
வானில் நடக்கும் அதிசய நிகழ்வு.. பதறிய கர்நாடக அரசியல் தலைகள்.. பலத்த பூஜைக்கு ஏற்பாடு
Recommended Video

பெங்களூர்: இன்று வானில் மூன்று முக்கியமான அதிசயங்கள் நடக்கும் நாளாகும். சூப்பர் மூன், ரெட் மூன், சந்திர கிரகணம் ஆகிய மூன்று நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் பல்வேறு கோவில்களில் இன்று மாலை பூஜை நடக்க உள்ளது. பல முக்கிய தலைவர்கள் தங்கள் வீட்டிலேயே பூஜை நடத்த இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடகாவில் பூஜைக்கான ஏற்பாடுகள் களைகட்டி உள்ளது. இன்னும் சில நாட்களில் அங்கு தேர்தல் நடக்க இருப்பதால் இந்த பூஜை அதிக சிறப்பை பெற்று இருக்கிறது.

தேவகவுடா
முன்னாள் பிரதமரும் கர்நாடகாவின் முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவருமான மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவகவுடா பூஜை நடந்த தொடங்கி உள்ளார். இன்று காலையிலேயே அவர் வீட்டில் பூஜை நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. இன்று இரவு முழுக்க பூஜை நடக்க இருக்கிறது.

அவரின் மகன்
தேவகவுடா மகன் ரேவண்ணா தற்போது தமிழகம் வந்து உள்ளார். தமிழகத்தில் இருக்கும் முக்கியமான கோவில்களில் இவர் பூஜை செய்ய இருக்கிறார். கர்நாடக தேர்தல் காரணமாக இந்த சிறப்பு பூஜை நடக்க இருக்கிறது.

எடியூரப்பா பூஜை
பாஜக கட்சியை சேர்ந்த எடியூரப்பாவும் பூஜை செய்ய உள்ளார். இவர் வீட்டில் காலையிலேயே பூஜை தொடங்கியுள்ளது. ஆனால் எடியூரப்பாவின் நெருங்கிய உறவினர்கள் இதை மறுத்துள்ளனர். அதேசமயத்தில் அவர் பூஜைக்காக இன்று மாலைக்கு மேல் இருக்கும் தேர்தல் பணிகளை ஒத்திவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

பல்வேறு
இதுமட்டும் இல்லாமல் பல்வேறு தலைவர்கள் இன்று மாலை கர்நாடக முழுக்க பூஜை செய்ய உள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா மட்டுமே பூஜை செய்ய போவதில்லை என்ற உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவர் மனைவி கோவில் பூஜையில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
எந்தெந்த தலைவர்கள் எல்லாம் கோவிலுக்கு வருவார்கள் என்று தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோவிலுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மெட்டல் டிடெக்டர்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கிறது.