India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடகு மாவட்டத்தில் புர்கா அணிந்து நடனமாடிய மாணவிகள் – மன்னிப்பு கோரிய ஏற்பாட்டாளர்கள்

By BBC News தமிழ்
|
புர்கா அணிந்து நடனமாடிய பெண்கள்
Getty Images
புர்கா அணிந்து நடனமாடிய பெண்கள்

குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கலாச்சார நிகழ்வில் மாணவிகளின் புர்கா நடனம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதாகவும் அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாவதாகவும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியில், "மே 28 மற்றும் மே 29 ஆகிய தேதிகளில், மேற்கு கொளகேரி கிராம வளர்ச்சிக் குழுவின் வைர விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

கலாச்சார நிகழ்வின் ஒரு பகுதியாக, கொடவா வாலகா இசைக்கு புர்கா அணிந்த சில குழந்தைகள் நடனமாடியது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு இருப்பதாக, இஸ்லாமிய சமூகத்தினரின் கடுமையான விமர்சனத்திற்கு இந்த நடனம் உள்ளானது.

விமர்சனங்களைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் திங்கள் கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார்கள்," எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், "பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு சில குழந்தைகள் புர்கா அணிந்து நடனமாடினார்கள். இருப்பினும், எந்த மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கில் இது செய்யப்படவில்லை. கிராமத்தில் மத நல்லிணக்கம் உள்ளது. இந்த நிகழ்வு இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படவில்லை," என்று குழுவின் தலைவர் கே முத்தையா கூறியதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

மக்கள் விரோத திமுக அரசின் உண்மை நிலையை அம்பலப்படுத்த அதிமுக டிஜிட்டல் திண்ணை

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட திமுக அரசின் உண்மை நிலையை அமல்படுத்த கிராமம்தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை பயிற்சி முகாமில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, சென்னை ராயப்ப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவையின் மாவட்ட செயலாளர்களுக்கான இரண்டு நாள் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. முகாமில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "இன்று தேர்தல் நடந்தால், திமுக 10 இடத்தில் கூட வெற்றிபெறாது என மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் கூறியுள்ளன. இனிவரும் நாடாளுமன்ற, சட்டப் பேரவை என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும் நிலையை உருவாக்க வேண்டும்," என்று கூறினார்.

இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, "பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிமுக நடவடிக்கை எடுத்ததுபோல் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த தேர்தல்களில் மக்களுக்கு நம் மீது கோபமோ எதிர்ப்போ இல்லை. நம் உழைப்பு குறைந்ததால் கடந்த தேர்தலில் தோற்று எதிர்க்கட்சி ஆகிவிட்டோம். இன்று அரசு ஊழியர்கள்கூட தவறு செய்துவிடோமோ என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். ஓராண்டு காலத்திலேயே திமுக ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ண மக்களிடம் உருவாகி விட்டது," என்று கூறினார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
Getty Images
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

மேலும், பயிற்சி முகாமில், "ஜெயலலிதா பேரவை சார்பில் மாதம்தோறும் ஒரு முறையாவது கிராம, பேரூர், நகர, மாநகரங்களில் கூட்டம் நடத்தி, அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட வரலாற்று சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும். அதோடு, அதிமுக அரசின் சாதனை திட்டங்களை முடக்கி வைத்து வறண்ட தமிழகமாகவும் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படுத்தி இருண்ட தமிழகமாகவும், அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாழ்படுத்தி மிரண்ட தமிழகமாகவும் உருவாக்கிய மக்கள் விரோத திமுக அரசின் உண்மை நிலையை அம்பலப்படுத்த கிராமம்தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் சொத்து வரி உயர்வுக்கு அனுமதி

நேற்று ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் மே மாத கூட்டத்தில், சொத்து வரி உயர்வுக்கு அனுமதி உட்பட 101 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, கூட்டத்தில் சொத்து வரி தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு, சொத்து வரி பொது சீராய்வை நடைமுறைப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி
Getty Images
சென்னை மாநகராட்சி

மேலும், சில முக்கியத் தீர்மானங்கள்

  • சலூன் கடைகள், அழகு நிலையங்கள் அமைப்பதற்கு புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, முறையான உரிமம் பெற புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • ராணிமேரி கல்லூரி வளாகத்தில் ரவீந்திரநாத் தாகூர் சிலை, கிண்டி காந்தி மண்டபத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் சிலை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் சிலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிர்பயா நிதியின் கீழ் ரூ.5 கோடி 46 லட்சத்து 60 ஆயிரத்து 827 மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பெருநகர சென்னை மாநகராட்சியின் பணிகளுக்கு மொத்த கொள்முதல் விலைக்கு பெறப்பட்ட பெட்ரோலை விட சில்லரை விற்பனையில் குறைவாக உள்ளது. எனவே வரும் காலங்களில் சில்லரை விற்பனையில் பெட்ரோல் கொள்முதல் செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகர ஆஸ்பத்திரிகளின் சேவைகளின் தரத்தை மேம்படுத்த புதிய செயல்திட்டம் உள்ளிட்ட 101 தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களில் மாநகராட்சி அல்லாமல் மற்ற குறைகளும் வருகின்றன. இந்த குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Kodagu: Students perform dance wearing hijab at Kodavara Bhaghvati temple utsav and the organisers apologised
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X