கர்நாடகாவை கன்னடர்களே ஆள வேண்டும் என நான் சொல்லவே இல்லை... நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்

பெங்களூரு: கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆள வேண்டும் என கூறியதாக வெளியான தகவலுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபகாலமாக மத்திய அரசுக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
பத்தரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை, தாஜ்மஹால் உத்தரப்பிரதேச சுற்றுலாப் பட்டியலில் இருந்து நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களின் போதும் அரசை கடுமையாக விமர்சித்தார்.

கன்னடர்கள்தான் ஆளவேண்டும்
இந்நிலையில் பெங்களூரு பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

தகுதி உள்ள ஒரு நபர்
தனது கருத்து குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் டிவிட்டரில் விளக்கம் அளித்தார். அதாவது தகுதி வாய்ந்த ஒருவர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே ஒரு இந்தியனாக தனது நிலைப்பாடு என நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்தார்.

வகுப்புவாத அரசியல்..
கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்பட எந்த மாநிலமாக இருந்தாலும் மிகவும் மோசமான பிரித்தாளும் மற்றும் வகுப்புவாத அரசியல்வாதிகளை வரும் தேர்தல்களில் வெற்றி பெற விடமாட்டோம் என்றே பெங்களூருவில் கூறினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

திரித்து பிரசாரம்
தன்னுடைய பேச்சை திரித்து பிரசாரம் செய்து தனக்கெதிராக வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம் பயம் மற்றும் விரக்தி மனநிலையையே உறுதிப்படுத்துகிறீர்கள் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.