For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் பனிச்சரிவில் உயிரிழந்த வீரர்களின் சடலங்கள்... 4 தமிழக வீரர்கள் உடல்கள் சென்னை வந்தது

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 ராணுவ வீரர்களின் உடல்கள் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கிருந்து 4 தமிழக வீரர்களின் உடல்கள் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் முப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பகுதியில் கடந்த 3-ந் தேதி பாதுகாப்பு பணியில் இருந்த 10 ராணுவ வீரர்கள் பனிப்பாறை சரிவில் சிக்கினர். அவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. 2 நாட்களுக்குப் பின்னர் 10 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் ராணுவ வீரர்களின் உடல்களைத் தேடும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் உயிருடன் மீட்கப்பட்டார்.

கோமா நிலையில் இருந்த ஹனுமந்தப்பா உடனடியாக டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. டெல்லியில் உயிரிழந்த ஹனுமந்தப்பாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் எஞ்சிய 9 ராணுவ வீரர்களின் உடல்களும் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.ஏழுமலை, எஸ்.குமார், கணேசன், ராமமூர்த்தி உள்ளிட்ட 4 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.

தொடர்ந்தும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் 9 பேரின் உடல்களையும் டெல்லி கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் லே-வில் இருந்து நேற்று 9 வீரர்களின் உடல்களும் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது.

டெல்லி பாலம் விமான நிலையத்தில் 9 வீரர்களின் உடல்களுக்கும் ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Mortal remains of 9 Siachen Bravehearts in Delhi

தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர்களில் 3 பேரின் உடல்கள் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் முப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் வேலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஏழுமலையின் உடல், சென்னை கடலோர காவல்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, தென்பிராந்திய ராணுவ பொறுப்பு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சக்பீர்சிங் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஏழுமலையின் உடல் அவரது சொந்த ஊரான வேலூருக்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராணுவ வீரர் ராமமூர்த்தியின் உடல் பெங்களூரில் இருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் மதுரையைச் சேர்ந்த கணேசன் மற்றும் தேனியைச் சேர்ந்த குமார் ஆகியோரின் உடல்கள், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் செல்லூர் ராஜூ , மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரது உடல்களும் சாலை வழியாக அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல்ப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் இன்று நல்லடக்கம் நடைபெற உள்ளது.

English summary
Mortal remains of 9 soldiers who lost their lives in Siachen Avalanche brought to Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X