• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உச்சநீதிமன்றம் என்னை மிக மோசமாக நடத்தியது - நீதிபதி கங்குலி பரபரப்பு குற்றச்சாட்டு

By Mathi
|

கொல்கத்தா: உச்சநீதிமன்றம் தம்மை மிக மோசமாக நடத்தியது, தமக்கு நியாயமான வாய்ப்பு அளிக்கவில்லை என்று பதவி விலகிய நீதிபதி ஏ.கே. கங்குலி குற்றம்சாட்டியுள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் புகார் பற்றி உச்சநீதிமன்றம் நியமித்த 3 நீதிபதிகள் குழு விசாரணை நடத்தியது. அதில், கங்குலி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறியது. இதையடுத்து, சமீபத்தில் அவர் மேற்கு வங்காள மனித உரிமை ஆணைய தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், நீதிபதி கங்குலி ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

AK Ganguly

உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை அதிகார வரம்பு, ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு பொருந்தாது. எனவே, எனக்கு எதிராக விசாரணை குழு அமைத்ததே தவறு. மேலும், அந்த பயிற்சி வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்திடம் புகார் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கையில், விசாரணை குழு அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

இருப்பினும், நல்ல எண்ணத்துடன் நான் ஆஜரானேன். அங்கு எனக்கு நியாயமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. என்னை மிக மோசமாகவும், அநியாயமாகவும் உச்சநீதிமன்ற குழு நடத்தியது.பயிற்சி வழக்கறிஞர் அளித்த வாக்குமூலத்தின் நகலைக் கூட ‘அது ரகசியம்' என்று கூறி, எனக்கு அளிக்கவில்லை. இது, எனக்கு இழைக்கப்பட்ட அவமானம்.

இதுதொடர்பாக நான் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு விரிவான கடிதம் அனுப்பினேன். அதற்கு பதில் வரவில்லை. உச்சநீதிமன்ற குழு, நான் வரவேற்க இயலாத நடத்தையுடன் நடந்து கொண்டதாக கூறியுள்ளது. வரவேற்க இயலாத நடத்தையை, யாரிடம் காட்டினேன்?

நான் கட்டாயப்படுத்தலையே..

அந்த பயிற்சி வழக்கறிஞரை என்னுடன் தங்குமாறு நான் கட்டாயப்படுத்தவில்லை. ஒயின் அருந்துமாறு கட்டாயப்படுத்தவில்லை. யாராவது விரும்பாத பட்சத்தில் என்னால் கட்டாயப்படுத்த முடியுமா? அவர் விரும்பாவிட்டால், விருந்து ஆரம்பிப்பதற்கு முன்பே அங்கிருந்து கிளம்பி இருக்கலாமே. சம்பவம் நடந்து 11 மாதங்கள் கழித்து அவர் குற்றச்சாட்டு கூறி இருக்கிறார்.

சம்பவத்துக்கு பிறகு அவரை நான் சந்திக்கவில்லை.அவர் என் மாணவி. அதனால் அவர் மீது அவதூறு வழக்கு தொடர மாட்டேன். அதற்கு பதிலாக, ஜெயிலுக்கு போகக்கூட தயார். அவர் நன்றாக இருக்க வேண்டும். அவர் தன் வாழ்க்கையில் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் வெற்றி பெற வேண்டும்.

அனைத்துமே ஆதாரமற்றவை

வெட்கப்படும்படி நான் எதுவும் செய்யவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். அவை அடிப்படை ஆதாரமற்றவை. அதைக் கேட்டு நான் உடைந்துபோய் விட்டேன். என் குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர்களின் மகிழ்ச்சிக்காகவே நான் பதவி விலகினேன்.

மனித உரிமை ஆணையத்தின் கவுரவத்தையும், மதிப்பையும் கட்டிக்காக்கவே பதவி விலகினேன். இதற்கு, நான் குற்றத்தை ஒப்புக்கொண்டேன் என்று அர்த்தம் அல்ல.பதவி விலகிய பிறகு, நான் ஏமாற்றமாக உணரவில்லை. இந்த சூழ்நிலையில் பணியாற்றுவது கடினம் என்பதால்தான் பதவி விலக நேர்ந்தது.

மாற்று கருத்துக்கு அனுமதி இல்லையே..

இந்த விவகாரத்தில் எனக்கு எதிராக அரசியல் சதி நடந்ததா என்று என்னால் கூற முடியாது. ஆனால், நான் மேற்கு வங்காள மனித உரிமை ஆணைய தலைவராக நீடிப்பதை மேற்கு வங்காள அரசு விரும்பவில்லை. என்னுடன் பணியாற்றுவதை அசவுகரியமாக கருதியது. மேற்கு வங்காளத்தில், மாற்று கருத்து அனுமதிக்கப்படுவது இல்லை. இது எல்லோருக்குமே தெரியும்.நான் பதவியில் நீடிப்பது, மனித உரிமை ஆணையத்துக்கு அவமரியாதை இழைப்பதாக கூறப்பட்டபோது நான் வேதனை அடைந்தேன். பெண்களுக்கு எதிரான வழக்குகளில் நான் கடும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

உடனுக்குடன் உத்தரவு பிறப்பித்துள்ளேன். வேண்டுமானால், பெண்கள் அமைப்புகளை கேட்டுப்பாருங்கள்.மனித உரிமையை காக்கும் போராட்டத்தை கைவிட மாட்டேன். சாதாரண மக்களின் உரிமைகளை காக்கும் எனது போராட்டத்தில் எந்த இடையூறும் ஏற்படாது.

இவ்வாறு நீதிபதி ஏ.கே. கங்குலி கூறினார்.

 
 
 
English summary
Retired Supreme Court Judge A K Ganguly, who quit as Chairman of the West Bengal Human Rights Commission on Wednesday attacked the Supreme Court over the inquiry by its three-judge panel into the sexual assault allegations against him, saying he was "very badly and unfairly" treated.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X