
நான் கார்கே.. தீண்டத்தகாதவன்! மோடியோ பொய்களின் தலைவர் -குஜராத்தில் எமோசன் ஆன காங்கிரஸ் புதிய தலைவர்
காந்திநகர்: கார்கே என்னும் தான் ஒரு தீண்டத்தகாதவர் என்றும், பிரதமர் மோடி விற்கும் தேநீரை வாங்கி குடிப்பவர்கள் தான் கொடுக்கும் தேநீரை வாங்க மாட்டார்கள் எனவும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்து இருக்கிறார்.
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
ஆளுங்கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன.
குஜராத் தேர்தல்.. முஸ்லிம்களுக்கு பாஜக ஏன் சீட் தரல? சட்டென செய்தியாளர் கேள்வி -ஜேபி நட்டா விளக்கம்

தேர்தல் காய்ச்சல்
எனவே குஜராத்தில் தேர்தல் காய்ச்சல் தீவிரம் அடைந்து இருக்கிறது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்து கட்சிகளின் பிரமுகர்கள் குஜராத்தில் முகாமிட்டு தத்தமது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராகுல் காந்தி
அந்த வகையில் குஜராத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் சென்று 2 நாட்கள் தங்கி இருந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒற்றுமை யாத்திரைக்கே அவர் திரும்பி இருக்கிறார். தற்போது மத்திய பிரதேசத்தில் அவர் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

மல்லிகார்ஜுன் கார்கே
இந்த நிலையில் காங்கிரஸ் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே குஜராத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். அவரோடு மேலும் சில முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களும் குஜராத் மாநிலத்தில் தங்கி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் பொதுக்கூட்டம்
தற்போது முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நர்மதா மாவட்டம் தெடிப்பாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார்.

தீண்டத்தகாதவன்
"தான் ஒரு ஏழை என்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி சொல்லிக்கொள்கிறார். ஆனால், நான் ஏழைகளுக்கெல்லாம் ஏழை. நான் கார்கே. தீண்டத்தகாத சமுதாயத்தில் இருந்து வந்தவன். நீங்கள் கொடுக்கும் தேநீரை மக்கள் அருந்தவாவது செய்வார்கள். ஆனால், நான் கொடுத்தால் யாருமே வாங்க மாட்டார்கள்.

அனுதாபம் பெறும் மோடி
மக்களின் அனுதாபத்தை நீங்கள் பெறுவதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அவர்கள் புத்திசாலிகள். நீங்கள் முதல் பொய்யை சொன்னால் மக்கள் கேட்பார்கள். நீங்கள் இரண்டாவது பொய்யை சொன்னாலும் மக்கள் கேட்பார்கள். ஆனால், எத்தனை முறைதான் நீங்கள் பொய்களுக்கு மேல் பொய்களாக சொல்வீர்கள்?

பொய்களின் தலைவர்
பிரதமர் நரேந்திர மோடி பொய்களின் தலைவர்கள். காங்கிரஸ் நாட்டை கொள்ளையடித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார்கள். ஆனால், மோடிதான் மக்களை கொள்ளையடித்துவிட்டார். பழங்குடியின மக்களுக்கு நீங்கள் இடம் கொடுக்கவில்லை. காடுகளை, நிலங்களை, நீர்நிலைகளை அழித்தது யார்?" என்று கேள்வி எழுப்பினார்.