மகர சங்கராந்தி.. கட்டுக்கடங்காத கூட்டத்தினால் திணறிபோன கங்கா சாகர்.. தொற்று எகிறும் அபாயம்
கொல்கத்தா: மகர சங்கராந்தியை முன்னிட்டு, கங்காசாகருக்கு வருகை தந்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது... நேற்றைய தினமே பக்தர்கள் கட்டுக்குள் அடங்காமல் குவிந்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலம்... மேற்கு வங்க மாநிலத்தில் இந்த விழாவையொட்டி, கங்கா சாகர் தீவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடுவது வழக்கம்.
மேற்கு வங்க மாநிலம் வழியாக செல்லும் கங்கை நதி, கடலில் கலக்கும் பகுதிதான் கங்கா சகார் பகுதியாக கருதப்படுகிறது..
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை கோலாகலம் மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள்

வங்கக்கடல்
இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று, இறுதியில் வங்க கடலில் சங்கமிக்கிறது... கங்கை நதி சங்கமிக்கும் முகத்துவாரம் கங்கா சாகர் என்றழைக்கப்படுகிறது.. இது ஒரு தீவு பகுதியாகவும் கருதப்படுகிறது.. கடந்த சில தினங்களாகவே இந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது.. இந்த வருடமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராட முடிவு செய்தனர்... அதன்படி அதிகாலையில் புனித நீராடினார்கள்.. ஆனால், இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமானோர் வந்துள்ளதாக மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது.

பக்தர்கள்
கடந்த வருடம் 15 லட்சம் பக்தர்கள் கங்கா சாகருக்கு வந்திருந்த நிலையில், இந்த வருடம் இப்போதே 20 லட்சம் பக்தர்களை தாண்டி விட்டனர் என்றும், இந்த பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிரிக்கும் என்றும் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது... மேற்கு வங்கத்தை பொறுத்தவரை தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.. அதாவது, டிசம்பர் 28 முதல், 13 ஜனவரி அன்றைய தேதிவரை, கொரோனா தினசரி கேஸ்கள் 732-ல் இருந்து 23,467 ஆக உயர்ந்துவிட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியிருந்தது..

பக்தர்கள்
அதாவது, டிசம்பர் 28ம் தேதி 2.35 சதவீதத்தில் இருந்து, ஜனவரி 13ம் தேதிக்குள் 32.13 சதவீதமாக தொற்று உயர்ந்துள்ளது. ஆனாலும் பக்தர்கள் வழக்கத்திற்கு மாறாகவே இங்கு வந்திருந்து புனித நீராடினர்.. ஆனால், அவர்களில் பலர் மாஸ்க்குகளை அணியாமல் இருந்தனர்.. குறிப்பாக, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். கங்கை நதிகரையில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கங்கை நதியில் புனித நீராட வந்த மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.. தடுப்பூசியின் 2 டோஸ் சான்றிதழும், கொரோனா டெஸ்ட் செய்து அதற்கான சான்றிதழும் எடுத்து வந்தவர்களுக்கு மட்டுமே கங்கையில் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் நதியில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடினர்..

நடவடிக்கை
கடந்த வியாழக்கிழமையை எடுத்து கொண்டால், மேற்கு வங்காளத்தில் ஒரே நாளில் 23,467 புதிய தொற்று கேஸ்கள் பதிவாகியுள்ளன.. இது முந்தைய நாளின் தினசரி வழக்குகளில் இருந்து 1,312 கேஸ்கள் அதிகமாகும்.. சதவீத அடிப்படையிலும் 30.86 சதவீதத்தில் இருந்து 32.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. எத்தனையோ தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், நீதிமன்ற வழிகாட்டுதல்படி விழாக்கள் நடந்தபோதிலும், இந்த விழாவானது மேற்கு வங்க அரசை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.