ராஜபக்சேவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம்... மும்பையில் சல்மான் கான் வீட்டை முற்றுகையிட்ட நாம் தமிழர்!
மும்பை: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.
இம்மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சமீபத்தில் இலங்கை சென்று பாலிவுட் நடிகர் சல்மான்கான் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட விவகாரம் தொடர்பாக சல்மான்கான் மன்னிப்பு கோரும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் சல்மான் கான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.