குரங்குகளுக்கு உணவு... 10 ஆண்டுகளில் ரூ. 200 கோடி ஊழல் - விசாரணை தேவை: மேனகாகாந்தி
டெல்லி : டெல்லியில் குரங்குகளுக்கு உணவு அளிக்க 10 ஆண்டுகளில் ரூ. 200 கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகாகாந்தி வலியுறுத்தியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் குரங்குகள் தொல்லை அதிகமானதைத் தொடர்ந்து, கடந்த 2007ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதாவது, ‘டெல்லியில் சுற்றித் திரியும் குரங்குகளைப் பிடித்து, ஹரியானாவில் உள்ள, 'அசோலா - பட்டி வனவிலங்கு சரணாலயத்தில் விட வேண்டும். அவற்றுக்கு தேவையான உணவுகளை, வனத்துறையினர் தர வேண்டும்' என அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, அப்போதைய டெல்லி முதல்வரான ஷீலா தீட்சித் குரங்குகளுக்கு உணவு அளிப்பதற்காக ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், இந்த தொகை போதாது என வன விலங்குகள் நல ஆர்வலரான மேனகா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். எனவே, ஒதுக்கீட்டுத் தொகையை ஆண்டிற்கு ரூ. 20 கோடி என உயர்த்தியது டெல்லி அரசு.
இந்நிலையில், குரங்குகளுக்கு தேவையான பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் சப்ளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு, டெல்லி மாநில அரசு 1 கோடி ரூபாய்க்கும் மேல் பாக்கி வைத்துள்ளதால் அவர்கள் தங்களின் சப்ளையை நிறுத்தி விட்டனர். இதனால், 16 ஆயிரம் குரங்குகள் பட்டினியால் வாடுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, குரங்குகளுக்கு உணவு அளிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் நடந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகாகாந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, குரங்குகள் அடைக்கப்பட்ட இடத்தை சென்று பார்வையிட்டேன். அது, சரணாலயமே அல்ல; அங்கு மரங்களும் இல்லை. குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த இடம் தரிசு நிலம் என்பதால், அங்கு இயற்கையான உணவுகள் கிடைக்க வாய்ப்பு இல்லை.
குரங்களுக்கு உணவு அளிப்பதற்காக, 10 ஆண்டுகளில், 200 கோடி ரூபாயை, டெல்லி மாநில அரசு ஒதுக்கியும், அந்தப் பணம் எல்லாம் எங்கு சென்றது என, தெரியவில்லை. அந்தப் பணத்திற்கு, புதிய சரணாலயமே உருவாக்கி இருக்கலாம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போதிய உணவு கிடைக்காததால் கடந்தாண்டு மட்டும் ஆயிரக்கணக்கான குரங்கள் பலியானதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.