பிரதமர் மோடியின் ஜஸ்ட் 4 மணி நேர விசிட்..! ரூ.23 கோடி செலவிடும் மாநில அரசு!
போபால்: மத்தியப் பிரதேசம் தலைநகர் போபால் நகரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் செல்கிறார். பிரதமரின் 4 மணி நேர நிகழ்ச்சிக்காக மாநில அரசு ரூ.23 கோடி செலவிடுகிறது.
பிரதமர், போபால் நகரில் நான்கு மணி நேரமும், விழா மேடையில் அதிகபட்சம் 1 மணி நேரம் 15 நிமிடங்களும் இருப்பார்கள்.
தொடர் கனமழை... வடியாத வெள்ளம் 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
இதற்காக ஐந்து குவிமாடங்கள் கட்டப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிக்காக மாநில அரசு 23 கோடிக்கு மேல் செலவிடுகிறது, இதில் 13 கோடி ஜம்போரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மக்களை அழைத்துச் செல்ல மட்டுமே செலவிடப்படுகிறது.

ரயில் நிலையம்
நவம்பர் 15 ஆம் தேதி, பகவான் பிர்சா முண்டாவின் நினைவாக மத்தியப் பிரதேசம் ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் என்ற நாளை கொண்டாடுகிறது. பழங்குடியினருக்கான விழா இதுவாகும். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார், மேலும் நகரத்தில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் நாட்டின் முதல் அரசு-தனியார் கூட்டாண்மையால் கட்டப்பட்ட ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தையும் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

ஒரு வாரம் நிகழ்ச்சி
ஜன்ஜாதியா கௌரவ் திவாஸின் ஒரு பகுதியாக, பிர்சா முண்டா மற்றும் பிற பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் நவம்பர் 15 முதல் 22 வரை தேசிய அளவில் ஒரு வார நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் மத்திய அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்திருந்தது.

பழங்குடியினர்
ஜம்போரி மைதானம் மிகப்பெரிய இடமாகும். எனவே மத்தியப் பிரதேசம் முழுவதிலும் இருந்து இரண்டு லட்சம் பழங்குடியினர் இங்கு அழைத்து வரப்பட உள்ளனர். மேலும் அந்த இடம் முழுவதும் பழங்குடியினரின் கலை மற்றும் பழங்குடி புராணங்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இப்பணியில் ஒரு வாரமாக 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்துக்கு பல கோடி
52 மாவட்டங்களில் இருந்து வரும் மக்களின் போக்குவரத்து, உணவு மற்றும் தங்கும் வசதிக்காக ரூ.12 கோடியும், ஐந்து குவிமாடங்கள், கூடாரங்கள், அலங்காரம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றிற்காக 9 கோடிக்கு மேல் செலவாகும். ம.பி. மாநிலத்தில் பழங்குடியினருக்கு 47 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 2008ல் பாஜக 29 வெற்றி பெற்றது, 2013ல் இந்த எண்ணிக்கை 31ஆக அதிகரித்தது, ஆனால் 2018ல் 47ல் பாஜக 16 இடங்களை மட்டுமே பெற்றது. இந்த நிலையில்தான், பழங்குடியினருக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு கவனம் கொடுக்கிறார் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.

பழங்குடியினர் மீதான குற்றங்கள்
தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் புள்ளி விவரப்படி, மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு பழங்குடியினருக்கு எதிராக, 2,401 வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2019 இல், இந்த எண்ணிக்கை 1,922 ஆக இருந்தது, 2018 இல் இது 1,868 ஆக இருந்தது. இரண்டு ஆண்டுகளில், பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரயில் நிலையத்தின் சிறப்பு
ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் அரசு-தனியார் பங்களிப்புடன் சுமார் 450 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் ரயில் நிலையத்தின் அதே பாணியில் உள்ளது. ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு ஜூலை 2016 இல் தொடங்கப்பட்டது. தற்போது திறந்து வைக்கப்பட உள்ளது. வருகை மற்றும் புறப்பாடு அடிப்படையில் ரயில் பயணிகளை பிரித்து வைப்பது, பிளாட்பாரங்கள், ஓய்வறைகள் மற்றும் தங்குமிடங்கள் மற்றும் ஓய்வு அறைகளில் போதுமான உட்காரும் வசதி போன்ற பல அம்சங்கள் இந்த நவீன ரயில் நிலையத்தில் இருக்கும்.

ரயில் நிலையத்திற்கு யார் பெயர்?
போபால் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட பாஜகவின் பல தலைவர்கள் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால், ம.பி. மாநில அரசு கோண்ட் பகுதியை ஆண்ட, ராணி கமலாபதியின் பெயரை சூட்ட, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.