For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நமது எம்ஜிஆர் மூலம் வருமானம் வந்ததா?- சொத்து குவிப்பு வழக்குக்கு பின்னரே சந்தாவே வந்தது...ஆச்சார்யா

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். சந்தாக்கள் மூலமாகவும் தமக்கு வருமானம் வந்ததாக ஜெயலலிதா கூறுகிறார்... ஆனால் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்ட பின்னரே நமது எம்.ஜி.ஆர். நாளேட்டுக்கு சந்தா திட்டமே அறிமுகம் செய்யப்பட்டது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தமது இறுதி வாதத்தில் சுட்டிக்காட்டினார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். இதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர்.

Karnataka to submit loan details of Jayalalithaa?

இம்மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி 23-ந் தேதி நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் தொடங்கியது. கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் தவே தமது வாதங்களை 2 நாட்கள் வைத்திருந்தார். இதன் பின்னர் இந்த வழக்கின் விசாரணை மார்ச் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று தமது இறுதிவாதத்தை தவே நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் தொடங்கிய விசாரணையின் போது கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அவர் தம்முடைய வாதத்தில், இந்த வழக்கை ஜெயலலிதா இழுத்தடிக்க முயற்சிக்கிறார் என குற்றம்சாட்டியிருந்தார்.

அத்துடன் அரசின் சிறப்பு வழக்கறிஞர் (பவானிசிங்) நீக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பிலேயே ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆஜராக தவறியதற்கு கண்டனம் தெரிவித்து அபராதம் விதிக்கப்பட்டது.

அதன்பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது விசாரணை முடிவடைந்துவிட்டது. எழுத்து வடிவில் வாதங்களை தாக்கல் செய்ய கர்நாடகா அரசு தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஒரு நாள் அவகாசம் மட்டுமே இருந்த நிலையில் நாங்கள் 50 பக்கங்களில் வாதங்களை தாக்கல் செய்தோம். அதனை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

அத்துடன் வங்கியில் பெற்ற கடனையும் வருமானமாக கர்நாடக உயர் நீதிமன்றம் கருதி, அவரது சொத்துகளை கணக்கிட்ட செயல் தவறானது. அதை கணக்கில் எடுத்திருந்தால் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் கணிதப்பிழையே வந்திருக்காது என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வாங்கிய வங்கிக் கடன் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்; அப்படி தாக்கல் செய்யவில்லை எனில் வழக்கை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது சிரமம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதாவின் கடன் விவரங்களை விரிவாக கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தாக்கல் செய்தார். பின்னர் அவர் முன்வைத்த வாதம்:

1996-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை தொடங்கிய பின்னர் 1998-ம் ஆண்டுதான் வருமான வரியை அவர் தாக்கல் செய்தார்.

நமது எம்.ஜி.ஆர். சந்தா மூலம் வருமானம் கிடைத்ததாக ஜெயலலிதா தரப்பு கூறுகிறது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தொடங்கும் வரையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆருக்கு சந்தா செலுத்தும் திட்டம் என்பது எதுவும் இல்லை. இந்த வழக்கின் விசாரணை தொடங்கிய பின்னரே நமது எம்.ஜி.ஆருக்கு சந்தா செலுத்தும் திட்டமே அறிமுகப்படுத்தப்பட்டது.

தம்முடைய பிறந்த நாளன்று தொண்டர்களிடம் இருந்து ரூ2.15 கோடி பரிசுப் பொருட்கள் வந்ததை ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டார். ஆனால் ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பிட்ட கர்நாடகா உயர்நீதிமன்றமோ (நீதிபதி குமாரசாமி) ரூ1.5 கோடி என குறைத்து மதிப்பிட்டுள்ளார்.

எதற்காக ஜெயலலிதாவே ஒப்புக் கொண்ட ரூ2.15 கோடி பரிசுப் பொருட்கள் மதிப்பில் ரூ75 லட்சத்தை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்?

அதேபோல் ஜெயலலிதா தரப்பின் கடன்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் வருமானமாக மதிப்பீடு செய்தது முழுவதும் தவறானதாகும். கடன்களை எப்படி வருமானமாக கருத முடியும்?

இவ்வாறு ஆச்சார்யா தமது வாதத்தை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆச்சார்யா தமது இறுதிவாதத்தை நாளை நிறைவு செய்கிறார்.

அதன் பின்னர் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது இறுதிவாதங்களை முன்வைக்க உள்ளனர்.

English summary
Karnataka's Special Public Prosecutor, B V Acharya will be submit the details of the loans taken by Jayalalithaa on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X