For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்

Google Oneindia Tamil News

எதிர்பாராதது, பிரமிக்கத்தக்கது, பேரலை, சுனாமி, புதிய வரலாறு.. என்றெல்லாம் பல்வேறாக வர்ணிக்கப்பட்டிருக்கிற பாஜகவின் தேர்தல் வெற்றி, 30 ஆண்டுகளாக நடக்காத ஒரு அரசியல் அதிசயம்தான். லோக்சபையில் ஒரு தனிக் கட்சி மெஜாரிட்டி பலம் பெறுவது என்பது இப்போதுதான் நடந்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 336 இடங்களைப் பெற்றிருக்கிற பாஜக தானாகப் பெற்றுள்ள இடங்கள் 282.

இந்த வெற்றி சாதாரணமாக அடையப்பட்டது அல்ல. காங்கிரஸ் மீது ஏற்பட்ட அதிருப்தி ஓட்டு இது என்று இதை சாதாரண அரசியல் நிகழ்ச்சியாகவும் இதைத் தள்ளி வைத்து விட முடியாது. காங்கிரஸ் அரசு மீதான அதிருப்தி மட்டுமின்றி, பாஜக மீது ஏற்பட்டுள்ள பெரும் நம்பிக்கையும் இந்த வெற்றிக்குக் காரணம். காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான அதிருப்தி, பாஜக கூட்டணிக்கு ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பை தந்திருக்கலாம் - அவ்வளவுதான்.

Modi's responsibilties

ஆனால் நடந்திருப்பது என்ன..? உத்திரப் பிரதேசத்தில் உள்ள 80 இடங்களில் 71 இடங்களைப் பாஜக வென்றிருக்கிறது. பீஹாரில் நிதீஷ் குமார் கூட்டணியின்றி 22 இடங்களை பாஜக பெற, நிதீஷ் குமார் 2 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறார். ராஸ்தானில் 25 இடங்களையும், குஜராத்தில் உள்ள 26 இடங்களையும் பாஜகவே கைப்பற்றியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்திலும் இதே மாதிரி வெற்றி. டெல்லியில் உள்ள 7 இடங்களும் பாஜகவுக்கே - என்கிற அளவுடன் பாஜகவின் சுனாமி வெள்ளம் தடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அந்த வெள்ளம் பாயவில்லை.

இதற்கெல்லாம் ஒரே காரணம் நரேந்திர மோடி. அவரைப் பிரதம மந்திரி பதவிக்கான வேட்பாளராக பாஜக தேர்தலைச் சந்தித்தால், அவரே தேர்தல் பிரச்சினையாக உருவெடுக்க அவரைச் சுற்றியே எதிர்க்கட்சிகளின் பிரசாரம் நடக்க, அது இறுதியில், பாஜகவின் வெற்றியில் முடியும் என்று நாம் 2009லிருந்து பலமுறை கூறியும் எழுதியும் வந்திருக்கிறோம். அதேபோல முடிவுகள் அமைந்திருப்பது நமக்குத் திருப்தியைத் தருகிறது.

மோடியின் நெருப்புக்கு நிகரான நேர்மை, அலட்சியம் புகாத நிர்வாகத் திறன், முனைப்பு மிகுந்த உழைப்பு போன்றவை தேசம் முழுவதும் இப்பொழுது தெளிவாகியது. அவருடைய வாதத்திறன், பேச்சில் தெளிவு, அவதூறுகளை கால் தூசுக்கு இணையாக ஊதித் தள்ளி விடுகிற வழிமுறை எல்லாம் மக்களைக் கவர்ந்துள்ளன. அவருடைய பேச்சில் முழு நம்பிக்கை பிறந்துள்ளது. சொல் ஒன்று செயல் வேறு என்பது இவரிடம் இருக்காது என்ற எண்ணம் நாட்டில் நன்றாகப் பரவியுள்ளது. இதை மோடி உணர்ந்திருப்பார் என்று நம்புகிறோம்.

விளம்பரங்களினால் மக்கள் கவரப்படுவது உண்டு. பொய் வாக்குறுதிகளினால் மக்கள் மயங்குவது உண்டு. ஜாதியின் காரணமாக மக்கள் ஈர்க்கப்படுவது உண்டு. ஆனால் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், மோடி என்கிற தனி மனிதனின் மீது ஏற்பட்ட நம்பிக்கைதான், மக்களை இந்த வெற்றியை பாஜக கூட்டணிக்கு அளிக்கச் செய்திருக்கிறது.

இந்த நம்பிக்கை வீண் போகாமல் பார்த்துக் கொள்கிற பெரும் பொறுப்பு, ஒரு சுமையாக மோடி மீது விழுந்திருக்கிறது. அனைவரையும் உள்ளடக்குகிற முன்னேற்றத்தின் மூலம், சுமையாக ஆரம்பிக்கிற இந்த பொறுப்பை கிரீடமாக மாற்றிக் கொள்கிற வாய்ப்பு அவருக்குக் கிட்டட்டும் என்று வாழ்த்துகிறோம்.

English summary
Thuglak editorial has welcomed the victory of Modi and has listed Modi's responsibilities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X