For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹேட்ஸ்-ஆப் கேரளா.. தமிழக தொழிலாளி கிட்னி சிகிச்சைக்கு 11 லட்சம் நிதி கொடுத்து நெகிழ வைத்த மலையாளிகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மனித நேயம் மரித்துவிட்டதாக இனியும் குற்றம் சாட்டாதீர்கள், மனிதத்தை காக்க நீங்களே களத்தில் குதியுங்கள் என்று நெற்றிப் பொட்டில் அடிப்பதை போல செய்து காண்பித்துள்ளனர், 'கடவுளின் தேச' மக்கள்.

இடுக்கி மாவட்டத்திலிருந்து தமிழக மக்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள், தமிழக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுகிறார்கள், தமிழகத்தை சேர்ந்தவருக்கு சிகிச்சை மறுக்கப்படுகிறது.. இப்படியெல்லாம் கேரளா குறித்த செய்திகள் வெளியானதைதான் பார்த்திருப்பீர்கள். ஆனால், மலையாள மக்களின் மற்றொரு முகத்தை அறிய இந்த செய்தியை நீங்கள் வாசித்தே ஆக வேண்டும்.

உடன்பிறந்த அண்ணன், தம்பிகளே நைசாக நழுவியபோதிலும், இரு கிராம மக்கள் எப்படி ஒன்று சேர்ந்து, தமிழத்திலிருந்து பிழைப்புக்காக கேரளா சென்ற நபரின் கிட்னி சிகிச்சைக்கு ரூ.11 லட்சத்தை சேகரித்தனர் என்ற நெகிழ்ச்சி சம்பவம்தான் இது.

மதுரைக்காரர்

மதுரைக்காரர்

மதுரையை பூர்வீகமாக கொண்டவர் ஜெயன் (45). சிறு வயதில் மைத்துனரை பார்க்க அடிக்கடி கேரளா செல்வது வழக்கம். ஒரு கட்டத்தில், தனது 17 வயதில் ஜெயன், கோட்டையம் மாவட்டத்திலுள்ள சிங்கவனம் மற்றும் பல்லம் பகுதியில் தங்கியிருந்த அவர், வீடுகளுக்கு சென்று துணிகளை சேகரித்து இஸ்திரி போட்டு கொடுப்பது வழக்கமாம். சுமார் 20 வருடங்களாக இவ்விரு கிராமங்களின் ஃபேவரைட் இஸ்திரிக்காரர் இவர்தான் என்பதால் அனைவருடனும் தனிப்பட்ட முறையில் நல்ல பழக்கம் இவருக்கு ஏற்பட்டது.

திடீர் புயல்

திடீர் புயல்

சிங்கவனம் கிராமத்தில் மனைவி மாரியம்மாளுடன் ஜெயன் வசித்து வருகிறார். ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மற்றொரு மகள் தமிழகத்தில், எம்சிஏ படித்து வருகிறாராம். இப்படி திருப்தியாக சென்ற இவரது வாழ்க்கையில் திடீரென புயல் வீசத் தொடங்கியது. கடந்த ஐந்தாண்டுகளாக ஜெயன் கிட்னி பிரச்சினையால் அவதிப்படத் தொடங்கினார். அதிலும் கடந்த இரு வருடங்களில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் வீட்டிலேயே முடங்க வேண்டிய சூழ்நிலை.

பத்து லட்சம் தேவை

பத்து லட்சம் தேவை

கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு, சுமார் ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். ஆனால், சிறு வாடகை வீட்டில் வசிக்கும் ஜெயனுக்கு அதை அளிக்க வசதி கிடையாது. இதை அறிந்ததும்தான், அந்த அதிசயம் நடந்தது. ஜாதி, மதம், மாநிலம் போன்ற அனைத்து எல்லைகளையும் கடந்து, ஜெயனுக்காக இரு கிராமத்து மக்களும் இணைந்து கை கோர்த்தனர். இரு கிராமத்தை சேர்ந்த தன்னார்வலர்களும், வீடு வீடாக சென்று ஜெயன் சிகிச்சைக்காக நிதி திரட்டினர்.

நிதி திரட்டிய மக்கள்

நிதி திரட்டிய மக்கள்

'ஜெயன் ஃலைப் சேவிங் சமித்தி' என்ற பெயரில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, வங்கி கணக்கு துவக்கப்பட்டு, அதில் நிதி சேமிக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஏற்பாட்டாளரும், நகராட்சி கவுன்சிலருமான, டினோ தாமஸ் கூறுகையில், "கோட்டையத்திற்கு உட்பட 5 வார்டுகளில் சுமார் 2500 வீடுகளுக்கு சென்று ஜெயன் சிகிச்சைக்காக நிதி திரட்டியுள்ளோம். ஜெயன் சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் தேவைப்பட்ட நிலையில், மக்களின் ஆதரவால், 11.25 லட்சம் நிதியை பெற முடிந்துள்ளது.

கூலித்தொழிலாளி முதல் பணக்காரர் வரை

கூலித்தொழிலாளி முதல் பணக்காரர் வரை

தினக்கூலி தொழிலாளர்கள் ஒருநாள் சம்பளத்தை இதற்காக அளித்து நெகிழச் செய்தனர். நடுத்தர வர்க்கம், ஏழைகள், பணக்காரர்கள் என அனைத்து தரப்பினருமே மனமுவந்து நிதி உதவி அளித்தனர். ஒவ்வொருவரிடமும், ரூ.50 முதல் ரூ.25000 வரையிலும் நிதி வசூலானது. மக்களின் உதவியால் சிகிச்சை நடைபெற உள்ளது என்றார். ஆம்.. ஜெயனுக்கு நவம்பர் மாதம் இடது கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. கிட்னி கேட்பார்கள் என்ற தயக்கத்தில், கூடப்பிறந்த சொந்த பந்தங்கள், நைசாக நழுவிய நிலையில், ஜெயனின் மனைவி மாரியம்மாள், தனது கணவருக்காக கிட்னி தானம் செய்ய உள்ளார். இதற்கான உடல் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன.

நெகிழச் செய்த உதவி

நெகிழச் செய்த உதவி

இதுகுறித்து ஜெயன் கூறுகையில், "இரு கிராமத்து மக்களும் என்மீது வைத்துள்ள அன்பை பார்த்து நெகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 20 வருடங்களாக தள்ளு வண்டியில் துணிகளை இஸ்திரி போட்டு கொடுத்ததை மக்கள் நன்கு அறிவார்கள். கிட்னி பிரச்சினை ஏற்பட்டு கடந்த இரு வாரங்களாக வாரத்திற்கு இருமுறையாவது டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்திருந்தபோது, மக்கள் என்னை காப்பாற்றி விட்டனர்" என்று உருக்கமாக தெரிவித்தார். மலையாளத்தில் பேசினாலும் இன்னும் தமிழ் பேச்சுவழக்கு அதில் கலந்துவருவதை ஜெயனால் தவிர்க்க முடியவில்லை. முதலில் மாரியம்மாளுக்கு கேரளாவில் வசிக்க பிடிக்கவில்லையாம். தமிழகத்திற்கு செல்லலாம் என கணவரை வற்புறுத்தி வந்துள்ளார். இப்போது நானே சொன்னாலும் அவர் ஊரை விட்டு செல்ல தயாராக இல்லை என்று சிரிக்கிறார் ஜெயன்.

புகைப்படங்கள்: நன்றி 'தி நியூஸ் மினிட்'

English summary
Two Kerala villages, cutting across religious and political affiliations, to mobilise Rs 11 lakh needed for the kidney transplant of a migrant worker from Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X