For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்பால் மசோதா: ராஜ்யசபாவில் நிறைவேறியது... இன்று லோக்சபாவில் விவாதம்

Google Oneindia Tamil News

Lokpal bill passed in Rajya Sabha, Lok Sabha to take it up today
டெல்லி: ராஜ்யசபாவில் நேற்று லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப் பட்டவுடன் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட இருப்பதாக அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு லோக்பால் மசோதாவை மத்திய அரசு திருத்தங்களுடன் நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது. நீண்ட விவாதத்திற்குப் பின்னர் அம்மசோதா நிறைவேற்றப்பட்டது. சமாஜ்வாடி கட்சியைத் தவிர கிட்டத்தட்ட அத்தனை கட்சிளுமே இந்த மசோதாவுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை எடுத்திருந்ததால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படவில்லை.

இந்த மசோதாவிற்கு இந்த மசோதாவை முக்கிய எதிர்க்கட்சிகளான பாஜக, அதிமுக, திமுக, இடதுசாரிக் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்டவை ஆதரித்தன.

ஆனால், மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அதை ஆதரிக்கவில்லை. மேலும், "இச் சட்டத்தால் எம்.பி.க்கள் மீது யாராவது புகார் கொடுத்தால் அவர்கள் நாள்தோறும் காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்' என்று கூறி அவர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

லோக்பால் மசோதா மீதான விவாதத்தை மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

"லோக்பால் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் நாள், வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய பொன்னாளாகும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எட்டு முறை லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2011-இல் முதன்முறையாக லோக்பால் வரைவுச் சட்ட மசோதாவை தயாரிக்க மத்திய அரசு முனைப்பு காட்டியது. கடந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி லோக்பால், லோக் ஆயுக்த சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 27-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட லோக்பால் மசோதா மூலம் மத்திய, மாநில அளவில் சீரான கண்காணிப்பும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளும் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.

லோக்பால் தேர்வுக் குழுவில் பிரதமர், மக்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நீதிபதி, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நீதித் துறை வல்லுநர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். லோக்பால் தேர்வுக் குழுவுக்கு உதவியாக நியமிக்கப்படும் ஆய்வுக் குழுவிலும் பல்வேறு சமூகத்தினரின் பிரதிநிதிகள் இருப்பர். லோக்பால் குழுவில் தலைவர் உள்பட அதிகபட்சம் எட்டு உறுப்பினர்கள் இடம் பெறுவர். அதில் 50 சதவீதத்தினர் நீதித் துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பர். மீதமுள்ள 50 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்டோர், மகளிர் ஆகியோரின் பிரதிநிதிகளாக இருப்பர்.

லோக்பால் வரம்பில் யார்?: சில நிபந்தனைகள், புகார்களுக்கு உள்பட்டு பிரதமரும் விசாரணை வரம்பில் இடம்பெறுவார். குரூப் ஏ, பி, சி, டி என அனைத்துப் பிரிவு அரசு ஊழியர்களும் லோக்பால் வரம்புக்குள் வருவர். தனக்கு வரும் புகார்கள் மீது சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் நடத்தும் விசாரணையைக் கண்காணிக்க லோக்பால் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும். சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்ய பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும். ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்படுவோர் மீதான வழக்கு நிலுவையில் உள்ள போதும், அவர்களின் சொத்துகள், பொருள்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் லோக்பாலுக்கு உண்டு. ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி வழங்கப்படும் அதிகபட்ச ஏழு ஆண்டு தண்டனை பத்தாண்டாக அதிகரிக்கப்படும்' என்றார் கபில் சிபல்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி பேசுகையில், "46 ஆண்டுகள் கடந்து ஒரு வழியாக 2011-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய லோக்பால் மசோதா காலம் கடந்து தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத, சாதி ரீதியாக லோக்பால் குழுவில் பிரதிநிதிகள் இடம்பெறக் கூடாது. ஊழல் புகாருக்கு உள்ளானவர்கள் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அவரை சம்பந்தப்பட்ட அரசுகள் பணி இடமாற்றம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்ய லோக்பால் அனுமதி அளிக்க வேண்டும்' என்றார்.

அவருக்கு பதில் அளித்த கபில் சிபல் "அரசியலமைப்பு விதிகளின்படியே லோக்பால் குழுவில் இடம் பெறுவோரை நியமிக்கும் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன' என்றார். அதைத் தொடர்ந்து லோக்பால் மசோதாவை முழுமையாக ஆதரிப்பதாக அருண் ஜேட்லி கூறினார்.

அதேபோல, "சட்ட நுணுக்கங்கள் இருப்பதால் லோக்பால் குழுவில் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் தவிர்க்கப்பட்டுள்ளனர்' என்று கபில் சிபல் விளக்கினார்.

அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் பேசுகையில் "காலம் கடந்து தாக்கல் செய்யப்படும் மசோதாவை மத்திய அரசு அவசரமாக நிறைவேற்றுகிறது. இதே ஈடுபாட்டை மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதிலும் காட்ட வேண்டும்' என்றார்.

திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் பேசுகையில் "மாநில முதல்வர்களை லோக்பால் வரம்பில் சேர்க்க வேண்டும்' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாரம் யெச்சூரி பேசுகையில், "லோக்பால் விசாரணை வரம்புக்குள் பொது-தனியார் கூட்டு சேர்ந்து நடத்தும் திட்டங்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் கொண்டு வர வேண்டும்' என்று தீர்மானம் முன்மொழிந்தார். ஆனால், வாக்கெடுப்பில் அவரது தீர்மானத்துக்கு எதிராக 151 வாக்குகளும் ஆதரவாக 19 வாக்குகளும் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ், லோக் ஜன சக்தி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் லோக்பால் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், "லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவது மத்திய அரசின் மைல்கல் சாதனை' என்று பெருமிதப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று லோக்சபாவில் இந்த மசோதா விவாதத்திற்கு வருகிறது. விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடைபெறும். லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதுகுறித்து அன்னா ஹஸாரே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ராலேகான் சித்தியில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரே, சமாஜ்வாடி கட்சித் தவிர லோக்பால் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஏற்கனவே, கடந்த 2011ம் ஆண்டு லோக்பால் மசோதாவை மத்திய அரசு லோக்சபாவில் தாக்கல் செய்தது. அப்போது அங்கு கடும் விவாதம், எதிர்ப்புகள், ஆதரவுகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் அது நிறைவேற்றப்படாமல் தடுக்கப்பட்டு விட்டது. இதையடுத்து நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவுக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அதில் திருத்தங்கள் மேற்கொண்ட பின்னர் ராஜ்யசபாவில் மீண்டும் தாக்கலானது குறிப்பிடத்தக்கது.

English summary
After a pretty long time, the Congress-led UPA government had a comforting moment on Wednesday when the much-delayed lokpal bill was passed in Rajya Sabha with most of the Opposition on board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X