• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறைந்து வரும் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்: சென்சஸ் தகவல்கள்

By Mathi
|

சென்னை: நான்காண்டு கால தாமதத்துக்குப் பிறகு மத வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் பரபரப்புகளைக் கிளப்பி இருக்கின்றன.

"இந்துக்களின் எண்ணிக்கை வீழ்ச்சி; முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு' என பெருவாரியான ஏடுகள் தலைப்பிட்டிருக்கின்றன. "இதோ நம் மதத்துக்கு ஆபத்து" என, பிறரை பூச்சாண்டி காண்பித்து, மதங்களை வைத்து அரசியலில் குளிர்காயும் சக்திகள் சமூக வலைதளங்களில் விஷ வித்துகளைத் தூவுவதற்கு இந்த விவரங்களை மேற்கோள் காண்பிக்கின்றன.

Muslim population growth slows

உணர்ச்சிகளுக்கு இடம் தராமல், ஆய்வுப்பூர்வமாக இந்தப் புள்ளிவிவரங்களை அலசி இருக்கிறது இந்து (ஆங்கிலம்) நாளேடு.

2001 முதல் 2011 வரையிலான பத்தாண்டுகளில் முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி என்பது, அதற்கு முந்தைய பத்தாண்டுகளின் வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிடுகையில் குறைந்திருக்கிறது என்பது இந்துவின் தலைப்புச் செய்தி.

பிற மதத்தவரின் வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்களின் வளர்ச்சி வீதம் என்பது சற்றே அதிகம். ஆனால், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அது குறைவு. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக, முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பது இந்தப் பத்தாண்டுகளில் தான்!

உதாரணமாக, 1961-ல் முஸ்லிம் மக்கள் தொகை 4.69 கோடி.

அதற்கு முந்தைய பத்தாண்டுகளை ஒப்பிடுகையில்,இது 32.49 சதவீதம் அதிகம்.

2001-ல் முஸ்லிம் மக்கள் தொகை 13.82 கோடி.

அதற்கு முந்தைய பத்தாண்டுகளைவிட 29.52 சதவீதம் அதிகம்.

தற்போதைய வளர்ச்சி விகிதம் 24.6 சதவீதம்.

வளர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்படுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை.

முஸ்லிம்களின் மக்கள் தொகை தற்போது 17.2 கோடி

ஆனால் வளர்ச்சி விகிதம் என்பது 14.2 சதவீதம்.

கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சி, குழந்தைப் பேற்றைக் கட்டுப்படுத்தி இருக்கிறது இதன் மூலம் புலனாகிறது.

கடந்த 2001-ல் 82.76 கோடியாக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை, தற்போது 96.63 கோடியாக அதிகரித்திருக்கிறது.

சதவீத அடிப்படையில் இது 16.76 சதவீத வளர்ச்சி.

முந்தைய பத்தாண்டுகளைக் காட்டிலும் (19.92 சதவீதம்) இது சற்றே குறைவு.

இந்த நாட்டின் பெரும்பான்மையாக வாழும் இந்துக்கள், சிறுபான்மை மக்களாகி விடுவர் என்று மதவாத அமைப்புகள் கிளப்பிவரும் பீதியில் உண்மை இல்லை என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன.

அதேபோல, மற்றொரு மாயையும் இந்த விவரத்தின் மூலம் தகர்க்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அமைப்புகள், தொண்டு செய்வதன் நோக்கமே மதமாற்றம்தான், ஆசைவார்த்தைகள் கூறி மதமாற்றத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் ஈடுபடுகின்றன என்ற வாதத்தில் சாரமில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

மொத்த மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் நிலையில் மாற்றமில்லை, பத்தாண்டுகளுக்கு முன்பும் அவர்களின் எண்ணிக்கை 2.3 சதவீதம்தான், இப்போதும் அதே தான். மாற்றம் ஏதும் இல்லை என்று சொல்லி இருக்கிறது மத்திய அரசு.

தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எண்ணிக்கை கூடவில்லை என்றதும் புதிய வாதம் ஒன்று கிளப்பிவிடப்படுகிறது. மதம் மாறியோர்கூட, இட ஒதுக்கீடு பறிபோய்விடும் என்பதால் தங்களின் புதிய மதத்தைச் சொல்வதில்லை என்பதே அது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு வேண்டுமானால் இந்த வாதம் ஒரு வேளை பொருந்தலாம். அப்படியானால், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மதம் மாறவே இல்லை என்றுதானே பொருள்?

இந்துக்களோ, முஸ்லிம்களோ அல்லது பிற மதத்தவரோ மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் இயன்றளவு கவனம் செலுத்தி இருக்கிறார்கள் என்பது இந்தப் புள்ளிவிவரம் காட்டும் உண்மை.

வளரும் சமூகத்தில் இரு வரவேற்கப்பட வேண்டிய,ஆரோக்கியமான முன்னேற்றம். அடுத்த இருபதாண்டுகளில் சீனத்தை விஞ்சிவிடுவோம், உலகிலேயே மக்கள்தொகை அதிகம் உள்ள நாடாக இந்தியா மாறும் என்ற அச்சம், ஆட்சியாளர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

எல்லோருக்கும் கல்வி, உணவு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் குடியிருப்பு வசதிகளைச் செய்து தர வேண்டிய மிகப்பிரம்மாண்டமான சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்தியா என்ற கேள்விக்குப் பதிலின்றி பொருளாதார வல்லுநர்களும் சமூக விஞ்ஞானிகளும் கைபிசைந்து நிற்கின்றனர்.

வறுமையும் கல்வியில் பின்தங்கிய நிலையிலும் இருக்கிற பீகார் போன்ற மாநிலங்களில் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதும், தமிழ்நாடு, கேரளா போன்ற சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் முன்னேறிய மாநிலங்களில் பிறப்பு விகிதம் தேசிய சராசரியைவிட குறைவாக இருப்பதும் கவனிக்கத்தக்க அம்சங்கள்.

அதாவது, பிறப்பு விகிதத்தை மதங்களும் அவை சார்ந்த நம்பிக்கைகளும் தீர்மானிப்பதில்லை. மாறாக, அவர்கள் வாழும் பகுதிகளில் நிலவும் சமூக, பொருளாதார சூழல்கள்தான் முடிவுசெய்யும் காரணிகளாக அமைகின்றன.

தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமான குழந்தைப் பேறு இருப்பதை முஸ்லிம்களில் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட சமூகத்தவரிடமும் காணலாம்

இந்த விவரங்களில் மகிழத்தக்க மற்றொரு விவரம், ஆண்-பெண் பிறப்பு விகிதத்தில் உள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம். 2001-ம் ஆண்டு விவரப்படி, ஆயிரம் ஆண் குழந்தை பிறந்தால், முஸ்லிம்களில் 936 பெண் குழந்தைகள், இந்துக்களில் 931 பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்த நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.தற்போது, முஸ்லிம்களில் 951 பெண் குழந்தைகள், இந்துக்களில் 939 பெண் குழந்தைகள் பிறப்பதாகவும் வெளியான விவரம், பாலின சமத்துவத்தை நோக்கி சமூகம் செல்கிறது, பெண் குழந்தை இறப்பு தடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம் வளர்ச்சி விகிதங்கள் சற்றேறக்குறைய ஒரே அளவில் வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. அடுத்துவரும் பத்தாண்டுகளில் ஒன்றோடொன்று சமமாக வளர்வது வெளிப்படையாகத் தெரியவரும்.

இதைவிட அதிக விவரங்கள் வெளியிடப்படாமல் இருக்கின்றன. மத வாரியாக, ஜாதி வாரியாக அடிப்படைக் கல்வியும் உயர் கல்வியும் பெற்றோர் எத்தனை சதவீதம், வறுமைக்கோட்டில் உழல்வோர் மற்றும் பெரும் செல்வந்தர்கள் எத்தனை பேர், சொந்த வீடுகளில் வசிப்போர், வாகனம் வைத்திருப்போர், நல்ல சுகாதார வசதியைப் பெற்றிருப்போர் எத்தனை பேர் என்ற விவரம் ஆட்சியாளர்களின் கைகளில் இருக்கின்றன.

அவற்றை வெளியிட்டால், இதுவரை மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்த அரசுகளின் தோல்வியும் அம்பலமாகும். மக்களின் கேள்விக்கணைகளும் கூர்மையாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
India’s Muslim population is growing slower than it had in the previous decades, and its growth rate has slowed more sharply than that of the Hindu population, new Census data show.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more