மாதம் நூழைந்து, பிந்தரன் வாலே போன்ற தீவிரவாதிகளையும், மேலும் சிலரையும் சுட்டுக் கொன்றதற்கான பழி வாங்கலாக இந்திரா காந்தியின் படுகொலை கருதப் படுகிறது. 31.10.1984 ல் ராஜீவ் காந்தி பிரதமரானவுடன், அடுத்த இரண்டு மாதங்கள், அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர், 1984 ல் பிரதமரின் பாதுகாப்பை இந்திய ராணுவம் ஏற்றுக் கொண்டது. இது வரலாறு காணாத நிகழ்வு அதாவது ஒரு இந்திய பிரதமரையும், அவரது குடும்பத்தையும் ராணுவம் பாதுகாத்தது என்பது அதற்கு முன்பும், அதற்கு பின்பும், இன்று வரையில் நடைபெறவில்லை.

அதன் பின்னர் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்கு தனி படை உருவாக்கப் பட வேண்டும் என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவை முடிவு செய்தது. 18.2.1985 ல் இது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க பீர்பால் நாத் கமிட்டி (Birbal Nath Committee) என்று ஒரு கமிட்டி அமைக்கப் பட்டு, அந்தக் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் சிறப்பு பாதுகாப்பு யூனிட் (Special Protection Unit or SPU) என்று ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டது. பின்னர் அது பெயர் மாற்றம் செய்யப் பட்டு ஸ்பெஷல் புரோடக்ஷன் குரூப் (SPG) ஆனது. 06.04.1985 முதல் இந்த படை பிரதமரையும், அவரது குடும்பத்தினரையும் பாதுகாக்க துவங்கியது. இதற்காக 819 போலீசார், மத்திய அரசின் வேறு போலீஸ் படைகளில் இருந்து SPU வில் பணியமர்த்தப் பட்டனர்.

SPU வெறும் நிர்வாக உத்திரவால் அமைக்கப் பட்ட காவல் படை. இதற்கு மேலும் கூடுதல் அதிகாரங்கள் வேண்டும் என்று கருதிய மத்திய அரசு 1988 ல் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியது. Special Protection Group Act, 1988 என்பது இந்த சட்டத்தின் பெயர். இந்த சட்டம் கிட்டத்தட்ட வரம்பற்ற அதிகாரங்களை SPG க்கு வழங்கியது.

சுருக்கமாகச் சொன்னால் SPG க்கு எதிராகவோ அல்லது அதில் பணியாற்றும் ஒரு தனி காவலருக்கு எதிராகவோ அல்லது கூட்டாக சில, பல காவலர்களுக்கு எதிராகவோ எந்த விதமான வழக்குகளையும், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை எந்த நீதி மன்றங்களிலும் தொடுக்க முடியாது. ஆனால் ஒரு இடத்தில் SPG கோட்டை விட்டது.

Special Protection Group Act, 1988 பிரதமர் பதவியிலிருந்து ஒருவர் இறங்கியவுடன் அவருக்கு SPG பாதுகாப்பு கொடுப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. இதுதான் ராஜீவ் காந்தி படுகொலையில் போய் முடிந்தது. ஆம். நவம்பர், 1989 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுப் போய் ஆட்சியை இழந்தது. ராஜீவ் காந்தி எதிர்கட்சி தலைவரானார். வி.பி. சிங் பிரதமரானார்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப் பட்டவுடன் விழித்துக் கொண்ட மத்திய அரசு 1991 ம் ஆண்டு Special Protection Group Act, 1988 ல் ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. அதன் படி, ஒரு பிரதமர் பதவியில் இருந்து இறங்கியவுடன் அடுத்த ஓராண்டுக்கு அவருக்கு SPG பாதுகாப்பு தானாகவே (automatically) நீடிக்கும். அதன் பின்னர் ஒவ்வோர் வருடமும் இந்த பாதுகாப்பு, உளவுத் துறை கொடுக்கும் பரிந்துரைகளின் பேரில், அதாவது, குறிப்பிட்ட முன்னாள் பிரதமரின் உயிருக்கு இருக்கும் ஆபத்தை பொறுத்து SPG பாதுகாப்பு தொடர்ந்து கொடுக்கப் படும்.

இதன்படி தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு SPG பாதுகாப்பு தொடர்ந்து இன்று வரையில் கொடுக்கப் பட்டு வருவதன் காரணம் . ஆனால் தேவே கவுடா பிரதமர் பதவியிலிருந்து 1997 ஏப்ரலில் ராஜினாமா செய்தார். அவருக்கான SPG பாதுகாப்பு 1998 இறுதிக் காலகட்டத்தில் விலக்கிக் கொள்ளப் பட்டது. காரணம், தேவே கவுடா வின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இல்லை என்று திரும்ப, திரும்ப வந்த உளவுத்துறை அறிக்கைகள் தான்.

இதுதான் எஸ்பிஜி யின் சுருக்கமான வரலாறு. தற்போது மோடி விஷயத்தில் கடந்த ஒரு வாரமாக பேசப் பட்ட விஷயம் தெருக்களில் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, ராஜீவ் காந்திக்கு நிகழ்ந்தது போன்ற தாக்குதல் மோடி மீதும் மேற்கொள்ளப் படலாம் என்ற உளவுத்துறையின் அறிக்கைதான். மனித வெடிகுண்டு தாக்குதல் பிரதமர் மீது நடத்தப் படலாம் என்ற வார்த்தைகள் எந்த ஊடகங்களிலும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும் இல்லாவிட்டாலும், ராஜீவ் காந்தி மீதான தாக்குதல் போன்ற தாக்குதல் என்ற வாசகம் உணர்த்துவது மனித வெடிகுண்டு தாக்குதல் என்றுதான் பொருள்.

ஏனெனில் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலால் தான் கொல்லப் பட்டார் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் இந்த செய்தியை பல எதிர்கட்சிகளும் மக்களின் அன்றாட பிரச்சனைகளில் இருந்து அவர்களை திசை திருப்புவதற்காக மத்திய உள்துறை யும், மத்திய உளவு அமைப்புகளும் கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

இதுபற்றி, ஓய்வு பெற்ற ஒரு உயர் உளவுத்துறை அதிகாரி கூறும் காரணம் சற்றே சுவாரஸ்யமாக இருக்கிறது. ''எனக்கு தெரிந்து இது போன்ற செய்திகள் பெரும்பாலான நேரங்களில் முக்கியமான பல பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக கிளப்பி விடப்படும். அப்படி இல்லை என்றால் வேறு ஒரு காரணத்தால் இதுபோன்ற விஷயங்கள் மீடியாக் களில் கசிய விடப்படும். அது என்ன வென்றால், குறிப்பிட்ட ஒரு விஐபி யை பாதுகாக்கும் ஒரு போலீஸ் படை பிரிவில், விஐபி யின் முதல் வட்டத்தில் (First ring or first layer) உள்ள அதிகாரிகளுக்கும், இரண்டாவது வட்டத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் பனிப் போரின் காரணமாகவும் இது போன்ற தகவல்கள் கசிய விடப்படும்'' என்கிறார் பெயர் கூற விரும்பாத ஓய்வு பெற்ற அந்த அதிகாரி.

''இந்த விஷயத்தை மத்திய அரசின் ஏதோ ஒரு பாதுகாப்பு அமைப்போ அல்லது குறிப்பிட்ட விஐபி யை பாதுகாக்கும் இரண்டாவது வட்டத்தில் இருப்பவர்களோ தான் மீடியாக்களிடம் சொல்லியிருக்க முடியும். மீடியாக்களோ அல்லது மற்றவர்களோ வேறு எந்த வகையிலும் இந்த விஷயத்தை அறிந்திருக்க வாய்ப்புகள் அறவே இல்லை. மீடியாக்களில் இது வந்தவுடன் சம்மந்தப் பட்ட பாதுகாப்பு படையின், இந்த விஷயத்தில் SPG யின் அத்தனை முக்கிய அதிகாரிகளும் ஏற்கனவே மத்திய அரசின் உயர் அதிகாரிகளால் அழைக்கப் பட்டு விசாரிக்கப்பட்டிருப்பார்கள். இந்த செய்தி ஏன் மீடியாக்களில் வந்தது என்பதன் உண்மையான காரணம் நிச்சயம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிய வந்திருக்கும். பிரச்சனை தீர்த்து வைக்கப் பட்டிருக்கும் என்றே நான் நம்புகிறேன்'' என்று மேலும் கூறுகிறார் அந்த ஓய்வு பெற்ற அதிகாரி.

இதில் உண்மை எதுவாக இருந்தாலும் பிரதமரின் பாதுகாப்பு என்பதில் எந்த சுணக்கத்தையும் எவரும், குறிப்பாக சம்மந்தப்பட்ட பாதுகாப்பு படையினர் காட்ட கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது. மோடியை நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அவர் ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர். மோடியை அரசியல் ரீதியாக தோற்கடித்து தான் பிரதமர் பதவியிலிருந்து அவரை இறக்க வேண்டும். ஒரு போதும் அவரை வன்முறை வழி முறைகளின் மூலம் பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவதை ஜனநாயகத்தில் ஒரு சதவிகித நம்பிக்கை உள்ளவர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

நாடு விடுதலை அடைந்த இந்த 70 ஆண்டு காலத்தில், ஒரு பிரதமரையும், ஒரு முன்னாள் பிரதமரையும் நாடு வன்முறை யால் இழந்திருக்கிறது. இனி ஒரு போதும், எத்தகைய அரசியல் வேறுபாடுகள், காழ்ப்புணர்ச்சிகள், கொள்கை மோதல்கள் இருந்தாலும் ஒரு பிரதமர் வன்முறை மூலம் அரசியல் அரங்கில் இருந்து அகற்றப் படுவதை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் தனிச் சிறப்பும், மாண்பும், அழகும்.

English summary
Senior Journalist Mani wrote an article on the issue of PM Narendra Modi's Securtiy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X