மூதாட்டிக்கு பேய் விரட்டிய மந்திரவாதி... மத்திய பிரதேச மருத்துவமனையில் வினோதம்... நடந்தது என்ன?
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டிக்கு மந்திரவாதி பேய் ஓட்டினார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் டாக்டர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் காசியா பாய் அகிர்வார் (வயது 65). இவர் உடல்நலக்குறைவால் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

பேய் விரட்டிய மந்திரவாதி
இதையடுத்து அவருக்கு பேய் பிடித்து இருப்பதாக சிலர் கூறினர். எனவே அவரது குடும்பத்தினரால் பேய் விரட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மந்திரவாதி மருத்துவனைக்கு வந்தார். மூதாட்டி மருத்துவமனை படுக்கையில் இருக்க மந்திரவாதி, சில மந்திரங்களை கூறி தண்ணீர் எடுத்து மூதாட்டியின் மீது தெளித்தார்.

மருத்துவமனை ஊழியர்கள் எதிர்ப்பு
இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்து மருத்துவமனை ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மந்திரவாதியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து குடும்பத்தினர் மருத்துவமனை ஊழியர்களுடன் பேசினர். பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதால் தான் நோய் குணமாகவில்லை. இதனால் பேய் விரட்டுவது அவசியம் என கூறினர். பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதால், இந்த சடங்கு செய்வது அவசியம் என்று அவர்கள் வாதிட்டனர். இதனை மருத்துவமனை ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

டாக்டர் கூறுவது என்ன?
இதுபற்றி மாவட்ட மருத்துவமனை டாக்டர் பார்கவா கூறுகையில், ‛‛திருமண விழாவில் பங்கேற்ற மூதாட்டி உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவர்கள் மந்திரவாதியை அழைத்து வந்து சில சடங்குகளை செய்தனர். இதை தடுத்த ஊழியர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மந்திரவாதியை வெளியே அனுப்பினோம்'' என்றார்.

நோட்டீஸ் அனுப்ப முடிவு
இதற்கிடையே மந்திரவாதி பேய் ஓட்டுவது உள்ளிட்ட செயல்களை யாரோ வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுபற்றி மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தலைமை அதிகாரி நீராஜ் சாரி கூறுகையில், ‛‛மருத்துவமனையில் இத்தகைய செயல் நடக்கக்ககூடாது. பணியில் இருந்த டாக்டர்களிடம் விளக்கம் கேட்ட நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும்'' என்றார்.