
"நீ அதுக்குத்தான் லாயக்கு" - வீடியோ காட்டி பேராசிரியர் மிரட்டுவதாக மதுரை மாணவி புகார்
"நீ ஒரு பையனிடம் தவறாக இருந்ததற்கான வீடியோ இருக்கிறது" என்று கூறி, பேராசிரியர் ஒருவர் தன் பெற்றோர் முன்பே தன்னை அவதூறாகப் பேசுவதாக மாணவி ஒருவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறேன். கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக என் வகுப்புக்கான பொறுப்பு பேராசிரியரை பார்க்க, உரிய பாடவேளை பேராசிரியரின் அனுமதி பெற்று சென்று வகுப்புக்குத் திரும்பி வந்தேன். அப்போது, என்னை வகுப்புக்குள் அனுமதிக்காமல், ஒரு பையனை பார்க்க போனதாக என் மீது அவதூறு குற்றச்சாட்டை துறைத் தலைவர் வைத்தார். அத்தோடு என்னை வகுப்பில் இருந்தும் சஸ்பெண்ட் செய்தார். என்னை ஒழுக்கம் கெட்ட மாணவி என்றும் கடுமையான அவதூறு வார்த்தைகளால் பேசி களங்கப்படுத்தி என் பெற்றோரை அழைத்து வர கட்டளையிட்டார்'' என்று அந்த மாணவி கூறியுள்ளார்.
"இந்த நிலையில், நீ ஒரு பையனிடம் தவறாக இருந்ததற்கான வீடியோ இருக்கிறது" என்று கூறி, பேராசிரியர் ஒருவர் தன் பெற்றோர் முன்பே தன்னை அவதூறாகப் பேசுவதாக புகார் அளித்துள்ளார்.
வீடியோ காட்டி மிரட்டல்
"நானும் எனது பெற்றோரும் துறைத் தலைவரை பார்ப்பதற்கு வெகு நேரம் காத்திருந்தும் அனுமதிக்காமல் பலமுறை எங்களை காக்க வைத்தார். அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டபோது, எங்களுடைய மகள் மீது எந்தத் தவறும் இல்லாமல் "ஏன் என் மகளின் கல்விக்கு இடையூறு செய்தீர்கள்" என கேட்டனர். அதற்கு, துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் சேர்ந்து என்னை மிரட்டினார்கள்.
"நீ ஒரு பையனிடம் தப்பாக இருந்த வீடியோ ஆதாரம் இருக்கிறது என்று கூறி தன் செல்போனில் இருக்கும் ஒரு வீடியோவை காட்டி பேராசிரியர் மிரட்டி அவதூறாக பேசினார். என் பெற்றோர் முன்னிலையிலேயே "நீ எல்லாம், இங்கே படிக்கவா வர்ற, தப்பா நடக்கத்தான் வர்ற, நீ அதுக்குத் தான் லாயக்கு" என்று என்னை மிகவும் அவமானப்படுத்தி அனுப்பி வைத்தனர்" என அந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த மாணவி கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் தான் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார் அந்த மாணவி.
இந்த நிலையில், தேர்வறையில் தமது ஹால் டிக்கெட்டை பறிப்பது, தேர்வு எழுத விடாமல் இடையூறு செய்வது போன்ற நடவடிக்கைக்கு தாம் உள்ளாவதாகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த தனக்கு கல்வி ஒன்றே எதிர்காலம். ஆகவே தன்னைப் போன்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவி மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
துறைத் தலைவர் விளக்கம்
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று சம்பந்தப்பட்ட கல்லூரியின் துறைத்தலைவரிடம் பிபிசி கேட்டது.
"பெற்றோருடன் சந்திக்க வந்த மாணவியிடம், "என்ன இருந்தாலும், பேராசிரியரை அவதூறாக பேசியிருக்கக் கூடாது. அதற்காக மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடு என்று தான் கேட்டேன் ஆனால் அந்த மாணவி தற்போது வரை மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுக்கவில்லை," என்கிறார் துறைத் தலைவர்.
இதையடுத்து அவரது தரப்பு நிலையை விவரிக்குமாறு கேட்டோம்.
"அந்த மாணவி வகுப்பறையில் இருந்து வெளியேறிய பிறகு வகுப்பறையில் இருப்பது போல் வருகை பதிவேட்டில் எவ்வாறு குறிப்பிட முடியும்? ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு? அதனால் சம்பந்தப்பட்ட மாணவியிடம் பேராசிரியர் எங்கே போனீங்க என்று கேட்டதற்கு? வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம் என அலட்சியமாக பதில் கூறி வகுப்பறையை விட்டு வெளியேறி விட்டார். துறைத் தலைவர் என்ற முறையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் என்னிடம் இது சம்பந்தமாக கூறியிருந்தார். அதனால் பெற்றோருடன் வகுப்பறைக்கு வரும்படி மாணவியிடம் அறிவுறுத்தியிருந்தேன்.
- இந்தியாவில் கருத்தடையின் சுமையை பெண்களே சுமப்பது ஏன்?
- உதய்பூர் படுகொலை: "குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்" - கள நிலவரம்
- சென்னையில் 5 பேர் மரணம்: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறக்கப்படுவது ஏன்?
மேலும், அந்த மாணவி ஹால் டிக்கெட்டில் கையொப்பம் வாங்குவதற்கு என்னிடம் கடைசிவரை வரவே இல்லை. மாணவி வராத பட்சத்தில் நான் எவ்வாறு கையெழுத்திட முடியும்? அந்த மாணவி தொடர்பாக வீடியோ எடுப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. அது அவசியமும் இல்லை என்கிறார் துறைத் தலைவர்.
"சாதி பாகுபாடு பார்ப்பதாக என் மீது புகார் கொடுக்கிறார்கள். மாணவர்கள் குறிப்பிடும் அதே சாதியை சார்ந்தவர் தான் நான். அப்படி இருக்கும்போது, நான் ஏன் பாகுபாடு பார்க்கப் போகிறேன்? சம்பந்தப்பட்ட மாணவி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டிருப்பதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாமல் நிற்கிறோம். இதுதான் யதார்த்த நிலைப்பாடு. அந்த மாணவிக்கு கவுன்சிலிங் நிச்சயம் தேவைப்படுகிறது," என்கிறார் துறைத் தலைவர்.
இன்னொரு பேராசிரியரே காரணம்
"தனது பிரிவில் பணிபுரியும் இன்னொரு பேராசிரியரே பிரச்னைக்கு முழுக்க காரணம்," என்றும் கூறுகிறார் துறைத் தலைவர். அவர் குறித்து கல்லூரி முதல்வரிடம் மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக புகார் அளித்து வந்ததாகவும் தன்னைப் போன்றே பலரும் புகார் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் குறிப்பிட்ட பேராசிரியரிடம் நாம் பேசினோம்.
அவரோ, பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார் மீது கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மாணவிக்கு உரிய விளக்கம் அளிக்காமலும், மாணவியின் புகாரை திசை திருப்புவதற்காக சம்பந்தமில்லாமல் என் மீது பழி போடுகிறார்கள்," என்கிறார்.
இந்த நிலையில், மாணவி அளித்த மனித உரிமைகள் ஆணைய புகார் சமூக செயல்பாட்டாளர்களின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.
"கல்லூரி மாணவியிடம் இவ்வாறு நடந்து கொள்வது நிச்சயம் முறை அல்ல, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் சமூக ஆர்வலர் ஹென்றி திபேன்.
இது தொடர்பாக அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எந்த பெண்ணையும் அவரது அனுமதி இன்றி புகைப்படம் எடுப்பது தனிமனித உரிமை மீறல். அதிலும் மிரட்டுவது குற்றவியல் தண்டனைக்கு உட்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவி தலித் மாணவி என்பதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நிச்சயம் பழங்குடியினர்/பட்டியல் பிரிவினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதில் மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தினரையும் இணைக்க வேண்டும்," என்றார்.
கடைசியாக பல்கலைக்கழக முதல்வரிடம் பேசியபோது, "மாணவியின் புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளோம். அதன் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அதன் முடிவில்தான் எதையும் கூற முடியும்," என முடித்துக் கொண்டார்.
https://www.youtube.com/watch?v=RWWxUPX2q7o
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்