வெள்ளத்தில் மிதக்கிறது கேரளா.. 29 பேர் பலி.. 53,000 பேர் முகாம்களில் தங்க வைப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் இதுவரை சுமார் 29 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தென்மேற்கு மழை கடந்த 3 நாட்களாக கடும் தீவிரம் கொண்டதன் காரணமாக கேரளாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழையின் பாதிப்பு மலையோர கர்நாடக மாவட்டங்களிலும் கூட எதிரொலிதாலும், கேரளாவில் இதன் பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. 53 ஆயிரத்து 500 பேர் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராணுவம், கடற்படை இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வெள்ளப் பாதிப்புகளால் 29 பேர் பலியாகி உள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று வெள்ளச்சேதம் பாதித்த இடங்களில் நேரில் ஆய்வு செய்தார். அதிகப்படியாக வயநாட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். முதல்வர் பினராயி விஜயன் இன்று, இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேத நிலையை ஆய்வு செய்தார்.
