ட்விஸ்ட்.. மம்தா கட்சிக்கு வந்த திடீர் வாழ்வை பாருங்க.. கோவா தேர்தலில் கிங்மேக்கராக மாற வாய்ப்பு
கோவா: கோவா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிகள் கிங்மேக்கராக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
கோவாவில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாநிலத்தை ஆளும் பாஜக தனித்தும் எதிர்கட்சியான காங்கிரஸ் கோவா ஃபார்வர்டு கட்சியுடனும் கூட்டணி அமைத்து களமிறங்கியது.
இதுதவிர அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, மேற்கு வங்க முதல்வரின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியுடன்(எம்ஜிஎம்) கூட்டணி அமைத்து களமிறங்கிஉள்ளது. 40 தொகுதிகளில் மொத்தம் 332 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 11.6 லட்சம் பேர் வாக்காளர்களாக இருந்தனர்.

கருத்து கணிப்புகள்
பிப்ரவரி 14ல் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தன. இதில் பதிவான ஓட்டுகள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நியைலில் கோவாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ், பாஜக இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி இருப்பது தெரியவந்தது.

தொங்கு சட்டசபை
இங்கு ஆட்சியை பிடிக்க 21 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். ஆனால் காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை என்பது கேள்விக்குறியாக தான் இருக்குமாம். இதனால் தொங்கு சட்டசபை உருவாக அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தான் கிங்மேக்கராக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நியூஸ் எக்ஸ்
இந்தியா நியூஸ் செய்தி நிறுவனத்தின் கருத்து கணிப்பில் பாஜக 13-19 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 14-19; இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 3-5 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. இடிஜி ரிசர்ச் பாஜக 17-20 இடங்களிலும் காங்கிரஸ் 15-17 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 3-4 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் எக்ஸ் போல்ஸ்ட்ராட் கருத்து கணிப்பின்படி பாஜக 17-19 இடங்களிலும் காங்கிரஸ் 11-13 இடங்களிலும், ஆம்ஆத்மி 1 முதல் 4 இடங்களிம், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 2 முதல் 7 கூட்டணியிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு
ரிபப்ளிக் டிவி கணிப்பின் படி பாஜக 13-17 இடங்களிலும் காங்கிரஸ் 13-17 இடங்களிலும் திரிணாமுல் 2-4 இடங்களிலும் வெல்லும். டைம்ஸ் நவ் கருத்து கணிப்பின்படி பாஜக 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி 6 தொகுதியிலும் ஆம்ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. ஜீ நியூஸ் கருத்து கணிப்பின்படி பாஜக 13-18 இடங்களிலும்; காங்கிரஸ் 14 முதல் 19 தொகுதிகளிலும் திரிணாமுல் 2-5 தொகுதிகளிலும் வெல்லும்.

காங்கிரஸ், பாஜகவுக்கு...
இந்தியா டிவி- கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் கருத்து கணிப்பில் பாஜக 10-14 இடங்கள், காங்கிரஸ் 20-25 இடங்கள் திரிணாமுல் 3-5 இடங்களிலும் வெல்லும். இந்த நிறுவனத்தின் கருத்து கணிப்பின் படி கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாம். இந்தியா டிவி- சி.என்.எக்ஸ் பாஜக 16-22 இடங்களிலும் ; காங்கிரஸ் 11-17 இடங்களிலும் திரிணாமுல் 1-2 இடங்களிலும் வெல்லும். அதாவது இந்த நிறுவன கருத்து கணிப்பின்படி பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்ளுமாம்.

பெரும்பான்மை இல்லா 6 கணிப்புகள்
இந்த கருத்து கணிப்புகளில் தலா ஒன்று மட்டுமே பாஜக, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளது. மற்ற 6 கருத்து கணிப்புகளும் தொங்கு சட்டசபை அதாவது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறியுள்ளது. தொங்கு சட்டசபை உருவாகும் என கூறியுள்ள கருத்து கணிப்புகளில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளில் ஏதேனும் ஒன்று 18 இடங்கள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் குறைந்தபட்சம் 5 இடங்கள் வரை வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

கிங்மேக்கர் யார்
இதனால் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியினரிடம் ஆதரவு கோரலாம். இவர்கள் ஆதரவு அளிக்கும் கட்சி தான் வெற்றி பெறும். இதனால் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகள் கிங் மேக்கராக மாற வாய்ப்புள்ளது. இருப்பினும் பல தேர்தல்களில் கருத்து கணிப்புகள் பொய்யாக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலிலும் கருத்து கணிப்புகள் நிலவரம் எந்த அளவில் உள்ளது என்பதை நாம் அறிய ஓட்டுப்பதிவு நாளான மார்ச் 10 வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

பாஜக நம்பிக்கை
இருப்பினும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், ‛‛பாஜக 18 முதல் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இரட்டை என்ஜின் அரசாக செயல்பட்டோம். கருத்து கணிப்புகளும் உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூரில் ஆட்சியை பிடிக்கும் என வெளியாகி உள்ளது. கோவாவில் நிச்சசயம் ஆட்சியை பிடிப்போம்'' என்றார்.