இறந்ததாக புதைக்கப்பட்ட திருடன்! 9 மாதத்துக்கு பின் உயிருடன் வந்த அதிசயம்! தட்டித்தூக்கிய போலீசார்
போபால்: மத்திய பிரதேசத்தில் ரூ.6 லட்சத்துடன் மாயமான நபர் இறந்ததாக கூறி புதைக்கப்பட்ட நிலையில் அவர் 9 மாதத்துக்கு பிறகு அதிசயமாக உயிருடன் வந்தார். இதையடுத்து திருட்டு வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தியபிரதேச மாநிலம் ஷதார்பூர் மாவட்டம் பமிதா பகுதியில் ஹார்ட்வேர் கடை வைத்திருப்பவர் சுதிர் அகர்வால். இவரது கடையில் சரக்கு வாகன டிரைவராக சுனில் நாம்தேவ் (வயது 34) பணியாற்றினார்.
4 ஓட்டுதான் விழும் அண்ணாத்த.. சீமானை கலாய்த்த
கடையில் இருந்து இரும்பு உள்ளிட்ட பொருட்களை சரக்கு வாகனத்தில் டெலிவரி செய்யும் பணியை சுனில் நாம்தேவ் செய்து வந்தார்.

இரும்பு கம்பி ‛டெலிவரி’
இந்நிலையில் 2021 ஜூலை மாதம் 16ல் சரக்கு வாகனத்தில் இரும்புகம்பிகளை ராஜ்நகரில் உள்ள வாடிக்கையாளரிடம் வழங்கி வரும்படி டிரைவர் சுனில் நாம்தேவுக்கு, உரிமையாளர் சுதிர் உத்தரவிட்டார். மேலும் வாடிக்கையாளர் வழங்கும் 6 லட்சத்து 65 ஆயிரத்தை வாங்கி வரும்படியும் அறிவுறுத்தினார்.

ரூ.6.65 லட்சத்துடன் மாயம்
இதையடுத்து சுனில் நாம்தேவ் சரக்கு வாகனத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு சென்று இரும்பு கம்பியை டெலிவரி செய்தார். பணத்தையும் பெற்று கொண்டார். அதன் பிறகு அவர் கடைக்கு திரும்பவில்லை. கடை அருகே சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு மாயமானார். இதையடுத்து ரூ.6 லட்சத்து 65 ஆயிரம் பணத்தோடு சுனில் ஓடிவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.

உடல் அடக்கம்
இதற்கிடையே 2021 ஜூலை 24ல் ஹொடகர் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இது மாயமான சுனில் நாம்தேவ் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் உடலை மீட்டு அடக்கம் செய்தனர். முன்னதாக அடக்கம் செய்யப்பட்ட உடல் மாயமான சுனில் தானா என்பதை உறுதி செய்வதற்காக டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது.

ஒத்துப்போகாத டிஎன்ஏ
இந்த பரிசோதனையில் சுனிலின் குடும்பத்தினரின் டிஎன்ஏவும், புதைக்கப்பட்ட உடலின் டிஎன்ஏவும் வெவ்வேறானவை என்பது தெரியவந்தது. இதனால் சுனில் எங்கு சென்றார் என்பதில் சந்தேகம் எழுந்தது. மேலும், அடக்கம் செய்யப்பட்ட நபர் யார், அவர் எப்படி இறந்தார் என்பதிலும் குழப்பம் நீடித்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிருடன் திரிந்தவர் கைது
இந்நிலையில் மே 3ல் சுதிர் சுதிர் ஷதார்பூரில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது ஹதா டிகாடா பகுதியில் வைத்து சுனிலை அவர் பார்த்தார். கோபத்தின் உச்சிக்கு சென்ற சுதீர், பணத்தை வழங்கும்படி கேட்டார். அதற்கு சுனில் மறுப்பு தெரிவித்தார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி சுனில் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இறந்ததாக கருதப்பட்ட சுனில் 9 மாதங்களுக்கு பின் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

காரணம் என்ன?
சம்பவம் குறித்து சுனிலிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ‛‛எனக்கு பணத்தேவை இருந்தது. இதனால் பணத்துடன் ஓடினேன். 9 மாதங்களாக பல்வேறு கிராமங்களில் வசித்தேன். முன்னதாக நான் வீட்டுக்கும் செல்லாததால் நான் இறந்ததாக குடும்பத்தினர் நினைத்து அடையாளம் தெரியாத உடலை புதைத்துள்ளனர்'' என்றார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.