அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகள் முடக்கம்- மமதா பரபரப்பு புகார்! மத்திய அரசு மறுப்பு!
கொல்கத்தா: அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கிவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். ஆனால் அன்னை தெரசா மிசினரியின் வங்கி கணக்குகளை முடக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மமதா பானர்ஜி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், கிறிஸ்துமஸ் நாளில் அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பாஜகவுக்கு எதிராக காங். அல்லாத கூட்டணிக்கு திமுக மீண்டும் எதிர்ப்பு- மமதா முயற்சிக்கு பின்னடைவு?

22,000 பேர் பாதிப்பு
இந்த மிசினரியின் 22,000 நோயாளிகள், பணியாளர்கள் உணவும் மருந்துகளும் இல்லாமல் தவிக்கின்றனர். சட்டம் தமது கடமையை செய்யத்தான் வேண்டும். ஆனால் மனிதாபிமானம் என்பது அதைவிட மேலானது என பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார்.

மமதா ட்வீட்டால் விவாதம்
மமதா பானர்ஜியின் இப்புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

சிபிஎம் கருத்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.கே.மிஸ்ரா தமது ட்விட்டர் பக்கத்தில், அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகளையும் கையிருப்பு பணத்தையும் கூட மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது. இந்த மிசினரியில் 22,000 நோயாளிகள், பணியாளர்கள் உணவும் மருந்தும் இல்லாமல் இருக்கின்றனர் என பதிவிட்டுள்ளார். இதேபோல் பல்வேறு கிறிஸ்தவ நிறுவனங்களும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு விளக்கம்
ஆனால் மமதா பானர்ஜியின் இந்த புகார் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான அனுமதியை புதுப்பிக்கக் கோரும் Missionaries of Charity-ன் விண்ணப்பம் டிசம்பர் 25-ந் தேதி நிராகரிக்கப்பட்டது. வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான சட்டவிதிகளை பின்பற்றாத காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து Missionaries of Charity-யிடம் இருந்து விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி எந்த கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை. Missionaries of Charity-க்கான அனுமதி காலம் அக்டோபர் 31-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இருப்பினும் இந்த அனுமதி காலம் டிசம்பர் 31-ந் தேதி வரை செல்லத்தக்கதாகும். Missionaries of Charity-ன் எந்த ஒரு வங்கி கணக்கையும் மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.