For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூடு விழாவை நோக்கி நகருகிறதா மும்பை புல்லட் ரயில் திட்டம்?

Google Oneindia Tamil News

- ஆர்.மணி

மும்பை: நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான மும்பை - அஹமதாபாத் புல்லட் ரயில் திட்டம் மூடு விழாவை காணப் போகிறதா என்ற ஐயப்பாடு இந்த விவரம் பற்றி அறிந்தவர்கள் மத்தியில் தற்போது எழுந்திருக்கிறது.

2017 செப்டம்பரில் இந்திய பிரதமர் மோடிக்கும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வுக்கும் இடையில் புல்லட் ரயில் திட்டம் விடுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பந்தரா காம்ப்ளக்சில் தொடங்கும் இந்த திட்டம் குஜராத் மாநிலம் சபர்மதியில் முடிகிறது. 508 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த திட்டத்துக்கு ஆகும் மொத்த செலவு 1.08 லட்சம் கோடி (ஒரு கோடியே 8 லட்சம்) இந்திய ரூபாய்கள் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது. இதில் 88,000 கோடி ரூபாயை மிகக் குறைந்த வட்டிக்கு, அதாவது, 0.1 சதவிகித வட்டிக்கு ஜப்பான் வழங்குகிறது.

mumbai bullet train project may be shelved?

ஜப்பானிய வங்கி ஒன்று இந்திய மத்திய அரசு மூலம் இந்த தொகையை வழங்குகிறது. ஆகவே இந்த தொகையை மத்திய அரசு வழங்குகிறது என்பதுதான் இதற்கான பொருள். 5,000 ரூபாய் கோடி ரூபாயை மஹாராஷ்டிர அரசு வழங்குகிறது. இந்த திட்டத்துக்காக நிலம் கையகப் படுத்தும் பணிகள் ஏறத்தாழ 50 சதவிகிதம் தற்போது நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த புல்லட் ரயில் திட்டம் தான் இனிமேல் நிறைவேறுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கிறது.

புல்லட் ரயில் திட்டத்தை ஆரம்பம் முதலே சிவ சேனா எதிரத்து வந்திருக்கிறது. திட்டம் கையெழத்தான காலகட்டத்திலேயே, அன்றைய பாஜக முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசில் துணை நிதியமைச்சராக இருந்த சிவ சேனாவின் தீபக் கேசர்கர் இதனை கடுமையாக எதிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதரங்கள் புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப் படுவதாக சிவ சேனா கட்சி கூறுகிறது. தற்போது மஹராஷ்ர அரசில் நெருக்கடி ஏற்பட்டபோது இந்த விவகாரம் பேசப்பட்டது. கடந்த வாரம் மஹாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பது சம்மந்தமாக சிவேசேனா - தேசீய வாத காங்கிரஸ் (என்சிபி) - காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தீகப் கேசர்கர், "புல்லட் ரயில் திட்ட்டத்தை விட முக்கியமானது விவசாயிகளின் வாழ்கை. ஆரம்பம் முதலே மஹாராஷ்டிர அரசு இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கக் கூடாது என்றே நான் எதிர்த்து வந்திருக்கிறேன்" என்று கூறினார்.

"மஹாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சிவசேனா வின் உத்தவ் தாக்கரே பதவியேற்றவுடன் சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் கூட்டணி அரசு ஒரு குறைந்த பட்ச செயற் திட்டத்தை வெளியிட இருக்கிறது. அதில் முதல் அறிவிப்பாக மஹாராஷ்டிர அரசு புல்லட் ரயில் திட்டத்துக்காக கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கும் 5,000 ரூபாய் கோடி ரூபாய் விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்காக ஒதுக்கப் படுகிறது என்ற அறிவிப்பு வெளியிடப் படவிருப்பதாக ஒரு உயர் ஐஏஎஸ் அதிகாரி என்னிடம் தெரிவித்தார். வேண்டுமானால் மத்திய அரசு மஹாராஷ்டிர அரசின் பங்கையும் சேர்த்து கொடுத்து புல்லட் ரயில் திட்டத்தை செயற்படுத்த விரும்பினால் செயற்படுத்திக் கொள்ளட்டும் என்பதே புதிய அரசின் கொள்கையாக இருக்கும் என்றே தான் அறிவதாகவும் அவர் தெரிவித்தார்" என்று கூறுகிறார் மும்பையில் உள்ள மூத்த பத்திரிகையாளர் அலோஷியஸ் ஃபெரைரா.

mumbai bullet train project may be shelved?

புல்லட் ரயில் திட்டம் தவிர வேறு இரண்டு முக்கிய திட்டங்களின் தலைவிதியும் என்னவாகப் போகிறது என்ற ஐயப்பாடும் தற்போது எழுந்திருக்கிறது. நானார் எண்ணைய் சுத்திகரிப்பு திட்டம் மற்றும் மும்பை மெட்ரோ ரயில் ஷெட் திட்டம் ஆகிய திட்டங்கள்தான் இவை இரண்டும்.
மஹாராஷ்டிராவின் ரத்தினகிரி யில் 3 லட்சம் கோடி ரூபாயில் இந்த எண்ணைய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டம் செயற்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆறு கோடி டன் கொள்ளளவு கொண்டது இந்த திட்டம். இந்தியாவின் மூன்று பொது துறை நிறுவனங்களும், சவுதி அரேபியாவின் ஆம்கோ என்ற நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்த முதலில் திட்டமிடப் பட்டது. ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் சிவ சேனா இந்த திட்டத்துக்கு காட்டிய எதிர்ப்பின் காரணமாக திட்டம் கைவிடப் பட்டது. இருந்த போதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ஃபட்நாவிஸ் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்துக்கு புத்துயிர் கொடுப்பேன் என்று மறைமுகமாக தெரிவித்தார்.
இந்த திட்டம் இனிமேல் என்ன கதியாகப் போகிறது என்று தெரியவில்லை.

மூன்றாவதாக இருப்பது மும்பை மெட்ரோ ரயில் ஷெட்டுக்காக பல நூறு மரங்களை வெட்டும் 'ஆரே மெட்ரோ கார் ஷெட்' திட்டம். இந்த ஷெட் அமையவிருக்கும் இடத்தில் இருந்த ஏராளமான மரங்கள் ஏற்கனவே வெட்டப் பட்டுவிட்டன. உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்திய தாக்கரே இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார். உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்த விட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று ஃபட்நாவிஸ் உறுதியாக கூறி விட்டார். ஆனால் உத்தவ் தாக்கரே பதவியேற்ற பின்னர் இந்த திட்டம் நிறுத்தப் படும் என்ற கருத்தும் தற்போது நிலவிக் கொண்டிருக்கிறது.

mumbai bullet train project may be shelved?

இந்த திட்டத்தை சுற்றுப்புற சூழல் நிபுனர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மும்பையின் நுரையீரல் போன்றது பல நூற்றுக்கணக்கான மரங்களை கொண்ட இந்த பகுதி. இதனை ஒரு 'சின்ன அடர்த்தியான காடு' என்றே சுற்றுப்புறவியலாளர்கள் சொல்லுகின்றனர். ஆனால் உச்ச நீதிமன்றமே மரங்களை வெட்டித்தள்ள அனுமதி அளித்து விட்ட நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.

மேலே சொன்ன இந்த மூன்று திட்டங்களும், குறிப்பாக புல்லட் ரயில் மற்றும் ரத்தினகிரி எண்ணெய் சுத்திகரிப்பு திட்டங்களின் தலையெழுத்து அகில இந்திய அளவிலேயே உற்று நோக்கிப் பார்க்கப் படுகிறது. ஏனெனில் இந்த இரண்டு திட்டங்களிலும் இரு வெளிநாடுகள் - ஜப்பான் மற்றும் சவுதி அரேபியா - சம்மந்தப்பட்டிருக்கின்றன. இந்த திட்டங்கள் நடுவில் கைவிடப்படுவது இந்தியாவில் அந்நிய முதலீடுகளை பாதிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்தியாவின் நம்பர் ஒன் 'உற்பத்தி மாநிலம்' மஹாராஷ்டிரா. இந்தியாவின் பணக்கார மாநிலம். இந்திய பொருளாதாரத்தின், நிதி ஆதாரங்களின் தலைநகரம் மஹாராஷ்டிரா. ஆகவே மஹாராஷ்டிராவில் உருவாகும் எந்தவோர் பொருளாதார மற்றும் அந்நிய முதலீட்டு சிக்கலும் ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றே கணிக்கப் படுகிறது.

ஆனால் அதே சமயம் விவசாயிகள் தற்கொலையில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாகவும் மஹாராஷ்டிரா விளங்குவதால் இந்த விவகாரங்களை நுட்பமாக கையாள வேண்டிய நிர்ப்பந்தமும் மஹாராஷ்டிராவில் புதியதாக அமையவிருக்கும் அரசுக்கு இருக்கின்றது. நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

English summary
Will SS-NCP-Congress govt in Maharashtra shleve the Mumbai Bullet train project?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X