For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூர் பற்றி எரிய காரணம் "கன்னட பிரகாஷ்"... கூடுதல் கமிஷனர் ரெட்டி செய்த தவறு.. பரபர தகவல்கள்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்கர்களுக்கு மறக்க முடியாத நாள். அதேபோல செப்டம்பர் 12ம் தேதி பெங்களூரு தமிழர்களுக்கு மறக்க முடியாத தினம். கருப்பு தினமாக பார்க்கப்படும் அந்த 12ம் தேதிதான் மிகப் பெரிய கலவரம் பெங்களூரை சூறையாடியது. இந்த கலவரத்துக்கு முக்கியப் புள்ளியாக இருந்தது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்த கன்னட பிரகாஷ் என்பவர்தான் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த பிரகாஷ்தான் பெங்களூரில் கலவரத்தைத் தூண்டி விட்டுள்ளார். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தாக்கி சூறையாடி, எரிக்க உத்தரவிட்டும் இவர்தான். இந்த கலவரத்தை மிகப் பெரிய அளவில் நடத்தியதும் இவரது ஆட்கள்தான் என்று போலீஸார் கூறுகிறார்கள். இத்தனைக்கும் பிரகாஷ் சம்பவத்தன்று பெங்களூரிலேயே இல்லை. ஆனால் மண்டியாவில் உட்கார்ந்து கொண்டு போன் மூலம் பேசிப் பேசியே கலவரத்தை நடத்தியுள்ளார் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.

இத்தனைக்கும் இந்த பிரகாஷை போலீஸார் செப்டம்பர் 9ம் தேதி பந்த்துக்கு முன்பே கைது செய்திருந்தனர். ஆனால் அவரை விடுவிக்க உத்தரவிட்டு இந்தக் கலவரத்துக்கு மறைமுகமாக காரணமாகி விட்டார் கூடுதல் கமிஷனர் கேஎஸ்ஆர் சரண் ரெட்டி. இவர்தான் பிரகாஷை உடனடியாக ரிலீஸ் செய்யுங்கள் என்று போலீஸாருக்கு அதிரடியாக உத்தரவிட்டு அவரை வெளியே கொண்டு வந்தார் என்று பெங்களூர் மிர்ரர் செய்தி கூறுகிறது.

பெங்களூரில் மிகப் பெரிய வரலாறு காணாத கலவரம் தலைவிரித்தாட இந்த கன்னட பிரகாஷ்தான் காரணம் என்று பெங்களர் போலீஸார் கூறுகிறார்கள். ரெட்டி மட்டும் அவரை விடுவிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்தக் கலவரம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது போலீஸாரின் கூற்றாகும். காரணம், பெங்களூரில் அன்று மிகப் பெரிய அளவில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான். அதுவும் பிரகாஷின் செல்வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில்தான் கலவரம் மிக அதிகமாக இருநி்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பரில் 8ல் கைது

செப்டம்பரில் 8ல் கைது

கேஆர்வி எனப்படும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் முக்கியப் புள்ளிதான் பிரகாஷ். இந்த அமைப்பின் தலைவரான நாராயண கெளடாவுக்கு மிகவும் நெருக்கமானவர் இவர். கர்நாடகத்தில் செப்டம்பர் 9ம் தேதி பந்த் நடத்தப்பட்டது. அதற்கு முதல் நாளான 8ம் தேதி பிரகாஷையும், அவருடன் சேர்த்து 12 முக்கியப் புள்ளிகளையம் பெங்களூர் போலீஸார் கைது செய்தனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட துணை கமிஷனரி்ன் சமயோஜிதம்

இடமாற்றம் செய்யப்பட்ட துணை கமிஷனரி்ன் சமயோஜிதம்

உண்மையில் பிரகாஷால் பிரச்சினை வரும் என்று சரியாக கணித்தவர் மேற்கு துணை கமிஷனராக இருந்தவரான அஜய் ஹிலோரி. ஆனால் கலவரத்திற்குப் பின்னர் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிலோரி உத்தரவின் பேரில்தான் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். ஆனால் ரெட்டி தலையீட்டிற்குப் பிறகே பிரகாஷ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

8ம் தேதி இரவு கைது

8ம் தேதி இரவு கைது

8ம் தேதி இரவு பிரகாஷ் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளைக் கைது செய்ய ஹிலோரி உத்தரவிட்டார். அதன்படி அவர்களும் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் பைத்தராயன்புரா காவல் நிலையத்தில் கஸ்டடியில் வைத்திருந்தனர். காவல் நிலையத்திற்குள் வந்தபோதே சினிமா பாணியில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரை மிரட்டியுள்ளார் பிரகாஷ். என் செல்வாக்கு தெரியாமல் தூக்கிட்டீங்க. இப்ப போன் வரும் பாருங்க என்று கூறியுள்ளார்.

உடனே ரிலீஸ் பண்ணுங்க

உடனே ரிலீஸ் பண்ணுங்க

அதேபோல சற்று நேரத்தில் போன் வந்துள்ளது. போனை எடுத்து பேசிய இன்ஸ்பெக்டரிடம் மறு முனையில் பேசிய குரல், பிரகாஷை எதுக்கு கைது செஞ்சீங்க. அவரிடம் ஸ்டேட்மென்ட் மட்டும் வாங்கிக் கொண்டு உடனே விடுவியுங்க என்று அந்தக் குரல் கூறியுள்ளது. அது வேறு யாருமல்ல, கூடுதல் போலீஸ் கமிஷனர் கே.எஸ்.ஆர். சரண் ரெட்டி.

விடாதீங்க.. ஹிலோரியின் உத்தரவு

விடாதீங்க.. ஹிலோரியின் உத்தரவு

குழம்பிப் போன இன்ஸ்பெக்டர் உடனே ஹிலோரிக்கு போன் போட்டார். சரண் ரெட்டி பேசியதைக் கூறினார். அவரிடம், பிரகாஷை விடுவிக்க வேண்டாம் என்று ஹிலோரி உத்தரவிட்டார். இந்த நிலையில் மீண்டும் ரெட்டியிடமிருந்து போன் வந்துள்ளது. இன்னுமா விடலை என்று கடுமையாக கேட்டுள்ளார் ரெட்டி. இதையடுத்து வேறு வழியில்லாமல் பிரகாஷை விடுவித்துள்ளார் இன்ஸ்பெக்டர்.

தலைமறைவு

தலைமறைவு

இரவோடு இரவாக வெளியே வந்த பிரகாஷ் அப்படியே தலைமறைவானார். அதன் பிறகு அவர் எங்கு போனார் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் அவர் அதற்குப் பிறகு மண்டியா போயுள்ளார். அங்கிருந்தபடி பெங்களூரில் நடந்த கலவரத்தைத் தூண்டி விட்டு தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து அவர்களது வெறியாட்டத்தை நடத்தியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழக வாகனங்கள் மீது தாக்குதல்

தமிழக வாகனங்கள் மீது தாக்குதல்

பெங்களூரில் பதட்டமான சூழல் எழுந்ததுமே தனது ஆதரவாளர்களை அழைத்த கன்னட பிரகாஷ் இதுதான் சரியான சமயம், விடாதீர்கள் என்று அவர்களை வன்முறையில் குதிக்கத் தூண்டியுள்ளார். எந்த அளவுக்கு சேதத்தை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு ஏற்படுத்துங்கள். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் ஒன்றைக் கூட விடாதீர்கள். அடித்து நொறுக்குங்கள், தீவைத்து எரியுங்கள். எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பிரகாஷ். இதுதொடர்பான தொலைபேசி உரையாடல்கள் போலீஸாருக்குக் கிடைத்துள்ளன.

பிரகாஷ் செல்வாக்குள்ள பகுதிகளில்

பிரகாஷ் செல்வாக்குள்ள பகுதிகளில்

பிரகாஷுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில்தான் மிகப் பெரிய அளவில் வன்முறை தலைவிரித்தாடியுள்ளது. மற்ற பகுதிகளை விட இங்குதான் அதிக அளவிலான சேதத்தையும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் ஏற்படுத்தியுள்ளனர் என்று போலீஸாரும் கூறியுள்ளனர். கேபிஎன் பஸ்கள் எரிக்கப்பட்ட பகுதி கூட பிரகாஷின் செல்வாக்கு அதிகம் உள்ள பகுதிதானாம்.

ஹிரோலி செய்தது சரிதான்

ஹிரோலி செய்தது சரிதான்

பிரகாஷ் மிகவும் ஆபத்தானவர் என்று தெரிந்துதான் அவரை தடு்ப்புக் காவலில் எடுக்க உத்தரவிட்டார் ஹிலோரி. அவரை ஒரு வாரமாவது சிறையில் வைத்தால்தான் பெங்களூரில் வன்முறை மூளாமல் தடுக்க முடியும் என்பது அவரது கருத்தாகும். ஆனால் கூடுதல் கமிஷனர் ரெட்டிதான் இடையில் புகுந்து பிரகாஷை விடுவித்துள்ளார். இதுதான் பெரிய தவறாகப் போய் விட்டதாக போலீஸாரே கூறுகிறார்கள்.

ரெட்டி தரும் விளக்கம்

ரெட்டி தரும் விளக்கம்

ரெட்டியிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ஆமாம், அவரை விடுவித்து உண்மைதான். ஆனால் இது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. பெங்களூர் பந்த் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய பிரகாஷ் விடுதலை செய்யப்பட்டார். நாராயண கெளடாவுடன் (வேதிகே தலைவர்) பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பந்த் அமைதியாக நடைபெறும் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் பிரகாஷை விடுவிக்க உத்தரவிடப்பட்டது. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டுதான் இது எடுக்கப்பட்டது. இதற்கு மேல் விளக்க முடியாது என்று கூறியுள்ளார் ரெட்டி.

எதிர்பார்க்கவில்லை

எதிர்பார்க்கவில்லை

ரெட்டி மேலும் கூறுகையில், நான் பணியில் எப்படி இருக்கிறேன் என்பதை யாருக்கும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரும் அதை கேள்வி கேட்கவும் முடியாது. நான்தான் இதே கன்னட பிரகாஷ் மீது (மகதாயி நதி நீர்ப் பிரச்சினை போராட்டத்தின்போது) கைது செய்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டேன். செப்டம்பர் 12 கலவரம் யாரும் எதிர்பாராத ஒன்று என்றார் அவர்.

சித்தூர் ரெட்டி

சித்தூர் ரெட்டி

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் சரண் ரெட்டி. 1993 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி. மண்டியாவில் எஸ்பியாக இருந்துள்ளார். சாம்ராஜ்நகரில் பணியாற்றியுள்ளார். இடையில் ஐந்து வருடம் சிபிஐயில் இருந்துள்ளார். பின்னர் பெங்களூரு திரும்பினார். கடந்த ஜனவரி மாதம்தான் கூடுதல் கமிஷனராக இவர் நியமிக்கப்பட்டார். இதுதான் பெங்களூரில் இவருக்கு முதல் பணியாகும்.

ஆன் தி வேயில் லாரியை எரித்த பிரகாஷ்

ஆன் தி வேயில் லாரியை எரித்த பிரகாஷ்

இதற்கிடையே கன்னட பிரகாஷின் தொலைபேசி உரையாடல்கள் போலீஸாருக்குக் கிடைத்துள்ளன. துண்டு துண்டாக அவர் பேசியுள்ள தொலைபேசி உரையாடலில் ஒன்று இது... கன்னடர்கள் ஸ்டிராங்காகவே இல்லை. நான் மட்டும் தனியாக எவ்வளவு செய்ய முடியும்.. நான் கேஆர்எஸ் (கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதியைச் சொல்கிறார்) போய்க் கொண்டிருக்கிறேன். நானும், எனது ஆட்களும் சென்னபட்னா - ராம்நகர் அருகே ஒரு லாரியை இப்போதுதான் தீவைத்துக் கொளுத்தினோம். நாங்கள் வன்முறையை ஆரம்பித்த விட்டோம். பெங்களூரில் எங்களது ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள். அவர்களும் ஆரம்பித்து விட்டனர். நாங்கள் திரும்பி வருகிறோம். இளைஞர்களை அதிக அளவில் திரட்டுங்கள். எல்லாவற்றையும் பினிஷ் செய்ய வேண்டும். தமிழ்ப் படம் எதுவும் ஓடக் கூடாது. கவலைப்படாதீர்கள். அடியுங்கள், எதற்கும் பயப்படாதீர்கள். தைரியமாக இறங்கிச் செய்யுங்கள். இப்போது விட்டால் எப்போதும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார் பிரகாஷ்.

English summary
Police sources say that KRV's Kannada Prakash is the main person for the riots in Bengaluru on September 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X