2024 பிரதமராவார் மம்தா பானர்ஜி! திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி நம்பிக்கை
கொல்கத்தா: 2024 மக்களவை தேர்தலில் மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக மாறுவார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்பி அபரூபா தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது. இந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக செயல்பட்டு வந்தார்.
அதிநவீன 6 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் ‛ப்ராஜெக்ட் 75ஐ’ திட்டத்தில் பிரான்ஸ் விலகல்
கடந்தாண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக கடும் போட்டி கொடுத்தாலும் கூட அதனை முறியடித்த மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து முதல்வராக வலம் வருகிறார்.

பாஜக, மம்தா மோதல்
மேலும் மம்தா பானர்ஜிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் நோக்கில் மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இதற்கு மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்தார்.அதில், ‛‛மத்திய அரசு சார்பில் மேற்கு வங்கத்துக்கு ரூ.97,807.91 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேற்கு வங்கத்துக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு வழங்கினால் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரிகள் அனைத்தையும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி இதை வழங்குவாரா என பார்ப்போம்'' என்று தெரிவிக்கப்பட்டது.

தேசிய அளவில் புதிய அணிக்கு முயற்சி
இது ஒருபுறம் இருக்க மம்தா பானர்ஜி தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து 2024 மக்களவை தேர்தலில் களமிறங்க முயற்சித்து வருகிறார். இதனால் ஒவ்வொரு மாநிலங்களின் முதல்வர்கள், மாநில கட்சி தலைவர்களிடம் நெருக்கம் காட்டி வருகிறார். இவருக்கு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோர் உதவி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெண் எம்பி நம்பிக்கை
இந்நிலையில் தான் மேற்குவங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி 2024 மக்களவை தேர்தலில் பிரதமராக பொறுப்பேற்பார் என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபரூபா தாஸ் டுவிட்டரில் பதிவிட்டார். அதில் 2024ல் மம்தா பானர்ஜி பிரதமராவார். அவருக்கு மாற்றாக மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜி மேற்குவங்காள முதல்வராக பொறுப்பேற்பார் என தெரிவித்து இருந்தார். இருப்பினும் இந்த பதிவை அடுத்த ஒருமணி நேரத்தில் அவர் நீக்கம் செய்தார்.

செய்தி தொடர்பாளரின் ட்வீ ட்
முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் நேற்று, "2036 ஆம் ஆண்டு மேற்குவங்காளத்தின் முதல்வராக அபிஷேக் பானர்ஜி பதவியேற்பார். அதற்குள் முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் (நீண்ட காலம் முதல்வர்) சாதனையை முறியடித்து, மம்தா பானர்ஜி இந்தியாவிலேயே ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துவார்" என்று பதிவிட்டார்.

யார் இந்த அபிஷேக் பானர்ஜி
மம்தா பானர்ஜியின் மருமகன் தான் அபிஷேக் பானர்ஜி. மம்தா தனது குடும்பத்தில் இருந்து யாரையும் அரசியலில் ஈடுபடுத்தாத நிலையில் அபிஷேக் பானர்ஜியை மட்டும் தன்னுடன் வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு அடுத்து செல்வாக்கு படைத்த தலைவராக இவர் உள்ளார். சமீபத்தில் கோவா சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அங்கு அபிஷேக் பானர்ஜி தான் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.